Published:Updated:

``ஐ.டி-யில ஒரு மாசம் சம்பாதிக்கிறதை நான் ஒரு நாள்ல சம்பாதிச்சுருவேன்..." கலக்கும் கரூர் இளைஞர்!

பூக்கடையில் நவீன்ராஜ் ( நா.ராஜமுருகன் )

"ஒரு முகூர்த்த நாள் வருமானம்தான், இன்ஜினீயரிங் படிச்சுட்டு, ஐ.டி ஃபீல்டுல வேலை பார்ப்பவர்களோட சம்பளம். எல்லா செலவுகளும் போக இப்போ பசுபதிபாளையம் கடையையும் சேர்த்து, ரூ. 1 லட்சம் லாபம் கிடைக்குது"

``ஐ.டி-யில ஒரு மாசம் சம்பாதிக்கிறதை நான் ஒரு நாள்ல சம்பாதிச்சுருவேன்..." கலக்கும் கரூர் இளைஞர்!

"ஒரு முகூர்த்த நாள் வருமானம்தான், இன்ஜினீயரிங் படிச்சுட்டு, ஐ.டி ஃபீல்டுல வேலை பார்ப்பவர்களோட சம்பளம். எல்லா செலவுகளும் போக இப்போ பசுபதிபாளையம் கடையையும் சேர்த்து, ரூ. 1 லட்சம் லாபம் கிடைக்குது"

Published:Updated:
பூக்கடையில் நவீன்ராஜ் ( நா.ராஜமுருகன் )

பொறியியல் படிப்பு, பெங்களூரில் வேலை, கைநிறைய சம்பளம் என்று கனவு கண்டவர்தான், கரூர், காந்திகிராமத்தை சேர்ந்த நவீன்ராஜ். ஆனால், திடீரென்று தனது தந்தை தவறிவிட, தடுமாறிய குடும்பக் கப்பலை கரைசேர்க்க வேண்டி, தனது அண்ணனோட சேர்ந்து தந்தையின் பூக்கடைத் தொழிலைக் கையில் எடுத்தார். தற்போது, மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் வருமானம் வரும் அளவுக்குப் பூக்கடைத் தொழிலில் சாதித்திருக்கிறார்.

சகோதரர் அரவிந்தனுடன் நவீன்ராஜ்
சகோதரர் அரவிந்தனுடன் நவீன்ராஜ்
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரூர், காந்திகிராமத்தில் இருக்கிறது அவரது பூக்கடை. மாலையைக் கட்டுவதில் 'பிஸி'யாக இருந்த நவீன்ராஜை சந்தித்தோம். தன் பிசினஸ் கதையை சுருக்கத்தை விவரித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"எங்களுக்குப் பூர்வீகம் கரூர் நகரம்தான். ஆனா, பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் சொந்தமா வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் குடியிருந்தோம். அப்பா சக்திவேலுவும், அம்மா சித்ராவும் சேர்ந்து பூக்கடை நடத்திக்கிட்டு வந்தாங்க.

பூக்கடையில் நவீன்ராஜ்
பூக்கடையில் நவீன்ராஜ்
நா.ராஜமுருகன்

தலா ரெண்டு வருஷம் கரூர் பேருந்து நிலையம், அஞ்சடி ரோடுனு பூக்கடை நடத்தினாங்க. அதன்பிறகு, 18 வருஷமா பசுபதிபாளையத்தில் இரண்டு பேரும் பூக்கடை நடத்தினாங்க. நானும், அண்ணன் அரவிந்தனும் சின்ன வயசில் இருந்தே, அப்பா, அம்மாவுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாலையைக் கட்டுறதுல ஒத்தாசை பண்ணினோம். ஆனா அவங்க ரெண்டு பேரும், 'இந்தப் பூக்கடை தொழிலு எங்களோட போகட்டும். நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப் போங்க'னு சொல்வாங்க. எங்களுக்கும் அதுதான் நல்ல வழினு தோணுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால, அண்ணன் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கோர்ஸ் படிச்சு முடிச்சுட்டு, கரூர்ல உள்ள ஒரு கம்பெனியில சி.என்.சி ஆபரேட்டரா வேலைக்குச் சேர்ந்தார். நான் கரூர்ல உள்ள ஒரு கல்லூரியில் 2017 -ல் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க சேர்ந்தேன்.

அப்பாவும், அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சு சேர்த்து வச்சதை வச்சு, காந்தி கிராமம் இ.பி காலனியில சொந்தமா இடம் வாங்கி, கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி வீடு கட்டுனாங்க. 'சொந்த வீடு'ங்கிற பல தலைமுறை கனவு பலிச்சது. நாங்க படிச்சு வேலைக்குப் போய், இன்னும் குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தணும்னு நினைச்சோம்.

பூமாலை விற்பனை செய்யும் நவீன்ராஜ்
பூமாலை விற்பனை செய்யும் நவீன்ராஜ்
நா.ராஜமுருகன்

ஆனால், அப்பாவுக்கு குடிப்பழக்கம் அதிகமாகி, அவருக்கு உடம்புக்கு முடியாம போச்சு. இதனால, பூ வாங்குன இடத்தில ரூ. 2 லட்சம் கடன், வைத்தியச் செலவுக்கு வாங்குன ரூ. 2 லட்சம் கடன், எங்க ஆத்தாவுக்கு வைத்தியம் பார்க்க வாங்குன கடன் ரூ. 2 லட்சம்னு ரூ.6 லட்சம் கடன் இருந்துச்சு.

இந்த நிலையில, கடந்த 2019 நவம்பர் மாசம் எங்கப்பா இறந்துபோயிட்டார். இதனால, மொத்தக் குடும்பமும் நிலைகுலைஞ்சு போணுச்சு. ரூ.6 லட்சம் கடன் மட்டுமில்லாம, மேற்கொண்டு ரூ. 2 லட்சம் கடன் இருந்தது அப்பதான் தெரிஞ்சுச்சு. வேலைக்குப் போறதா, படிக்கிறதானு எனக்கு குழப்பம். எங்கண்ணன் தன்னோட வேலையை விட்டுட்டு, அம்மோவோடு சேர்ந்து பூக்கடையைக் கவனிக்க ஆரம்பிச்சார்.

நானும், கல்லூரி போன நேரம்போக, மீதியுள்ள நேரத்தில் பூக்கடைக்குப் போனேன். கடுமையா உழைச்சோம். ஆரம்பத்துல, தொழில் புரிபடலை. ஆனா, போகப்போக பிக்கப் ஆச்சு. எல்லா செலவுகளும் போக மாசம் ரூ. 40,000 கிடைக்க ஆரம்பிச்சுச்சு.

எங்க வீட்டு பேர்ல கடன் வாங்கி, அப்பா வச்சுட்டுப் போன கடனை அடைச்சோம். ஆனா, 'படிச்சுட்டு இப்படி பூக்கடையில கஷ்டப்படுறீங்களே'னு சொந்தகாரங்க பேசினாங்க. அதை காதுல வாங்கிக்காம, 'இந்தத் தொழில்தான்'னு நானும், என்னோட அண்ணனும் முடிவு பண்ணினோம். பசுபதிபாளையம் பூக்கடையை அம்மாவைப் பார்த்துக்க சொல்லிட்டு, கடந்த 2020 அக்டோபர் மாசம், காந்திகிராமத்துல உள்ள இந்த இடத்தை மாசம் ரூ. 5,000 க்கு வாடகைக்குப் புடிச்சு, அப்பா பேரான சக்திங்கிற பெயர்ல பூமாலைக் கடையைத் திறந்தோம்.

பூக்கடையில் நவீன்ராஜ்
பூக்கடையில் நவீன்ராஜ்
நா.ராஜமுருகன்

ஆரம்பத்துல பூ வாங்குறது, மாலை விற்பதுல கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு. கோர்ஸ் முடிஞ்சதால, நானும் 'பெங்களூர் ஆட்டோமொபைல் வேலை'ங்கிற கனவை உதறித் தள்ளிட்டு, பூக்கடையே கதினு கிடக்க ஆரம்பிச்சேன்.

முன்னாடி, கரூர் பூ மார்க்கெடுல மட்டும் பூ வாங்கினோம். முதல் ஆறு மாசம் கஸ்டமர்களைப் பிடிக்க சிரமப்பட்டோம். அதன்பிறகு, எங்களோட அணுகுமுறையால அவர்களைக் கவர்ந்தோம். அதன்பிறகு, கல்யாண மாலை, பர்த்டே மாலை, நிலைமாலை, பெண் சடங்கு மாலை, பெரியகாரிய (துக்க நிகழ்ச்சி) மாலைனு பல மாலைகளை சுத்தக் கத்துக்கிட்டேன். அதனால, தேவை அதிகமானதால சேலம், திண்டுக்கல், ஓசூர்ல இருந்தும் ரெகுலரா பலரக பூக்களை வாங்க ஆரம்பிச்சோம்.

கஸ்டமர்கள்கிட்ட சிரிச்ச முகமா பேசினோம். 'காசு இல்லைன்னாகூட, அப்புறம் கொடுங்க'னு மாலைகளைக் கொடுத்தோம். இதனால, சுத்துப்பட்டு 20 கிலோ மீட்டர் தூரத்துல இருந்தெல்லாம் எங்களுக்கு கஸ்டமர்கள் கிடைச்சாங்க. மாலையை கடனா வாங்கிட்டுப் போன ஒருத்தர், இரண்டு மாசம் கழிச்சு வந்து, '10 ரூபா தர மறந்துட்டேன்'னு சொல்லி கொடுத்துட்டுப் போற அளவுக்கு கஸ்டமர்களை கவர்ந்தோம்.

மேடை அலங்காரம் பண்ற ஆர்டரெல்லாம் வர ஆரம்பிச்சது. அதுக்கு நேரம் இல்லாததால, அதை வேறு நபர்களுக்கு கைமாத்திவிட ஆரம்பிச்சோம்.

பூமாலை விற்பனை செய்யும் நவீன்ராஜ்
பூமாலை விற்பனை செய்யும் நவீன்ராஜ்
நா.ராஜமுருகன்

ஆயுத பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, பீக் முகூர்த்த நாள்கள்ல மட்டும் அதிகபட்சம் ரூ. 40,000 வரை வருமானம் வர்ற அளவுக்கு வளர்ந்தோம். என்னோட, ஒரு முகூர்த்த நாள் வருமானம்தான், இன்ஜினீயரிங் படிச்சுட்டு, ஐ.டி ஃபீல்டுல வேலை பார்ப்பவர்களோட சம்பளம். எல்லா செலவுகளும் போக இப்போ பசுபதிபாளையம் கடையையும் சேர்த்து, ரூ. 1 லட்சம் லாபம் கிடைக்குது. இப்போ எங்க கடையில ஆறு பேர் வேலை பார்க்குறாங்க. 24 மணி நேரமும் கடை நடக்கும்.

இதற்கிடையில், அப்பா வாங்குன கடனை அடைக்க வாங்குன கடனை வட்டியோடு சேர்த்து, ரூ. 12 லட்சத்தை அடைச்சோம். கடந்த பிப்ரவரி மாசம் எங்க வீட்டுப் பத்திரத்தை மீட்டோம். அதோடு, 12 பவுன் நகை வாங்கினோம்.

25 வயசாகும் எங்கண்ணனுக்கு திருமணம் ஆயிடுச்சு; எனக்கு 23 வயசாவுது. ''சின்ன பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுங்கிற மாதிரி, இதுல ஜெயிக்கமாட்டீங்கனு நினைச்சோம். பரவாயில்லை. சாதிச்சுட்டீங்களே''னு உறவுக்காரங்க எல்லாம் இப்போ நல்ல வார்த்தை சொல்றாங்க. அடுத்து, ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். கண்டிப்பா அதுலயும் சாதிப்போம்.

பூக்கடையில் நவீன்ராஜ்
பூக்கடையில் நவீன்ராஜ்
நா.ராஜமுருகன்

வேலைக்குப் போயிருந்தா, ரூ. 20,000 சம்பளத்தை வாங்கிட்டு, மத்தவங்களுக்கு அடிமையா இருந்திருப்போம். ஆனா, சொந்த தொழிலில் இப்போ நிமிர்ந்து வாழுறோம். பலரும் படிச்சுட்டு, 10,000 ரூபாய் சம்பளத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதுபோல, ஏதாச்சும் தொழில் தொடங்கி, கடுமையா உழைச்சா, அவங்களும் எங்களைப் போல முன்னுக்கு வரமுடியும்" என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் நவீன்ராஜ்.

வாழ்த்துகள் ப்ரோ...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism