Published:Updated:

ஸ்மார்ட் சிட்டியில் வாகனங்களின் பங்கு!

Automotive Industry
பிரீமியம் ஸ்டோரி
Automotive Industry

Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

ஸ்மார்ட் சிட்டியில் வாகனங்களின் பங்கு!

Mobility Engineer 2030 Future Skills for the Automotive Industry

Published:Updated:
Automotive Industry
பிரீமியம் ஸ்டோரி
Automotive Industry

வாகனத்துறையில் நிபுணராக இருந்த பரத், ஒரு பெரிய வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார வாகனப் (EV – Electric Vehicle) பிரிவின் CTO (Chief Technology Officer). சமீபத்தில் அந்த நகரத்தின் மேயரின் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. EV வல்லுநருக்குப் பெரிய நகரங்களின் திட்டமிடுதலில் (urban planning) என்ன வேலை என்று யோசித்தார்.

மின்சார வாகனங்களை நாம் ஒரு தனிப்பட்ட பொருளாகப் பார்க்க முடியாது. அவை இன்று நாட்டின் பிரதமர்களில் தொடங்கி, நிறுவனங்களின் தலைவர்கள், வாடிக்கையாளர்கள் வரை பிரபலமாக இருப்பதற்கு ஒரே காரணம் - அவற்றின் குறைந்த கார்பன் உமிழ்வு (carbon emission).

இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்கள் வெளியிடும் புகை இவற்றில் இல்லை. ஆனால் பாரம்பரிய கரி மூலம் செயல்படும் மின் ஆலைகளிடமிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை வைத்து EV-க்களை சார்ஜ் செய்தால் அதிக பயனில்லை. நகரங்களில் ஏற்படும் கார்பன் உமிழ்வு வேறு எங்கோ ஒரு மின் ஆலைக்குத் தள்ளப்படும். ஆகவே, நம் மின்சார கிரிட் முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்தி EVக்களை சார்ஜ் செய்வது அவசியம். EV சார்ஜ் செய்யத் தேவைப்படும் மின்சாரத்தை அளிக்கவும் கிரிட் தயாராக இருக்க வேண்டும்.

வாகனங்கள் இன்று படிப்படியாக தானே ஓடும் திறனைக் கொண்டுள்ளன .(connected, autonomous driving). அதற்கு நம் சாலைகள் தயாராக இருக்க வேண்டும். தானே ஓடும் வாகனங்களுக்கு ஒரு தனிப் பாதை அளிக்கும் நிலை வரலாம். EV-க்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலைகள் அமைக்கப்பட வேண்டி இருக்கும். அவற்றை அமைத்தால் மட்டும் போதாது. சரியாகப் பராமரிக்கவும் வேண்டும். அமெரிக்காவில் சில நகரங்களில் சார்ஜர்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளத் தொலைத்தொடர்பு (telecom) தேவைப்படும். சந்திப்புகளில் உள்ள சிக்னல்கள், வாகனங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதனால் EV-க்களை ஒரு தனிப்பட்ட பொருளாகப் பார்க்காமல், நகரங்களின் திட்டமிடுதலில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று உருவாகியுள்ளது.

WEF-ன் ஸ்மார்ட் சிட்டி முயற்சி!

உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – WEF) கணிப்பின்படி, உலகில் மக்கள் தொகை 2050-ல் 10 பில்லியனை (ஆயிரம் கோடி) எட்டும். இதில் கிட்டத்தட்ட 70% மக்கள் பெருநகரங்களில் வசிப்பார்கள். இந்த நகரங்கள் சரியாகச் செயல்பட அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், லாபம் பற்றி கவலைப்படாத‌ தொண்டு நிறுவனங்கள், மற்றும் மக்கள் ஒன்றுபட வேலை செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம், இந்த நகரங்களின் செயல்பாட்டில் ஒரு பெரிய பங்கு வகிக்கும். இப்படிப்பட்ட ஓர் இணைக்கப்பட்ட (connected), தகவல் வைத்துச் செயல்படும் ஒரு நகரத்தை `ஸ்மார்ட் சிட்டி’ என்று அழைக்கலாம். இதில் வாழும் மக்களின் தரமான வாழ்க்கைக்கு மின்சாரமும் போக்குவரத்தும் இரண்டு முக்கிய அம்சங்கள்.

இயந்திரமயமாகி வரும் நம் அன்றாட வாழ்க்கையில் சாதனங்களை இயக்க மின்சாரம் ஒரு அத்தியாவசத் தேவை. அதுவும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத நிலையான (sustainable) வகையில், புதுப்பிக்கத்தக்க (renewable) மின்சாரமாக இருப்பது அவசியம். பெரிய‌ நகரங்களில் வேலைக்கு, படிப்பிற்காக, மருத்துவத்திற்காக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று வருவது அவசியம். அதற்கும் நிலையான, மாசு ஏற்படுத்தாத போக்குரவரத்து அவசியம். உலக வெப்பமயமாக்கலைத் தடுக்கும் மின்சார வாகனங்கள் இதற்கு அவசியம். இங்கேதான் மின்சாரம் மற்றும் வாகனத்துறைகள் ஒன்றிணைகின்றன.

WEFன் `ஸ்மார்ட் சிட்டி’ அணுகுமுறை மூன்று வழிகள் கொண்டது. அதில் முதல் படி - பாதிக்கப்படும், பங்களிக்கக் கூடிய‌ அனைத்துத் தரப்பு மக்களின் கருத்தையும் கேட்டு அவற்றைச் சேர்த்துக்கொள்வது. இரண்டாவது படி - மின்சாரமயமாக்கப்பட்ட, தானே ஓடும் திறன் உள்ள, அதிக பயன்பாடு உள்ள ரயில், பேருந்து போன்ற வாகனங்களைப் பயன்படுத்துவது. மூன்றாவது படி - ஒன்றோடு ஒன்று சுலபமாக இயங்கக்கூடிய, இணைக்கப்பட்ட மின்சாரம் சார்ஜ் செய்யும் நிலையங்கள். போக்குவரத்திற்கு அனைத்து மக்களும் தங்கள் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தாமல் அதை ஒரு சேவையாக, பொதுமக்கள் பகிர்ந்து கொள்ளும் அமைப்புக்களைப் பயன்படுத்துவதே சரியான வழி.

ஸ்மார்ட் சிட்டியில் வாகனங்களின் பங்கு!
ஸ்மார்ட் சிட்டியில் வாகனங்களின் பங்கு!
ஸ்மார்ட் சிட்டியில் வாகனங்களின் பங்கு!

ஃபோர்டு நிறுவனத்தின் பார்வை!

ஃபோர்டு நிறுவனர் ஹென்ரி ஃபோர்டின் கொள்ளுப் பேரன் பில் ஃபோர்டு பத்து வருடங்கள் முன் ஒரு TED பேச்சில், போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் பற்றி தன் கருத்தை விளக்கினார். அவர் அன்று பேசியது இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தும்.

தன் கொள்ளுத் தாத்தாவின் கனவு, வாகனங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. மிகவும் பிரபலமான மாடல் Tஐ அவர் வெளியிட்டபோது, அவர் கண்ட கனவு, வாகனங்கள் அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கும் விலையில் விற்பதே! வாகனங்கள் மூலம் கிடைக்கும் போக்குவரத்தால்தான் நாம் முன்னேற முடியும் என்று அவர் நம்பினார். ஆனால் இன்று பெருகி வரும் மக்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்தாகி வருகின்றன.

மக்கள் தொகை 7 பில்லியனிலிருந்து 10 பில்லியனை அடையும்போது, போக்குவரத்துச் சுதந்திரம் கேள்விக்குறியாகும். இன்று உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 800 மில்லியன் என்று எடுத்துக் கொள்வோம். ஃபோர்டின் கருத்துப்படி 2050-ல் இந்த எண்ணிக்கை 2-லிருந்து 4 பில்லியன் வாகனங்கள் வரை வளரலாம். இந்த வாகனங்கள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதகம் ஏற்படுத்தாத மின்சார வாகனங்களாகக்கூட இருக்கலாம். ஆனால் இத்தனை வாகனங்களைச் சமாளிக்கக்கூடிய சாலைகள் நம் நகரங்களில் இருக்காது. இதனால் சாலைகள் பிதுங்கி வாகனங்கள் நகரக்கூட முடியாத ஒரு சிக்கல் (grid lock) ஏற்படும்.

இது நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். ஒரு சராசரி அமெரிக்கக் குடிமகன், வருடத்தில் ஒரு வாரத்தைப் போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறார். சீனாவின் பெய்ஜிங் நகரில், ஒருமுறை 100 மைல் தூரத்திற்கு ஒரு நெரிசல் ஏற்பட்டது. அதனைச் சரிசெய்ய 11 நாட்கள் ஆனது. இதுபோன்ற சாலை நெரிசல்கள் நம் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைகளின் ஒரு அறிகுறிதான். வாகனங்கள் நகரவே முடியாத கிரிட் லாக் ஏற்பட்டால் உணவு, மருத்துவம் போன்ற‌ அத்தியாவசியச் சேவைகளை நேரத்திற்கு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்படும். இதற்கு என்னதான் வழி? ஒரு பக்கம் பார்த்தால் நாடுகள், மக்கள் வளர போக்குவரத்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். அதே சமயம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் நகரங்கள், சாலைகளால் சமாளிக்க முடியாமல் போகும்.

இந்தச் சவாலைச் சமாளிக்க பில் ஃபோர்டின் அணுகுமுறை, நாம் சிறிதாக யோசிக்காமல் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பல மடங்கு முன்னரே பாய்ந்து செல்ல வேண்டும். பில்லியன் கணக்கில் வாகனங்களைச் சமாளிக்க‌ வழி - மேலும் சாலைகள் அமைப்பது அல்ல. அமெரிக்கா இரண்டாம் உலகப்போர் முடிந்து முன்னேற்றத்தின் பாதையில் சென்றபோது, ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. மாநிலங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. ஃபோர்டின் யோசனை - போக்குவரத்திற்குத் தேவையான ரயில், பொது மற்றும் தனிப்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த ஏற்பாடு.

வாகனங்கள், சாலைச் சந்திப்புகளில், சிக்னல்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளும். தானாகவே ஓடும் திறனுடைய இணைக்கப்பட்ட வாகனங்களால், சாலை விபத்துக்கள் குறையும். வாகனத்தை நிறுத்த இடம் தேடி அலைய வேண்டி இருக்காது. நாம் நம் இலக்கைச் சென்று அடையும் சமையம் எங்கே இடம் இருக்கிறது என்று அறிந்து, வாகனமே அந்த இடத்திற்கு வழிகாட்டும். இதனால் நேரமும் எரிபொருளும் மிச்சமாகும். இவை அனைத்தும் ஓர் இணைக்கப்பட்ட, நேரத்திற்குத் தகவல் பரிமாறிக் கொள்ளும் ஒரு ஸ்மார்ட் நெட்வொர்க்காக உருமாறிவிடும்.

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி பணி!

இந்தியாவில் 2015-ம் ஆண்டு நம் ஸ்மார்ட் சிட்டி பணி மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து 100 நகரங்கள் அமைக்கும் இலக்குடன் அறிவிக்கப்பட்டது. ஒரு போட்டியின் மூலம் இந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே இருக்கும் பகுதிகள் மேம்படுத்தப்படும். அதேசமயம் புதிய பகுதிகள் (green field projects) தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை தகவல் பரிமாறிக் கொள்ளும் ஸ்மார்ட் பகுதிகளாக உருவாக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி அமைக்கக் கூட்டமைப்பு

மேயரின் அழைப்பைத் தொடர்ந்து, பரத் அந்த மீட்டிங்கிற்குச் சென்றார். அங்கு போக்குவரத்துத் துறை மட்டும் அல்லாமல் - மருத்துவம், கல்வி, மின்சாரம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலிருந்து நிபுணர்கள் வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மேயர் பேசத் தொட‌ங்கியபோது, ஒரு புதிய `ஸ்மார்ட் சிட்டி’ அமைக்க ஒரு கூட்டமைப்பு (consortium) அமைக்க இருப்பதாகவும் அதில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அவர் பேச்சைக் கேட்ட பரத், இதுபோன்ற தொலைநோக்குடன் அமைக்கப்படும் நகரங்கள், நம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அவசியம் என்று உணர்ந்தார்.

போக்குவரத்துத் துறை குழு அறிவிக்கப்பட்டபோது, அதில் பரத்தின் பெயரும் இருந்தது. ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக ஓர் அறையில் கலந்து ஆலோசித்து தங்கள் பரிந்துரைகளை மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். மீட்டிங் தொடங்க‌ சில நிமிடங்கள் இருந்ததால், பரத் தன் மத்தியான காபியைக் குடித்துவிட்டு, தன்னால் என்னென்ன யோசனைகள் கூற முடியும் என்று யோசித்துக்கொண்டே அந்த அறைக்குள் சென்றார். ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் வெற்றி அடைய ஒவ்வொரு துறையும் தனித்தனியாக‌ச் செயல்படாமல், இணைந்து செயல்படுவது அவசியம்.

மின்சார வாகனங்கள் எதிர்கால நகரங்களில் ஒரு பெரிய பங்கு வகிக்கும் என்பதில் பரத்திற்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஒரு பக்கம் இந்தப் பொறுப்பு ஒரு பாரமாக இருந்தாலும், நம் எதிர்காலத் தலைமுறைகள் நல்ல தரத்துடன் வாழ்க்கையை வாழ வழி செய்யலாம் என்ற‌ ஒரு எண்ணமே பரத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக‌ இருந்தது.

(தொடரும்)