Published:Updated:

டாக்ஸ் ஃபைலிங் இனியும் தாமதித்தால் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்: அமைச்சரின் எச்சரிக்கை!

டாக்ஸ் ஃபைலிங்

வருமானத்தைக் குறைத்துக் காண்பித்தோர், வருமானத்தையே அறிவிக்காமல் உள்ளோர், வரி தாக்கல் செய்யாமலே இருந்து வருவோருக்காக அமலாக்கம் செய்யப்பட்டதுதான் `அப்டேட்டட்’ வரி தாக்கல் முறை. எனவே, இதைப் பயன்படுத்தி மிச்சமுள்ள அல்லது முழுமையான வரியைச் செலுத்துங்கள்...

டாக்ஸ் ஃபைலிங் இனியும் தாமதித்தால் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்: அமைச்சரின் எச்சரிக்கை!

வருமானத்தைக் குறைத்துக் காண்பித்தோர், வருமானத்தையே அறிவிக்காமல் உள்ளோர், வரி தாக்கல் செய்யாமலே இருந்து வருவோருக்காக அமலாக்கம் செய்யப்பட்டதுதான் `அப்டேட்டட்’ வரி தாக்கல் முறை. எனவே, இதைப் பயன்படுத்தி மிச்சமுள்ள அல்லது முழுமையான வரியைச் செலுத்துங்கள்...

Published:Updated:
டாக்ஸ் ஃபைலிங்

 முடிவடைந்த 2021-22 நிதியாண்டுக்கு அபராதத் தொகையுடன் வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி (31.12.2022) மிகவும் சமீபமாக இருக்கும் நிலையில், மத்திய அரசின் வருவாய்த்துறை அமைச்சர், கடந்த 29.11.2022 அன்று விடுத்துள்ள செய்தி, இதுவரை வரி தாக்கல் செய்யாமல் இருப்பவர்கள் மற்றும் வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்போரை `உஷார்’ படுத்துவதாக அமைந்துள்ளது.

  • சுமார்  70 முதல் 75 மில்லியன் எண்ணிக்கையிலான (தனிநபர்) வரிதாரர்கள் உள்ளனர். இவர்களுள் 25 சதவிகிதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். மற்றவர்கள் `வெறும்’ வரி தாக்கல் மட்டுமே செய்கிறார்கள்.

  • இதுவரை வரி தாக்கல் செய்யாமல் உள்ளோரை வரி தாக்கல் செய்ய வைக்கவும், வருமானத்தைத் தெரிவிக்காமல் இருந்து வருவோரை அடையாளம் காணவும் வரி துறையிடம் துப்பறிவுப் பிரிவு (Intelligence) உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாகத்தான் மத்திய அரசு வருவாய் மேலாண்மை செய்ய முடியும்.

வருமான வரி
வருமான வரி
  • வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சொத்துப் பதிவு அலுவலகங்கள் மூலமாகக் கிடைக்கப் பெற்ற தகவல்களுடன் வரிதாரர் சமர்ப்பித்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

  • மின்சாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் கட்டணம் செலுத்துவோர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்வோரிடம் வரிசெலுத்த வேண்டிய அளவுக்கு வருமானம் இருக்கக்கூடும்.

  • அப்டேட்டட் வரி தாக்கல் (Updated Income Tax Return) கடந்த ஏப்ரல் 2022-ல் அமலாக்கம் செய்யப்பட்டபிறகு 3,00,00 பேர் அப்டேட்டட் ரிடர்ன் தாக்கல் செய்துள்ளனர். 500 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.

  • இதுவரை வரிதாக்கல் செய்யாமல் இருப்பவர்கள், வரியைச் செலுத்திவிட்டு வரிதாக்கல் செய்து விடுங்கள். பிறகு நீங்களே தொடர்ந்து வரிசெலுத்தி வரி தாக்கலும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்பதுதான் அமைச்சர் விடுத்துள்ள செய்தி.

புரிந்து கொள்ள வேண்டும்...

   அமைச்சரின் மேற்கண்ட செய்தி சொல்வது என்னவென்றால், ‘பல்வேறு முனையங்களிலிருந்து பெறப்பட்ட, வரிதாரர்களின் 46 வகைப்பட்ட பணப்பரிவர்த்தனை வருமான வரி துறைக்கு வந்து சேர்கிறது. இவை தவிர மூன்றாம் நபர் மூலம் பெறப்பட்ட தரவுகளும் உள்ளன. இவற்றின் அடிப்படையில், வருமானத்தைக் குறைத்து காண்பித்தோர்’, வருமானத்தையே அறிவிக்காமல் உள்ளோர், வரி தாக்கல் செய்யாமலே இருந்து வருவோருக்காக அமலாக்கம் செய்யப்பட்டதுதான் `அப்டேட்டட்’ வரி தாக்கல் முறை, எனவே இதைப் பயன்படுத்தி மிச்சமுள்ள அல்லது முழுமையான வரியைச் செலுத்துங்கள். வரி செலுத்திய கையோடு வரித்தாக்கல் மற்றும் வரி சரி பார்ப்பு செய்து வருமான வரித்துறையின் நடவடிக்கையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்,’ என்பதுதான் அமைச்சரின் செய்தி எனக் கருத வேண்டி உள்ளது.

வருமான வரி
வருமான வரி

எதற்கெல்லாம் அப்டேட்டட் வரி தாக்கல்

  • கடந்த நிதியாண்டுகளுக்கு வரி செலுத்திவிட்டு வரி தாக்கல் செய்யாமலே இருந்தால் தற்போது செய்யலாம்.

  • கடந்த நிதி ஆண்டுகளில் செய்யப்பட்ட வரி தாக்கலில் வருமானம் விடுபட்டு இருந்தால், விடுபட்ட வருமானத்தை சேர்த்து அப்டேட்டட் வரி தாக்கல் செய்யலாம்.

  • கடந்த நிதியாண்டுகளில் வரி செலுத்த வேண்டிய அளவுக்கு வருமானம் இருந்தும் வரி செலுத்தாமல் வரி தாக்கலும் செய்யாமல் இருந்துவிட்டவர்களும் `அப்டேட்டட்’ வரி தாக்கல் செய்து, வருமான வரித்துறை நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

காலக் கெடு

அப்டேட்டட் வரி தாக்கலுக்கான அதிகபட்ச காலக்கெடு 24 மாதங்கள் மட்டுமே. அதாவது, ஒரு நிதியாண்டைத் தொடர்ந்து வரும் மறு ஆண்டு மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) எனப்படுகிறது. இந்த மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்து 24 மாதங்களுக்குள் `அப்டேட்டட்’ வரி தாக்கல் செய்து விட வேண்டும் என்பதுதான் `அப்டேட்டட்’ ரிட்டர்னுக்கான காலக்கெடு.

Income Tax
Income Tax

2019-20  நிதியாண்டு

மேற்கண்ட காலக்கெடுவின்படி 2019-20 நிதியாண்டுக்கு மதிப்பீட்டு ஆண்டு 2020-21 ஆகும். அதாவது, இந்த மதிப்பீட்டு ஆண்டின் கடைசி தேதி 31.03.2021 ஆக உள்ளது. இதிலிருந்து 24 மாதம் என்பது 31.03.2023. எனவே, 2019-20 நிதியாண்டுக்கு 31.03.2023 வரை `அப்டேட்டட்’ வரி தாக்கல் செய்யலாம். முன்னதாக முழுமையாக வரி செலுத்தி இருந்தால் வரி தாக்களுக்கான தாமதக் கட்டணம் மட்டுமே செலுத்தி வரி தாக்கல் செய்துவிடலாம்.

2019-20 நிதியாண்டுக்கு வரியே செலுத்தாமல் உள்ளவர்களும், விடுபட்ட வருமானத்தைக் கணக்கில் கொண்டு வருவதால் வரிபாக்கி செலுத்த வேண்டியவர்களும் வரியுடன் வரிக்கான வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும். 2019-20க்கு அபராதமின்றி வரி தாக்கல் செய்ய கடைசி தேதி 10.01.2021ஆக இருந்தது. எனவே, 11.01.2021முதல் தற்போது வரிகட்டும் தேதி வரை வட்டி கணக்கிடப்படும். இத்துடன் உபரியாக 50% வரியும் கட்ட வேண்டும். உபரி வரிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை.

2020-21 நிதியாண்டுக்கு

மேற்கண்ட பத்தியில் உள்ளபடி அபராதம், வரிபாக்கி மற்றும் வரி பாக்கிக்கு வட்டியும் கட்ட வேண்டும். உபரி வரியாக 25% வரி மட்டும் செலுத்தினால் போதுமானது.என்னென்றால், (2021-22) மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்து 12 மாதங்களுக்குள் செய்யப்படும் அப்டேட்டட் ரிட்டர்னுக்கு (additional tax) உபரிவரி 25% மட்டுமே.

வரி தாக்கல்
வரி தாக்கல்

தாமத வரி தாக்கல் கட்டணம்

2019 நிதியாண்டுக்கு ரூ.10,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கு தாமதக் கட்டணம் ரூ.5000 மட்டுமே. மேற்கண்ட 3 நிதியாண்டுகளிலும் வரிதாரரின் வரிக்குரிய வருமானம் ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால், தாமத வரி தாக்கலுக்கான கட்டணம் ரூ.1,000/- மட்டுமே.

மின்கட்டணம், வெளி நாட்டுப் பயணம்...

         ரூ.1லட்சத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்தியவர் மற்றும் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்துக்கு செலவு செய்தவர்கள், வரி தாக்கலுக்கு உரிய வருமானம் இல்லாவிட்டாலும், வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி கடந்த மூன்று நிதியாண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது.

          மத்திய வருவாய்த்துறை அமைச்சரின் கூற்றுப்படி, வருமானம் உள்ளவர்கள்தான் ஒரு லட்சத்துக்கு மேல் மின்கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் அல்லது வெளிநாட்டுப் பயணத்துக்கு 2 லட்சம் செலவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த அளவுகோல்களின்படி வரி தாக்கல் மட்டுமே தாக்கல் செய்தவர்கள், கடந்து போன நிதியாண்டுகளில் வரி கட்ட வேண்டிய அளவுக்கு தனது வருமானம் இருந்ததா என்பதை மறுகணக்கீடு செய்ய வேண்டி உள்ளது. அப்படியான வருமானம் இருக்கும்பட்சத்தில் வரி, வரிக்கான வட்டி, முதலானவை செலுத்த வேண்டி இருக்கும். அப்டேட்டடு ரிட்டனும் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி
வருமான வரி

வருமானம் விடுபட்டு உள்ளவர்கள்

          கடந்த நிதியாண்டுகளில் வருமான விடுபாடு காரணமாக தனது வருமானம் 5 லட்சம் என்ற வரம்பைத் தாண்டாமல் தானே உள்ளது என்ற நிலைப்பாட்டின்படி வரி தாக்கல் மட்டும் செய்தவர்களும் வருமானத்தை மறு கணக்கீடு செய்ய வேண்டி இருக்கும். மறு கணக்கீட்டின்படியான வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வரி, வட்டி, தாமதக் கட்டண பாக்கி செலுத்த வேண்டி இருக்கும். அப்டேட்டடு ரிட்டனும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆவண ஆதாரம்

வருமான வரித் துறையின் கண்காணிப்பு பரவலாகிவிட்ட இந்தக் கால கட்டத்தில் மேற்கண்ட அனைத்து இனங்களிலும், வரிதாரர், தான் முன்னமேயே வரி தாக்கலில் குறிப்பிட்ட வருமானம், வரிச்சலுகை எல்லாம் சரியே என்பதை உறுதி செய்துகொள்ள ஆவண ஆதரங்களை சரி பார்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில், தங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களுடன் வரிதாரர் சமர்ப்பித்த தரவுகள் ஒத்துபோகின்றனவா என்று வருமான வரித்துறை ஒத்திசைவு செய்யப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே இதே ஒத்திசைவை வரிதாரரும் செய்வது அவசியமாகிறது.

வருமான வரிக் கணக்குத் தாக்கல்
வருமான வரிக் கணக்குத் தாக்கல்

கட்டணம் செலுத்திவிட்டுதான்...

இவ்வாறு அப்டேட்டட் வரி தாக்கல் செய்யப் போகிறவர்கள் அனைவரும் வரி, வரிக்கான வட்டி, தாமதக்கட்டணம் அனைத்தையும் செலுத்தி அதற்கான ஆவண ஆதரத்துடன்தான் வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

நல்ல வாய்ப்பு!

அப்டேடட் வரித்தாக்கல் செய்யும்படி அமைச்சர் விடுத்துள்ள அறைகூவல், பொன்னான வாய்ப்பு என்றே சொல்லலாம். தவறவிட்டால் சங்கடம் ஏற்படலாம். முறையாக வரி செலுத்தி, காலத்தோடு வரி தாக்கல் செய்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

- பி.முகைதீன் சேக்தாவூத்