Published:Updated:

`மாநிலங்கள் கடன் வாங்கும் அளவு உயர்வு... ஆனால், ஒரு கண்டிஷன்!'  நிதியமைச்சரின் 5ம் கட்ட அறிவிப்புகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ( Twitter.com / PIB_India )

20 லட்சம் கோடி பேக்கேஜ் அறிவித்தபோது, மத்திய அரசே தன் கையிலிருந்து செலவிடப்போகிறது என்றுதான் பலரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அப்படிச் செலவிடப்படும் தொகை மிகவும் குறைவே.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ``சுயசார்பு இந்தியா" திட்டம் குறித்து, கடந்த 4 நாள்களாகத் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (மே -17) 5-ம் கட்ட மற்றும் இறுதி நாள் அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்றைய அறிவிப்புகளில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இதுவரை வந்த அறிவிப்புகளின்படி, பாதுகாப்புத்துறை தவிர மற்ற துறைகளில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், ஒரேயொரு பொதுத்துறை நிறுவனம் தவிர மற்ற நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும். அதிக எண்ணிக்கையிலான பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் துறையில், அந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 4 நிறுவனங்களாகக் குறைக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த துறை தவிர, மற்ற துறைகளில் அனைத்து நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Twitter.com / PIB_India

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் வழங்குவது, பயணக்கட்டணத்தில் 85% தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொண்டது உட்பட முந்தைய அறிவிப்புகள் சிலவற்றை நினைவுபடுத்தியபின், இன்றைய அறிவிப்புகளைத் தொடங்கினார்.

* நூறு நாள் வேலைவாய்ப்புத்திட்டத்திற்காக ஏற்கெனவே 61,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* மருத்துவத்துறை மேம்பாட்டுக்காக, இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று நோய்த் தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். வட்டார அளவில் பொதுசுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

* கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே ரூ.4,113 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக மேலும் ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கல்வித்துறையில், இ-வித்யா என்ற திட்டத்தின்மூலம் ஆன்லைன் கல்வி கற்பிக்கும் முறை விரிவுபடுத்தப்படும். ரேடியோ, கம்யூனிட்டி ரேடியோ மற்றும் சேனல்கள், கல்வி கற்பிக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்படும். `ஒரு நாடு ஒரு டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, ஏற்கெனவே உள்ள கல்வி சேனல்களோடு கூடுதலாக 12 சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும். 1 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு, வகுப்புக்கு ஒரு டிவி சேனல் மூலம் கல்வி கற்பிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு எனத் தனியாக ஆன்லைன் பாடங்கள் எடுக்கப்படும். மே 30 முதல், 100 பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. 200 மின்னணுப் பாடத்திட்டங்கள் ஆன்லைனில் ஏற்றப்படவுள்ளன.

தொழில் நிறுவனங்கள்
தொழில் நிறுவனங்கள்

* எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்படும். லாக்டெளன் காரணமாக வங்கிக்கடன் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், ஓராண்டுக்காலத்துக்கு அந்த நிறுவனங்களின்மீது திவால் நடவடிக்கை எடுக்கப்படாது. இதற்கு முன்னர் 6 மாதக் காலங்கள் என்ற கால அளவு இருந்தது. 1 லட்சம் ரூபாய் அளவிலான கடன்களைத் திருப்பிச்செலுத்தாமல் போனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறையில் 1 கோடி ரூபாய் என்று தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

* கடந்த ஏப்ரல் மாதத்துக்கான மாநில வரிப்பங்கீட்டுத்தொகை ரூ.46,038 கோடி முழுமையாக வழங்கப்பட்டது. வருவாய்ப் பற்றாக்குறை நிதி 12,390 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேசியப் பேரிடர் மானிய நிதியிலிருந்து ரூ.11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி 60 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

* மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி அளவில் 3% வரை கடன் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது 5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 5% அளவில், 3.5% வரை மட்டுமே எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தரப்படும். அதற்குமேல், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துதல், மின் பகிர்மானத்துக்கு ஒப்புக்கொள்ளுதல் உள்ளிட்ட 4 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் 5% அளவுக்கு வரம்பு உயர்த்த அனுமதிக்கப்படும்.

இறுதியாக, கடந்த 5 நாள்களாக அறிவிக்கப்பட்ட நிதித்தொகுப்பின் மொத்த தொகை, முதல் நாளில் ரூ.5,94,550 கோடி, இரண்டாவது நாளில் மொத்தம் ரூ.3,10,000 கோடி, மூன்றாவது நாளில் ரூ.1,50,000 கோடி, நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் மொத்தம் ரூ.48,100 கோடி, மேலும் இதற்கு முன்னர் பொருளாதார ஊக்குவிப்புக்காக ரிசர்வ் வங்கி அறிவித்த 8.16 லட்சம் கோடி, கொரோனா தொடக்க காலத்தில் அறிவிக்கப்பட்ட 1.92 கோடி என அனைத்தும் சேர்த்து 20 லட்சத்து 97 ஆயிரம் கோடி வருவதாகக் கணக்கில் காட்டினார் நிதியமைச்சர். இறுதியில் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், காங்கிரஸ் கட்சியை மிகக்கடுமையாகக் குற்றம்சாட்டிப் பேசினார். பட்ஜெட்டில் வெளியிட்டவற்றையும் இதில் அறிவித்திருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, பட்ஜெட்டே பிப்ரவரியில்தானே வெளியிட்டோம், மூன்று மாதங்கள்தானே ஆகியுள்ளது என்று குறிப்பிட்டார்.

நிதி அமைச்சரின் கணக்கீடுகள் குறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் கூறும்போது, ``கொரோனா தொடக்கத்தின்போது அறிவித்த மொத்த தொகை, ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் கோடி எனக் கூறியிருக்கிறார்கள். அதேபோல பணப்புழக்கத்தை உருவாக்குவதற்காக ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்ததாக ரூ.8 லட்சத்து 16 ஆயிரம் கோடியை, இவர்கள் கணக்கில் சேர்த்துள்ளார்கள். இது தவறானது. பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக ரெப்போ விகிதத்தையும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தையும் ரிசர்வ் வங்கி குறைத்தது. இந்தக் கணக்கீட்டின்படி மொத்தம் ரூ.5 லட்சம் கோடி அளவுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. அதைத்தான் ரூ.8 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறுகிறார்கள். இதிலும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, வங்கிகளின் பணமனைத்தும் ரிசர்வ் வங்கியிலேயே முடங்கின. இந்தத் தொகையைத் தற்போது கொரோனாவுக்காக அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் பேக்கேஜில் சேர்த்தது தவறு. இவை தவித்த மிச்ச தொகையிலும், பெரும்பாலும் கடன் உத்தரவாதத்தைத்தான் மத்திய அரசு செய்திருக்கிறது. இந்த உத்தரவாதப்படி கடன் கிடைப்பதும் கடினம். வங்கிகள் இப்போதுள்ள சூழலில் வாராக்கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளத் தயாராக இல்லை.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

20 லட்சம் கோடி பேக்கேஜ் அறிவித்தபோது, மத்திய அரசே தன் கையிலிருந்து செலவிடப்போகிறது என்றுதான் பலரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அப்படி செலவிடப்படும் தொகை மிகவும் குறைவே. அதுபோக, வருமான வரி செலுத்துபவர்களுக்கும், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கும் முறைப்படி சேரவேண்டிய தொகையை அளித்ததையும் இந்த 20 லட்சம் கோடியில் சேர்த்திருக்கிறார்கள். இன்னும் பல திட்டங்கள், கடந்த பட்ஜெட்டின்போது அறிவித்தவை. அவற்றையும் இந்த பேக்கேஜில் சேர்த்துக் காட்டியுள்ளனர். அதுபோக நிறைய தனியார் மயமாக்கும் திட்டங்களையும் இதோடு சேர்த்து அறிவித்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் செய்திருக்க வேண்டியது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை எளியவர்களுக்கு நேரடிப்பண உதவியை வழங்குவது. ஆனால் அப்படி செய்யும் எண்ணமே இவர்களுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு