Published:Updated:

நிதியமைச்சரின் பி.எஃப்., இ.எஸ்.ஐ அறிவிப்புகள், சிறு குறு நிறுவனங்களுக்குப் பயனளிக்குமா? ஓர் அலசல்!

 நிர்மலா சீதாராமன்
News
நிர்மலா சீதாராமன்

இன்றைய நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதிலும் மின்சார உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

"தொழில்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சிரமத்தைப் போக்கவும் 2020-ம் ஆண்டில் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (Atma Nirbhar Bharat Abhiyaan)' என்ற திட்டத்தின்கீழ் 20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். அவர் ஆற்றிய நீண்ட உரையில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்கும் எனவும் கூறியிருந்தார்.  

அதன்படி, புதன்கிழமை மாலை 4 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து, கொரோனா நிவாரணத் திட்டத்தில் உள்ள 15 அம்சங்களை விளக்கினார்.

"பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனிதவளம், தேவை, தொழில்நுட்பம் ஆகிய ஐந்தும் நாட்டின் வளர்ச்சிக்கான தூண்களாகும். இதைக் கருத்தில் கொண்டும், இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடனும் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் நாம் தன்னிறைவு பெறுவதுடன், உலகுக்கு உதவும் நோக்கிலும் இருக்கும். தொழில் நடத்துவது எளிதாக்கப்படும். இந்திய வர்த்தகச் சின்னங்களை உலக அளவில் கொண்டுசெல்ல இந்தத் திட்டம் உதவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்றைய நிலையில், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதிலும், மின்சார உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே மிகவும் விரிவாக நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்தத் திட்டம் குறித்து முடிவெடுக்கப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் வழங்கிய ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் தொகுப்பு தயார் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தை தன்னிறைவு மிக்கதாக மாற்றும் நோக்கிலேயே இந்த உதவித் தொகுப்புக்கு 'சுயசார்பு பாரதம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ’சுயசார்பு பாரதம்’ என்றால், உலகத்திடமிருந்து துண்டித்துக் கொள்வதல்ல. தன்னம்பிக்கையை அதிகரிப்பதே.
நிர்மலா சீதாராமன்.

திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்!

குறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வரம்பு 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாகவும், சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வரம்பு 25 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி ரூபாயாகவும், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வரம்பு 10 கோடி ரூபாயிலிருந்து, 20 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. 

SME
SME

சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் கடனுதவி; அடமானமாக சொத்துகள் எதையும் காட்டத்தேவையில்லை. உத்தரவாதத்தை அரசு வழங்கும். இதற்காக மூன்று லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள சிறு,குறு நிறுவனங்களுக்குச் சிறப்பு கடன் உதவி. இதற்கு 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் பயனடைவார்கள். வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்குக் கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த மூன்று மாதங்களுக்கான பி.எஃப் தொகையை அரசே செலுத்தும்; 72 லட்சம் ஊழியர்கள் இதனால் பயனடைவார்கள். இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 200 கோடி ரூபாய் வரையிலான அரசு கொள்முதலில் சர்வதேச டெண்டர்கள் அனுமதிக்கப்படாது. அவை அனைத்தும் இனி இந்திய நிறுவனங்களுக்கே.

வங்கி அல்லாத தொழில் நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, அந்த நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு இந்திய அரசு பகுதி அளவு உத்தரவாதம் அளிக்கும். இந்தக் கடன்கள் மூலம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் முதல் 20 சதவிகித இழப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக 30,000 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத் திட்டம் ஒன்றை மத்திய அரசு தொடங்கவுள்ளது. மின்சார விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு 90,000 கோடி ரூபாய் வழங்கப்படும். 

இந்திய ரயில்வே, இந்திய நெடுஞ்சாலைத் துறை, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பணிகளை முடிப்பதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்படும். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச  நிர்வாகங்களின் வீட்டுவசதி வாரியங்களின் (மார்ச் 25 அல்லது அதற்குப் பின்பு முடிவடையும்) கட்டுமானத் திட்டங்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

டி.டி.எஸ் (TDS) மற்றும் டி.சி.எஸ் (TCS) வரி பிடித்தங்கள் தற்போது உள்ள அளவில் இருந்து 25 சதவிகிதம் குறைக்கப்படும். இது இந்த நிதியாண்டின் மீதமுள்ள பகுதி முழுவதும், அதாவது 31 மார்ச் 2021 வரை அமலில் இருக்கும். இதன்மூலம் சுமார் 50,000  கோடி ரூபாய் அளவுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். 2019- 2020-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி 31 ஜூலை மற்றும் 31 அக்டோபர் 2020 எனும் தேதியிலிருந்து 30 நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் அறிவிப்புகள் பொருளாதாரச் சரிவைச் சீர்செய்யுமா, கொரோனா பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா என்கிற கேள்வியுடன், பொருளாதார நிபுணர்களிடமும், சிறு குறு தொழில் சார்ந்த நிபுணர்களிடமும் பேசினோம்.

'டேக்ட்' அமைப்பின் கோவை மாவட்டத் தலைவரான ஜே.ஜேம்ஸ், " நிதி அமைச்சரின் அறிவிப்புகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றியமைத்திருப்பதை வரவேற்கிறோம். தற்போது நவீன எந்திரங்களின் விலை லட்சக்கணக்கில் இருக்கும்போது, மைக்ரோ நிறுவனங்களுக்கான வரையறையை, மூலதன வரம்பை 1 கோடி ரூபாயாகவும் டர்ன் ஓவர் வரம்பை 5 கோடி ரூபாயாகவும் உயர்த்தியிருப்பது பலனளிக்கும்.

கூடுதலாக வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதத்தை 6 சதவிகிதமாகக் குறைக்கவேண்டும் என்று கேட்டிருந்தோம். அப்படிக் குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஜே.ஜேம்ஸ், 'டேக்ட்' அமைப்பு

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்குவதற்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம். இதன்மூலம், வங்கிகளில் 4 ஆண்டு தவணையில், பிணையில்லாத கடன்கள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், வங்கிகள் தரப்பில் இதனை எவ்வாறு செயல்படுத்துவார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

கோவிட் 19
கோவிட் 19

வங்கிகளைப் பொறுத்தவரை, நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்கு நிறைய விதிமுறைகள் வைத்துள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் நிறுவனத்தின் வரவு செலவு இருப்பு நிலைகளைப் பார்த்து கடன் அளிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாகவே பொருளாதார மந்த நிலையின் காரணமாக நிறுவனங்களின் வருமானம் குறைவாகவே இருந்தது. தற்போது கொரோனா காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நிறுவனத்தின் வரவு செலவுக்கணக்கின் அடிப்படையில் இல்லாமல், நிறுவனம் எம்.எஸ்.எம்.இயில் பதிவு செய்யப்பட்டுள்ளதா, இதில் செய்யப்பட்டுள்ள முதலீடு எவ்வளவு என்பதையெல்லாம் மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் கடன் வழங்கலாம். இப்படிக் கூடுதலாக வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதத்தை 6 சதவிகிதமாகக் குறைக்கவேண்டும் என்று கேட்டிருந்தோம். அப்படிக் குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பி.எஃப்., இ.எஸ்.ஐ போன்ற பிடித்தங்களெல்லாம் 10 பேருக்கும் குறைவாக இருக்கும் நிறுவனங்களுக்குப் பொருந்துவதில்லை. ஆனால் இப்படி சிறிய அளவிலான நிறுவனங்கள்தான் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. எனவே அவர்களுக்கு பி.எஃப்., இ.எஸ்.ஐயில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் பயனளிக்கப்போவதில்லை. அதேபோல, ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களுக்கான தவணையைத் திருப்பிச்செலுத்துவதற்கு கால அளவை நீட்டித்திருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றாலும்கூட, வங்கிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே இதன் பலன் என்னவென்று தெரியவரும்" என்றார்.

ஏற்கெனவே நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகையைக் கொடுக்கப்போவதையெல்லாம் ஊக்கத்தொகைபோல கணக்கில் காட்டுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?
ஜோதி சிவஞானம், பொருளாதார நிபுணர்
பேராசிரியர் ஜோதி சிவஞானம்
பேராசிரியர் ஜோதி சிவஞானம்

பொருளாதார நிபுணரான ஜோதி சிவஞானம், "பிரதமர் அறிவித்தபடி 20 லட்சம் கோடி ரூபாய்க்கான முழுமையான திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை. அடுத்தடுத்த அறிவிப்புகளில் முழுமையாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இன்றைய அறிவிப்புகள் தொடர்பான கேள்விகளுக்கு, "காத்திருங்கள், அடுத்த அறிவிப்புகளில் வரும்" என்றே சொல்லி, பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.

சிறு, குறு நிறுவனங்களுக்கான வரையறையை தற்போது மாற்றியிருப்பது தேவையில்லாதது. பி.எஃப் பிடித்தத்தில் 12% என்பதை 10% ஆகக் குறைத்திருப்பதில் அரசுக்கு எந்தப் பங்களிப்பும் கிடையாது. இது நம்முடைய சேமிப்பு. இதைக் குறைத்திருப்பதை ஒரு கணக்காகக் காட்டுவது வேடிக்கை. அதேபோல, சிறு குறு நிறுவனங்களுக்கு நேரடி நிதியுதவி எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகையைக் கொடுக்கப்போவதையெல்லாம் ஊக்கத்தொகைபோல கணக்கில் காட்டுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? இவ்வளவு நாள் கொடுக்காததற்கு வட்டியும் தரப்போவதில்லை.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

பொதுவாக, ஆர்.பி.ஐ கவர்னர்தான் வங்கிக்கடன் குறித்த அறிவிப்புகளைக் கொடுக்க வேண்டும். நிதி அமைச்சர், திட்டங்களைத்தான் அறிவிக்க வேண்டும். அந்தத் திட்டங்களுக்கு மொத்தம் எவ்வளவு செலவாகும் என்பதைக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த விவரங்களை இப்போது சொல்ல முடியாது என்கிறார். சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடனுதவி தருவதற்கான அளவீட்டைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில் வங்கிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை. இவர்களின் அறிவிப்புகளை வங்கிகள் கேட்பதேயில்லை. ஏற்கெனவே அறிவித்த தவணை தள்ளிவைப்பு போன்றவற்றையே நிறைய வங்கிகள் ஏற்கத் தயாராக இல்லை. 

மூன்று மாதத்தவணை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென்று வங்கிகள் தரப்பில் கூறுவதாகப் புகார்கள் வருகின்றன. அதேபோல, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்து பல்லாயிரம் கோடிக்குக் கடன்களாக வந்ததால் சிறிய நிறுவனங்களை நம்பி கடன்கொடுக்க வங்கிகள் தயாராக இல்லை. எனவே இந்த அறிவிப்பு எதிர்பார்த்த பலன்களை அளிப்பதாக இல்லை" என்றார்.

 ’அடுத்தடுத்த அறிவிப்புகளை நிதி அமைச்சகம் வெளியிடும்’ என நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.