பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டியை 10 அடிப்படை புள்ளிகள், அதாவது 0.1 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்த எஸ்பிஐ தற்போது உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பிற பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தப்போவதாகத் தெரிகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்.பி.ஐ. வட்டி நிர்ணயத்தில் பிற தனியார் வங்கிகளும் கூட எஸ்.பி.ஐ வங்கியைத்தான் பின்பற்றுகின்றன.
ரிசர்வ் வங்கியால் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப் படுத்தப்பட்ட எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது.
அதன்படி எல்லா காலத்துக்கான கடன்களுக்கான வட்டியையும் 10 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.1 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.
இதனால் வங்கியில் கடன் வாங்கியிருப்பவர்கள் செலுத்தும் மாதாந்தர தவணையான இ.எம்.ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ வங்கி மட்டுமல்லாமல் பிற வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் முடிவை விரைவில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பேங்க் ஆஃப் பரோடாவும், ஆக்சிஸ் வங்கியும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

இதனால் வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களுக்குமான இஎம்ஐ தொகை உயரும். அதேசமயம் யாருக்கெல்லாம் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகை உயரும் என்றால் எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ உயரும். பிற கடன்தாரர்களுக்கு இஎம்ஐ தொகை உயராது.
இப்போது எஸ்பிஐ வங்கியின் எம்சிஎல்ஆர் ஓராண்டுக்கு 7.1 சதவிகிதமாக உள்ளது. ஆனால் ஹெச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றில் 7.25 சதவிகிதமாக உள்ளது. பேங்க் ஆஃப் பரோடாவில் 7.35 சதவிகிதமும் ஆக்சிஸ் வங்கியில் 7.4 சதவிகிதமும் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் உள்ளது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியின் விகிதம் மற்ற வங்கிகளோடு ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.