Published:Updated:

ஆர்.டி, எஃப்.டி... வங்கியில் போட்ட பணத்தை நாம்தான் கவனிக்க வேண்டும்! - உங்களை உஷார்படுத்தும் கட்டுரை

பேங்கிங்
பிரீமியம் ஸ்டோரி
News
பேங்கிங்

B A N K I N G

வங்கிகளின் செயல்முறைகள் கடந்த சில வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. ‘கணினி மயமாக்கல்’ மிகச்சிறிய அளவில் ஆரம்பித்தபோது அது இப்படியான பூதாகர உருவை எடுக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. வங்கி களுக்குக் கணினி உதவியாக இருந்த காலம் போய், கணினி செயல்பாடுகள் இல்லாவிட்டால் வங்கித் தொழில் ஸ்தம்பித்துவிடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற முதலீடுகள், எஸ்.ஐ.பி வழி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், இ.எம்.ஐ கட்டுதல், மின்சாரம் மற்றும் கேஸ் போன்ற சேவைகளுக்குப் பணம் செலுத்துதல், மற்றவர்களின் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் போன்ற சகல செயல்களையும் இரவோ பகலோ, நினைத்த மாத்திரத்தில் செய்ய முடிகிறது.

ஆனால், இந்தக் கணினி தொழில் நுட்பமே சில சமயம் நமக்கு பெரும் பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் கணினி உலகில் நாம் எத்துணை விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. நான் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் கையிலுள்ள எஃப்.டி-க்களை வங்கியின் இன்டர் நெட் பேங்கிங் பக்கம் காட்டும் எஃப்.டி-க்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது என் வழக்கம். நான் இப்படிச் செய்வதை என் குடும்பத்தார் கேலி செய்வார்கள். ஆனால், மூன்று மாதத்துக்கு ஒருமுறை இதைச் செய்தால்தான் எனக்கு நிம்மதி.

பேங்கிங்
பேங்கிங்

கடந்த டிசம்பர் 31-ம் தேதி என் கையில் இருந்த ஒரு பெரிய தொகைக்கான எஃப்.டி., இன்டர்நெட் பக்கத்தில் காணாமல் போனதைப் பார்த்து நான் அதிர்ந்துபோய் விட்டேன். உடனே வங்கியைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். ‘கம்ப்யூட்டர் டீமுக்கு ரெஃபர் செய்கிறோம்’ என்ற வழக்கமான பதில் வந்தது.

‘கம்ப்யூட்டர் டீம் கையை விரித்து விட்டால் என்ன செய்வது, வங்கிக்கு அலைய நேருமா, பணம் திரும்பக் கிடைக்குமா, அதற்கு எத்தனை மாதங்கள் பிடிக்கும்’ என்றெல்லாம் நினைத்து என் தூக்கம் தொலைந்தது. இரண்டு வாரங்கள் கழித்து, ‘உங்கள் பிரச்னையை சரிசெய்துவிட்டோம். நீங்கள் போட்ட எஃப்.டி பணம் உங்கள் கணக்கில் இருப்பதை நீங்களே செக் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்ல, ‘இந்தக் கணினிமயமாக்கலில் இப்படி எல்லாம் பிரச்னை வருமா?’ என நினைத்து, கவலைப்பட்டேன்.

ஓரளவு படித்த, வங்கியில் வேலை பார்த்த என் நிலையே இப்படி என்றால், சாதாரண மக்களின் நிலைமை பரிதாபம். டெக்னிக்கல் குளறுபடிகள் காரணமாக இப்படி நேர்வதை சாதாரண மனிதர்கள் பார்த்தால், அவர்களுக்கு மாரடைப்பே வந்துவிடும். இந்தத் தொழில்நுட்ப சிக்கல் எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனானப்பட்ட ஹெச்.டி.எஃப்.சி வங்கியே டெக் குளறுபடிகளால் படாதபாடுபட்டது என்பதை யார் மறுக்க முடியும்?

பாரம்பர்ய வங்கிகளுக்கு வங்கித் தொழில் மற்றும் டெக்னாலஜி என்னும் இரண்டு குதிரைகளின் மேல் ஒருசேர சவாரி செய்வது பெரிய சவால்தான். தினமும் புதிது புதிதாக சேவைகள் கணினி மயமாக்கப் படுவதில் அவற்றை சரிவரப் புரிந்து கொள்ள முடியாமல் ஊழியர்களே அவதிப்படுகிறார்கள். நம் ஊர் இன்டர்நெட் சேவையும் இன்னும் ஸ்திரப்படாததால், பாதி நேரம் வேலை செய்யாமல் முரண்டு பிடிக்கும் கம்ப்யூட்டர்கள் முன் ஊழியர்கள் தவம் கிடக்க நேர்கிறது.

இப்படி வங்கிகளின் கணினிமய மாக்கல், இருசாராருக்கும் சில கஷ்டங்களை விளைவித்தாலும், தவிர்க்க இயலாத ஒன்று. இது ஒருவழிப் பாதை. திரும்பிச் செல்ல இயலாது. குழப்பமோ, நஷ்டமோ சமாளித்துப் பயணித்தாக வேண்டும். இந்தப் பயணத்தை சுலபமாக்க வங்கி வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்று பார்க்கலாம்.

ஆர்.டி, எஃப்.டி... வங்கியில் போட்ட பணத்தை நாம்தான் கவனிக்க வேண்டும்! - உங்களை உஷார்படுத்தும் கட்டுரை

1. இன்று வங்கியின் செயல்பாடுகள் தாமதமின்றி நடைபெறுவது யார் கையிலும் இல்லை. நெட்வொர்க் சரியில்லை அல்லது டெக்னிக்கல் குறைபாடு என்றால் தலைகீழாக நின்றாலும், காரியங்கள் நடந்தேறாது. வங்கி ஊழியர்களை நொந்து பிரயோஜனமில்லை. ஆகவே, கடைசி நிமிட செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

2. வங்கிகள் தங்கள் நெட்வொர்க்கை பலப்படுத்தினாலும் திருடர்களும் தங்கள் மூளையைப் பயன்படுத்தி வருகிறார்கள். சாதாரண வங்கிச் செயல்பாடுகளில் கிடைத்த பாதுகாப்பு கண்டிப்பாக சைபர் செயல்பாடுகளில் இல்லை. ஆகவே, கூடியவரை பாதுகாப்பு மிகுந்த நெட்வொர்க்கையே பயன்படுத்த வேண்டும்.

3. அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுதல், லாக்இன் விவரங்களில் ரகசியம் காத்தல் மிக முக்கியம்.

4. ஆன்லைன் செயல்பாடுகளில் சுணக்கம் நேரும்பட்சத்தில் வங்கிக் கிளைகளுக்குச் சென்று உதவி கோரத் தயங்காதீர்கள்.

5. வங்கி தரும் ஸ்டேட்மென்ட்டு களை மாதம் ஒருமுறையாவது சரிபாருங்கள்.

6. ‘எல்லாம்தான் இன்டர்நெட் பேங்க்கிங்கில் வருகிறதே’ என்று அசட்டையாக இருக்காமல், அவ்வப்போது ஸ்க்ரீன் பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்வது முக்கியம். ஆன்லைனில் ஆரம்பித்த எஃப்.டி-களுக்கும் நகல் வைத்துக்கொள்வது நல்லது. (நண்பர் ஒருவரின் ஃபிக்ஸட் டெபாசிட் திடீரென்று பிரபல வங்கியின் இன்டர்நெட் பக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. அவர் திடுக்கிட்டுப் போய், வங்கியில் புகார் செய்ய, இரண்டு வாரம் கழித்து மீண்டும் தோன்றி இருக்கிறது.)

எல்லாவற்றுக்கும் மேலாக வங்கி ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள். கம்ப்யூட்டர் என்பது நம் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்ட இந்தக் காலத்திலும் கம்ப்யூட்டரை சரியாக இயக்கி வங்கிச் சேவை களைப் பெறத் தெரியாமல் திண்டாடுபவர்கள் பலர். அவர்கள் வங்கிக் கிளைகளைத் தேடி வந்தால், ‘எல்லாமே ஆன்லைன்ல இருக்கு. ஏன் பேங்குக்கு வந்து உயிரை எடுக்கிறீங்க?’ என்று எரிந்து விழாமல், அவர்களைக் கணிவுடன் நடத்தினால்தான் வாடிக்கையாளர்கள் நிம்மதியாக இருப்பார்கள். வாடிக்கை யாளர்கள் இல்லாமல் எந்த நிறுவனமும் இல்லைதானே!