``வங்கிகள் 5.70% வட்டி கொடுக்கவே யோசிக்கும் இந்நாளில் அரசு உத்தரவாதத்துடன் 7.60%, 7.40%, 6.90% வட்டி விகிதம் என்றால் நம்ப முடிகிறதா? இத்தனை அதிக வட்டி விகிதத்தை அரசு உத்தரவாதத்துடன் தருபவை நம் அஞ்சலகங்களே. பர்சனல் ஃபைனான்ஸுக்கும் கடிதங்களைக் கையாளும் அஞ்சலகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இன்று அது நாம் அறிந்த அஞ்சலகம் இல்லை; இண்டியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்கைத் (India Post Payments Bank) துணை நிறுவனமாகக் கொண்டு கம்பீரமான அரசு நிறுவனமாக உருவெடுத்துள்ள இந்தியா போஸ்ட்.
ஃபோன், மொபைல், இமெயில், சோஷியல் மீடியா ஆகியவை வந்தபின் மக்கள் தொடர்புக்கு அஞ்சலகங்களே கதி என்ற நிலை வெகுவாக மாறியது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மனி ஆர்டரும், ஸ்டாம்ப் விற்பனையும் கூடக் குறைந்து போயின. இனி அஞ்சலகங்களின் கதி அதோகதிதான் என்று எண்ணியிருக்கையில் ஃபினிக்ஸ் பறவை போல இந்தியா போஸ்ட் உரு மாறியது. காரணம் அது தரும் டெபாசிட் திட்டங்கள் – வங்கியை விட அதிக வட்டி விகிதங்களுடன் மற்றும் சாவரின் காரன்டி எனப்படும் உச்ச உத்தரவாதத்துடன்.
மேலும் வங்கிகள் இல்லாத இடங்களிலும் போஸ்ட் ஆஃபீஸ்கள் இருக்கின்றன – மொத்தம் 1,55,015 கிளைகள் (இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-யில் மொத்தம் 24,000 கிளைகள்தான்). ஆகவே அதை பேமென்ட் பேங்காக மாற்றுவதன் மூலம் வங்கிச் சேவைகள் இந்தியாவின் மூலை, முடுக்குகளில் இருக்கும் சாதாரண மக்களைச் சென்றடைய முடியும் என்பதால் அது சம்பந்தப்பட்ட வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅஞ்சலகங்களில் வங்கிகளை விட மேலான டெபாசிட் திட்டங்கள் உள்ளன. போஸ்ட் ஆஃபீஸ் சேவிங் அக்கவுன்ட்,
ஐந்து வருட ரெக்கரிங் டெபாசிட்,
டைம் டிபாசிட்டுகள்,
மன்த்லி இன்ட்ரெஸ்ட் ஸ்கீம்,
கிஸான் விகாஸ் பத்ரா,
சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம்,
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்,
நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட்,
சுகன்யா சம்ரித்தி திட்டம் என்று மொத்தம் ஒன்பது சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலகங்களில் உள்ளன.
இவற்றில் பலவற்றுக்கு வருமான வரி, பிரிவு 80சியின் கீழ் வரிவிலக்கு உண்டு என்பது கூடுதல் சிறப்பு. சிறு முதலீட்டாளர்களின் நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் என்பதால் முதலீட்டுத் தொகையில் கட்டுப்பாடுகள் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளால் மிகப் பெரிய பணக்காரர்களின் வரவு மற்றும் ஆக்கிரமிப்பு தடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு காலாண்டின் துவக்கத்திலும் வட்டி விகிதங்கள் மாற்றப்படும். சமயத்திற்கேற்ப கூடலாம்; அல்லது குறையலாம். (சமீப காலங்களில் இறக்கம் மட்டுமே தென்படுகிறது.) பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் மற்றும் சுகன்யா சம்ரித்தி திட்டம் -இவற்றில் மட்டும் முதலீட்டுக் காலம் அதிகம் என்பதால் ஒவ்வொரு காலாண்டும் வட்டிவிகித மாற்றங்கள் ஏற்படும்போது அது நம் அக்கவுன்ட்டிலும் பிரதிபலிக்கும். மற்ற திட்டங்களைப் பொறுத்தவரை, சேரும்போது என்ன வட்டி விகிதம் தரப்பட்டதோ, அதுவே முதலீட்டுக் காலம் முடியும் வரை தொடரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போஸ்ட் ஆஃபீஸ் சேவிங் அக்கவுன்ட், வங்கி தரும் எஸ்பி அக்கவுன்ட் போலத்தான். ஆனால் வட்டி விகிதம் 4% (எஸ்பி ஐ வங்கியில் 2.70%).
போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட்டின் முதலீட்டுக் காலம் ஐந்து வருடங்கள்; வட்டி விகிதம் 5.80%. விரும்புபவர்கள் ஐந்தாண்டு முடிவில் அதை அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளலாம். பத்து வயது சிறார்களும் இந்த அக்கவுன்ட்டை ஆரம்பிக்கலாம். அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டங்களைத் துவங்கியதால் பத்து ரூபாய் முதலீட்டில் கூட ஆர்.டி ஆரம்பிக்க முடியும். உச்ச வரம்பு கிடையாது.
போஸ்ட் ஆஃபீஸ் டெர்ம் டெபாசிட்டில் ஒன்று முதல் ஐந்து வருடங்கள் வரை முதலீடு செய்ய முடியும். ஐந்து வருட முதலீட்டுக்கு மட்டும் செக்.80சியின் கீழ் விலக்கு உண்டு.
ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை உள்ள முதலீட்டுக்கு 5.50% மற்றும் ஐந்து வருட முதலீட்டுக்கு 6.70% வட்டி கிடைக்கும். முதலீட்டுக் கால முடிவில்தான் வட்டியும், முதலீட்டுத் தொகையும் ஒன்றாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு மாத முடிவிலும் வட்டி வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இருக்கவே இருக்கிறது `போமிஸ்' எனப்படும் `போஸ்ட் ஆஃபீஸ் மந்த்லி இன்கம் ஸ்கீம்'. இதில் ஒருவர் ரூ. 4.50 லட்சம் அளவு மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஜாய்ன்ட் அக்கவுன்ட் என்றால் ரூ. 9 லட்சம் உச்ச வரம்பு. வட்டி 6.60%. முதலீட்டுக் காலம் ஐந்து வருடங்கள் என்றாலும் வரிவிலக்கு கிடையாது. இவற்றை விட சிறப்பான போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்களும் உள்ளன. அவற்றை அடுத்து காணலாம்
- அடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.