Published:Updated:

தனியார்மயமாகிறதா இந்தியன் ஓவர்சீஸ் வங்கி? முடிவுக்கு வரும் 80 ஆண்டுக்கால பெருமை?

Indian Overseas bank ATM
Indian Overseas bank ATM ( Photo: Vikatan/ Ashok Kumar.D )

நாடு முழுவதும் சுமார் 26,000 ஊழியர்களுடன் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊழியர்கள் மட்டுமன்றி அதன் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பொதுத்துறை வங்கி, 80 ஆண்டுக்கால பாரம்பர்யம் மிக்க வங்கி, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்த வங்கி, 1937 முதல் இன்று வரை தென்னிந்தியாவின் பெருமை சேர்த்த வங்கி எனப் பெயரெடுத்தது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர்களுக்கு வர்த்தகப் பொக்கிஷமாக இயங்கிவரும் இந்த வங்கி உலகம் முழுவதும் சுமார் 3,500 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அதிகரித்த வாராக்கடன் மற்றும் லாபமின்மை போன்ற காரணங்களால் நொடித்துப் போயிருந்த இந்த வங்கிக்கு, கடந்த நிதியாண்டில் மத்திய அரசு மூலதன உதவி செய்தது.

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான பற்றாக்குறையை ஈடுசெய்ய, வெளியில் இருந்து மூலதனங்கள் பெறப்படும் என்று குறிப்பிட்டிருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் ஒரு பகுதியாக, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சில தனியார்மயமாக்கப்பட உள்ளதாக‌ அறிவித்தார் நிதி அமைச்சர்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman
Photo: AP / Manish Swarup

தனியார்வசம் போகும் நான்கு வங்கிகள்!

இந்நிலையில், தனியார்மயமாக்கப்பட வேண்டிய வங்கிகளின் பட்டியலை மத்திய அரசு முடிவு செய்து தற்போது நிதி ஆயோக் திட்டக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக டெல்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளின் பெயர்கள் அடங்கியுள்ளதாக வங்கித்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் சுமார் 26,000 ஊழியர்களுடன் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊழியர்கள் மட்டுமன்றி அதன் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரம்?

``ஒரு காலத்தில் தனியாரால் தொடங்கப்பட்ட வங்கிகள், விமான நிறுவனங்கள், பெட்ரோலிய நிறுவனங்களை அப்போதைய காங்கிரஸ் அரசு பொதுத்துறை நிறுவனங்களாக அறிவித்தது. இதன் மூலமாகத் திரட்டப்படும் மூலதனங்களால் அரசுத் துறைக்கு கணிசமான அளவு வருமானம் வந்து, அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களும் நாட்டுக்காக தங்களையே அர்ப்பணிப்பு செய்து உழைத்தனர். இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகள் உற்றுப் பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தது கவனிக்கத்தக்கது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சந்தைப்படுத்தும் முயற்சியில் செயல்பட வேண்டிய அரசாங்கம் தற்போது சாமானிய மக்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் இடையே பொருளாதாரப் போரை உருவாக்கி வருவதாகவும் பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.15 லட்சம் கோடி கடனைத் திருப்பி வசூல் செய்ய முடியாமல் அந்தக் கடனை எல்லாம் வாராக்கடன் என்று அறிவித்துவிட்டு, பின்னர் வங்கி நஷ்டத்தில் இயங்குகிறது. அதனால் வங்கி இணைப்பு மற்றும் தனியாருக்கு தாரை வார்ப்பு என்று கூறுவது எள்ளி நகையாடக்கூடிய ஒன்று. ஏழைகள் வியர்வையில் வரும் வரி வருமானத்தை அனுபவித்து ஆட்சி நடத்தும் இந்த அரசு, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கினால் மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து போகும் என்பதை மறந்து செயல்படுகிறது’’ என்று கூறுகிறார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன்.

முத்தரசன்
முத்தரசன்

மேலும், ``இந்தியா தனக்குத் தானே உள்நாட்டு வர்த்தகப் போரை தொடங்க ஆயத்தமாகி வருகிறது எனவும். இதற்கு தன் நாட்டு மக்களையே பலிகடாவாக்கி வரும் இந்த தனியார் வணிக விற்பனை அறிவிப்புகள் கடுமையான அச்சத்தைத் தருகிறது. தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏற்கெனவே தனது வாராக்கடன் அளவை மிக நேர்த்தியாகக் குறைத்துள்ளது. வருமான அளவில் மீண்டெழும் சூழலில் இந்த வங்கியைத் தனியாருக்கு தாரை வார்க்க உள்ளதாக வந்துள்ள செய்திகள், பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி’’ என்று ஆதங்கப்படுகிறார் இவர்.

தனியார் நிறுவனங்களே அரசாங்கத்தை வழிநடத்தும்!

``உலகமயமாக்கல் என்பது உலகளவில் இரண்டு வகைகளில் செயல்பட்டு வருகிறது. ஒன்று, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தாராளமயத்தை அடிப்படையாகக்கொண்ட சட்டபூர்வ சந்தை, மற்றொன்று தனியார் மயமாக்கப்பட்ட அரசாங்கத்தின் மூலம் சட்டபூர்வமற்ற பலவற்றை சந்தைப்படுத்துதல் ஆகும். தற்போதைய அரசு இரண்டாவது முறையை சட்டபூர்வமாக்க முயன்று வருகிறது. ரயில், விமானம், பெட்ரோலியம் மற்றும் வங்கிகள் என அனைத்து துறைகளும் தனியார்மயம் எனில் இது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்" என்று அச்சம் கொள்கிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஜீ ஆர் ரவி.

``இன்னும் எளிமையாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், வங்கித்துறை உட்பட பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயமாக்கப்படும் வேளையில், இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் அரசாங்கத்திடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களே அரசாங்கத்தை வழிநடத்தும் சூழல் ஏற்படும். எதிர்காலத்தில் அடித்தட்டு சாமானிய மக்கள் அனைவரும் பணம் உள்ள வசதி படைத்தவர்களிடம் அடிமையாக மாறும் நிலை ஏற்படும்.

RBI
RBI
Photo: Vikatan / Ashok kumar.D
`இனி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சம்பளம் போட முடியும்!' - வழிசெய்த ரிசர்வ் வங்கி

தனியார்மயமாக்கல் என்ற போர்வையில் அரசும், குறிப்பிட்ட சில நிறுவனங்களும், மக்கள் நலன் எனக் கூறிக்கொண்டு வருமானத்தையே முன்னிறுத்தி செயல்படுகின்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாடு முழுவதும் சுமார் 3,500 கிளைகளுடன் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். ஆனால், இதைவிட குறைவான கிளைகள் மற்றும் வருமானம் கொண்ட பல வங்கிகள் இன்னமும் நஷ்டத்தில்தானே இயங்கி வருகின்றன? சமூகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர். அரசும், தனியார் முதலாளிகளும் இது நாட்டின் வளர்ச்சிப் பாதையை பின்னோக்கிச் செல்ல வழிவகுக்கும். அரசிடம் உள்ள அனைத்து நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு இந்த அரசாங்கம் யாருக்காக செயல்படப் போகிறது? நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை வாங்கும் தனியார் முதலாளிகள் அதை லாபமீட்டும் நிறுவனமாகத்தானே மாற்றுகின்றனர். இதையே அரசாங்கம் செய்தால் என்ன? இதனால் பாதிப்படையப்போகும் அதன் ஊழியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஓய்வூதியக் காப்பீடுகள் கேள்விக்குறியாகும்’’ என்று கூறுகிறார் ஜீ ஆர் ரவி..

ஏற்கெனவே கடுமையான நிதிச் சிக்கல்களில் இருந்த ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை வங்கியான ஐ.டி.எஃப்.சி வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்ய ஏற்கெனவே அரசு அறிவித்துள்ள சூழலில் தற்போது மேலும் சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக வந்துள்ள தகவல்களால் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by Lorenzo from Pexels
கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் SBI வங்கி; யாரெல்லாம் பெற முடியும்?

தொடர்ந்து உயரும் பங்கு விலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் தனியார்மயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக வந்த செய்தியால் அந்தப் பங்குகளின் விலை கடந்த சில நாள்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஐ.ஓ.பி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனப் பங்குகளின் விலை கடந்த ஐந்து நாள்களில் 20 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது! இந்த நிறுவனங்களின் பங்கு முதலீட்டாளர்கள் இந்த தனியார்மயம் குறித்த செய்தியை பாசிட்டிவ்-ஆன விஷயமாகப் பார்க்கின்றனர்!

- மணியன் கலியமூர்த்தி

அடுத்த கட்டுரைக்கு