Published:Updated:

கடன் தவணைக்கான சலுகை இருந்தும் வாடிக்கையாளர்களை வதைக்கும் வங்கிகள்... என்ன பிரச்னை?

Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das ( Photo: AP / Rajanish Kakade )

சலுகைக் காலம் அறிவித்த நாள் முதல் கடன் தவணையை உடனே செலுத்துமாறு வருமானம் இன்றி தவிக்கும் மக்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கட்டாயப்படுத்தி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக தமிழகம் முழுவதும் புகார் எழுந்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய மக்களுக்கு உதவும் வகையில் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் சலுகை அளித்தது ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை ஒரு சில வங்கிகள் மட்டும்தான் முறையாக நடைமுறைப்படுத்தியுள்ளன. நடைமுறைப்படுத்திய நிறுவனங்களும் தாமதக்கட்டணம், 3.5% வட்டி என்று ஒவ்வொருவரின் கடனிலும் சுமையை ஏற்றியுள்ளன.

இது ஒரு பக்கமென்றால், சலுகைக் காலம் அறிவித்த நாள் முதல் கடன் தவணையை உடனே செலுத்துமாறு வருமானம் இன்றி தவிக்கும் மக்களை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கட்டாயப்படுத்தி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக தமிழகம் முழுவதும் புகார் எழுந்து வருகிறது.

பாதிக்கப்படுள்ள மக்களிடம் கடன் தொகை வசூலிப்பது பல இடங்களில் பிரச்னையாகி வருகிறது. இதனால் பொறுக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி மனு அளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சுய உதவிக்குழு பெண்களிடம் பேசினோம்.

``கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு வேளைகளில் இருந்து மக்களும் பணிக்குச் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மக்கள் வாங்கிய கடன்களை வசூல் செய்யவும், ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால், அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் சில வங்கிகள், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் அத்துமீறி கடன் வசூலில் ஈடுபடுகின்றன. வேலையில்லாமல் வருவாய் இழந்து தவிக்கும் பொதுமக்கள் பல தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களைத் தவணை கட்ட நெருக்கடி கொடுத்து தற்கொலை செய்யும் அளவுக்கு டார்ச்சர் தருகின்றனர். இதை அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, மிரட்டி பணம் வசூலிக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் உட்பட நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

இந்த நிலையில் இந்தப் பிரச்னை சம்பந்தமாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்கும்படி ரிசர்வ வங்கிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளதன் மூலம் இந்தப் பிரச்னை அனைவரின் கவனத்துக்கும் வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``கொரோனா ஊரடங்கால் தொழில் முடக்கம், நிறுவனங்கள் மூடலால் வருமானம் இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டுவரும் நிலையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடனுக்கான தவணையைச் செலுத்த ஆகஸ்ட் வரை நீட்டிப்பு அளித்து உத்தரவிட்டது ரிசர்வ் வங்கி. ஆனால், பெரும்பாலான வங்கிகள் நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. சில நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உத்தரவு தங்களுக்குப் பொருந்தாது என்கின்றனர். கடன் தவணை கால நீட்டிப்பு கோரி அனுப்பும் விண்ணப்பங்களைப் பல வங்கிகள் நிராகரிக்கின்றன. இன்னும் சில நிறுவனங்கள் இந்த கோரிக்கை விண்ணப்பத்துக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கின்றன. கடன் பெற்று வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். இன்னும் சில நிறுவனங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார்கள். இதனால் மன உளைச்சலில் சிலர் தற்கொலை செய்கிறார்கள்.

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்

அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்டவையே. இவர்கள் மீது ரிசர்வ் வங்கி குற்ற நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை கொரோனா ஊரடங்கில் மக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கிய தவணைத் தொகையைத் திருப்பி வழங்கவும், கடன் செலுத்த தடை விதிக்கவும் உத்தரவிடுமாறு" கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு வரும் 31-க்குள் விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதேபோல், சுய உதவிக் குழுக்கள் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சலுகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயக மாதர் சங்க செயலாளர் சுகந்தியும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடன் தொகையை வசூலிக்கும் விவகாரம் தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாகி வருகிறது. அதில் தமிழகத்தில்தான் போராட்டங்களும் வழக்குகளும் நடந்து வருகின்றன. கடன் தொகையைச் செலுத்தும்படி சில வங்கிகளும் நுண்கடன் நிறுவனங்களும் மக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் போராட்டங்களும் நடந்துள்ளன.

சாதாரண நாட்களிலயே கடன் தவணையை வசூலிக்க மிக மோசமாக நடந்துகொண்ட நிதி நிறுவனங்கள் தற்போது கொரோனா காலத்திலும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் மிகக் கடுமையாக மக்களை டார்ச்சர் செய்து வருகின்றன.

இது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளுக்கும் கடனைப் பிறகு செலுத்தும் சலுகை உள்ளதாக நம்பி பலரும் அதற்கு விண்ணப்பித்தனர். ஆனால், அதை ஏற்றுக்கொண்ட பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கடன் தொகையை உடனே செலுத்தும்படியும், இல்லையென்றால் சிபில் ஸ்கோர் குறைந்து வேறு எங்கும் கடன் வாங்க முடியாது என்று மறைமுகமாக எச்சரித்து பயமுறுத்தியும் வருகிறார்கள். சிலரின் கடன் சலுகை கால விண்ணப்பத்தை நிராகரித்து லீகல் நோட்டீஸ் அனுப்பி மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Loan (Representational Image)
Loan (Representational Image)

இக்கட்டான நேரத்தில் அளிக்கப்பட்ட சலுகைக்கு அதிகமான வட்டி விதித்ததும் இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்தும்படி லோன் ரெகவரி குழுக்களிடம் சொல்லி மிரட்டியும் ரிசர்வ் வங்கியின் உத்தரவை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

இது பற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், ``கடன் தொகையை செலுத்துங்கள் என்று அறிவுறுத்துவது எங்கள் பணிதான், மற்றபடி எல்லோரையும் கட்டாயப்படுத்தவில்லை, கடனைத் திரும்பச் செலுத்தும் நிலையில் இருப்பவர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். மக்களிடம் வாங்கிய டெபாசிட்டில் இருந்துதான் மற்றவர்களுக்கு கடன் வழங்குகிறோம் என்பதைக் கடன் பெற்றவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்'' என்றனர்.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் வரும் உத்தரவில்தான் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு தெரியும் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.

அடுத்த கட்டுரைக்கு