Published:Updated:

"எல்.ஐ.சி... பொன்முட்டையிடும் வாத்து, பேராசைப்பட்டால்?" - சிறப்புப் பார்வை

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

''வெறும் ரூ.5 கோடி முதலீட்டைக் கொண்டு 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.ஐ.சி., தற்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.5 கோடி புது பாலிசிகளை ஈட்டும் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பு விமர்சனத்துக்கு உள்ளானதோ இல்லையோ, 'எல்.ஐ.சி.யில் அரசுக்குச் சொந்தமான பங்கில் ஒரு பகுதி ஐ.பி.ஓ மூலம் தனியாருக்கு விற்கப்படும்' என்ற குறிப்பு விமர்சனத்துக்குள்ளானது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃப்ராங்கோ, நம்மிடம் சொன்னதாவது:

"இந்திய அரசு பெரிய கட்டுமான திட்டங்களைக் கொண்டுவரும்போதும், நெருக்கடியான பொருளாதார நிலை ஏற்படும்போதும் அதிலிருந்து விடுபட முதலில் உதவிக்கு வருவது எல்.ஐ.சிதான். கடந்த காலத்தில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஐ.டி.பி.ஐ வங்கி கடனில் மூழ்க இருந்தபோதுகூட எல்.ஐ.சிதான் அதைக் காப்பாற்றியது. எல்.ஐ.சியிடம் ஐ.டி.பி.ஐ வங்கியின் 7 - 7.5% பங்குகள் இருந்தபோதும், அதன் 51 சதவிகிதத்தை வாங்க ரூ.10,000 கோடி முதல் ரூ.13,000 கோடி வரை முதலீடு செய்தது.

ஐ.டி.பி.ஐ வங்கி என்று கிடையாது; பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு என்று வந்தால், எல்.ஐ.சி அதில் அதிக அளவில் முதலீடு செய்யும். இதில் ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவனங்களும் அடக்கம். அரசுப் பத்திரங்களிலும், பங்குச் சந்தைகளிலும் எல்.ஐ.சி வருடத்துக்குச் சராசரியாக ரூ.55,000 கோடி முதல் ரூ.65,000 கோடி வரை முதலீடுகளைச் செய்கிறது.

"எல்.ஐ.சி... பொன்முட்டையிடும் வாத்து, பேராசைப்பட்டால்?" - சிறப்புப் பார்வை

2009-ம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு, பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009-லிருந்து 2012-ம் ஆண்டு வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு. ஓ.என்.ஜி.சி-ன் பங்குகளை விற்கும் முடிவு பெரிய தோல்வியில் முடிய இருந்தது. அதை எல்.ஐ.சியே வெற்றியாக மாற்றியது. இப்படி ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றி வந்த எல்.ஐ.சியை விற்பது சரியான அணுகுமுறை கிடையாது'' என்றார்.

''வெறும் ரூ.5 கோடி முதலீட்டைக் கொண்டு 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.ஐ.சி., தற்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2.5 கோடி புது பாலிசிகளை ஈட்டும் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டால், எந்தக் காலத்திலும் சரிவைச் சந்திக்காத நிறுவனமாக இருப்பது எல்.ஐ.சி மட்டும்தான். இதன் பங்கை விற்கும் அளவுக்கு என்ன தேவை வந்துவிட்டது...

'பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், தனியாரிடம் விற்றால் லாபம் கிடைக்கும்' என்று சொல்லி, தனியார்மயத்துக்குத் தாவுகிறது அரசு. 'மக்கள் வரிப் பணம் வீணாகிறது' என்று சொல்லி, அரசு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கிறது மத்திய அரசு. இவற்றில் எந்தக் குற்றச் சாட்டையாவது மறுக்க முடியுமா... எல்.ஐ.சி என்பது பொன்முட்டையிடும் வாத்து. பேராசைப்பட்டு அந்த வாத்தைக் கொல்லப் பார்க்கிறார்கள்'' என்று கொதித்துப் பேசுகிறார்கள் எல்.ஐ.சி ஊழியர்கள்.

- ஆனால், எல்.ஐ.சி பங்கு விற்பனையில் சாதகமான அம்சங்கள் பலவற்றை அடுக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அதுகுறித்து நாணயம் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > எல்.ஐ.சி ஐ.பி.ஓ... சரியா, தவறா? - ஓர் அலசல் பார்வை https://www.vikatan.com/government-and-politics/budget/merits-and-demerits-of-lic-initial-public-offering

ஏர் இந்தியா... கைமாறும் பின்னணி!

விற்பனைக்கு வருகிறது, 'மகாராஜா' என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஏர் இந்தியா. இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. 'ஏர் இந்தியா', 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' ஆகிய நிறுவனங்களின் 100% பங்குகளும் விற்கப்படவுள்ளன; ஏர் இந்தியா நிறுவனமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திவரும் ஏர் இந்தியா சாட்ஸ் (SATS) நிறுவனத்தில், ஏர் இந்தியாவின் 50% பங்குகளும் விற்கப்படவுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இந்த நிறுவனங்கள் சந்தித்துவரும் நஷ்டத்தைத் தாங்க முடியாமல். அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறதாம்!

"எல்.ஐ.சி... பொன்முட்டையிடும் வாத்து, பேராசைப்பட்டால்?" - சிறப்புப் பார்வை

கடந்த 2018-ம் ஆண்டு, ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க முடிவுசெய்து, அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. அப்போது அவற்றை வாங்க யாரும் முன்வராத சூழலில், தற்போது விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு ஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை செய்யப்படவிருக்கின்றன. இதன் முழுமையானப் பின்னணியை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > தனியார் வசமாகும் ஏர் இந்தியா! - கைமாறும் பின்னணி https://www.vikatan.com/news/general-news/some-insights-on-air-india-privatization

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு