Published:Updated:

ஆயுள் காப்பீடு செய்யத் தயாராகிவிட்டீர்களா? இந்த பாலிசிகள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் - 49

லைஃப் இன்ஷூரன்ஸில் நம் வருமானத்துக்கும், பொருளாதாரக் குறிக்கோள்களுக்கும் பொருத்தமான லைஃப் பாலிசியையும், ஒப்பந்தத் தொகைகளை முழுமையாக வழங்கக்கூடிய நிறுவனங்களையும் கவனமாகத் தேர்வு செய்வது முக்கியம்.

வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் இன்ஷூரன்ஸ் நமக்குத் துணையிருக்கும் என்று பார்த்தோம். நம்மில் பலருக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் மிகவும் பரிச்சயமான ஒன்று. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் கட்டாயம் இருப்பார்; அவர் கூறுவது புரியாவிட்டாலும் முக தாட்சண்யத்துக்காக ஒன்றிரண்டு பாலிசி எடுத்திருப்போம்.

மேலும் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எல்.ஐ.சி.பாலிசி என்றே கூறி வந்தோம். ஏனெனில், முன்பெல்லாம் எல்.ஐ.சி. (லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) மட்டுமே இந்தச் சேவையை வழங்கி வந்தது. இன்று ஹெச்டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஆதித்ய பிர்லா, டாட்டா போன்ற நிறுவனங்களும் லைஃப் இன்ஷூரன்ஸ் வழங்க ஆரம்பித்துள்ளன. இவை தரும் பலதரப்பட்ட பாலிசிகளைப் பார்க்கலாம்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)
உங்கள் வாழ்க்கையின் பாதுகாவலர்கள் இந்த இரண்டு இன்ஷூரன்ஸ்கள்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 48

எண்டோவ்மென்ட் பாலிசி (Endowment Policy)

சென்ற தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான பாலிசி இது. ஏனெனில், முதலீடு, பாதுகாப்பு என்று நாம் நாடக்கூடிய இரண்டு தலையாய விஷயங்களையும் ஒருங்கே வழங்குகிறது. உயிருக்கு கவரேஜ் மற்றும் நம் பொருளாதாரக் குறிக்கோள்களை நிறைவேற்றப் பணம் என்ற இரண்டுமே இதில் கிடைக்கிறது. பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பணம் (Sum Assured) நாமினிக்குத் தரப்படும். அவர் பாலிசி காலம் தாண்டி உயிருடன் இருந்தால் திருப்பித் தரப்படுகின்ற மொத்தப் பணம் அவருடைய பொருளாதாரக் குறிக்கோள்களை (சொந்த வீடு, பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம்) நிறைவேற்ற உதவுகிறது.

மணி பேக் பாலிசி (Money Back Policy)

எண்டோமென்ட் பாலிசி போலவே மணி பேக் பாலிசியும் செயல்படும். இதில் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் திரும்பத் தரப்படும். உதாரணமாக, பதினைந்து வருட மனி பேக் பாலிசியில் ஐந்து வருடத்துக்கொரு முறை மூன்றில் ஒரு பங்கு தொகையைப் பெறலாம். பாலிசி முடிவில் மீதித் தொகையுடன் போனஸ்களும் கிடைக்கும்.

யூலிப் பாலிசி (Ulip Policy)

இதிலும் லைஃப் கவரேஜ் மற்றும் முதலீடு என்ற இரண்டு நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால், ரிஸ்க் குறைந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், ரிஸ்க் நிறைந்த சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் லாபம் அதிகரிக்கிறது. பங்குசார்ந்த ஃபண்டுகள், கடன் சார்ந்த ஃபண்டுகள் அல்லது இரண்டுமான கலவை போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டுகளை பாலிசிதாரர் தெரிவு செய்ய இயலும். நமது குறிக்கோள் நிறைவேறும் காலம் நெருங்க, நெருங்க ரிஸ்க் நிறைந்த பங்கு சார்ந்த ஃபண்டுகளில் இருந்து, பாதுகாப்பு நிறைந்த கடன் ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவதன் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய அதிக லாபத்தைப் பாதுகாக்க இயலும்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)
இன்னும் இன்ஷூரன்ஸை ஒரு முதலீடாகவே நினைக்கிறீர்களா?தவறு செய்கிறீர்கள்! - பணம் பண்ணலாம் வாங்க - 47

ஹோல் லைஃப் பாலிசி (Whole Life Policy)

பொதுவாக 70 வயதுக்கு மேல் லைஃப் இன்ஷூரன்ஸ் கிடைக்காத நிலையில் இந்தப் பாலிசியின் கீழ் நூறு வயது வரை நமக்கு கவரேஜ் கிடைக்கும். இதனால் நாம் பிரீமியம் கட்டும் காலம் வரை இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு நமக்கு இருக்கும். வருடங்கள் அதிகமாக, அதிகமாக, அதில் சேரக்கூடிய பணமும் அதிகமாவதால், நாம் அதிலிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற இயலும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance)

இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த இன்ஷூரன்ஸ்தான் இருப்பதிலேயே எளிய ஒன்று. இதில் முதலீட்டுக்கு இடமில்லை. மொத்த பிரீமியமும் கவரேஜுக்கே செல்வதால், குறைந்த செலவில் அதிக கவரேஜ் பெறமுடிகிறது. உதாரணமாக, புகை பிடிக்காத 30 வயது இளைஞர் அடுத்த முப்பது வருடங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளவு இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு மாத பிரீமியம் சுமார் ரூ.700/ மட்டுமே. நமது வருட வருமானத்தைப் போல் 15 - 20 மடங்கு கவரேஜ் பெறலாம். இதனால் பாலிசிதாரர் உயிரிழந்தாலும் அவர் குடும்பம் வசதிக் குறைவை சந்திப்பதில்லை.

ஆனால், இதில் உயிரிழப்புக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும். பாலிசி காலம் முடியும் வரை பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் முதிர்வுகாலப் பயன் என்று எதுவும் கிட்டாது. சமீபத்தில் பாலிசி முதிர்வடைந்த பின் பிரீமியத்தைத் திருப்பித் தரும் திட்டமும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், இதில் பிரீமியம் அதிகம்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)
இந்த 4 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் கடன்களை எளிதாக அடைக்கலாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 46

நம் சொத்துகளிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது நம் உயிரே அல்லவா? அதை இழக்க நேர்ந்தால் நம் குடும்பத்துக்கு உதவுவது லைஃப் இன்ஷூரன்ஸ் என்பதால் நம் வருமானத்துக்கும், பொருளாதாரக் குறிக்கோள்களுக்கும் பொருத்தமான லைஃப் பாலிசியையும், ஒப்பந்தத் தொகைகளை முழுமையாக வழங்கக்கூடிய நிறுவனங்களையும் கவனமாகத் தேர்வு செய்வது முக்கியம்.

- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு