Published:Updated:

பல வகை பணப் பலன்கள்... யாருக்கு எது சரியாக இருக்கும்..?

நிதித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
நிதித் திட்டம்

நிதித் திட்டம்

பல வகை பணப் பலன்கள்... யாருக்கு எது சரியாக இருக்கும்..?

நிதித் திட்டம்

Published:Updated:
நிதித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
நிதித் திட்டம்

சம்பளதாரர் அல்லாதவர்கள் தனது சொத்து, தனக்குப் பிறகு யார் யாருக்கு சேர வேண்டும் என்பதற்கு உயில் எழுதி வைத்துவிட்டால், அவருக்குப் பின் அவரது சொத்துகள் அனைத்தும் அவரது விருப்பப் படியே வாரிசுதாரர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடும். இதன் பயனாக, குடும்ப உறுப்பினர் களுக்குள் போட்டி, பொறாமை, பகை, உறவுகளைத் துண்டித்துக்கொள்வது போன்ற செயல்கள் அனைத்தும் தவிர்க்கப்படும். அந்தக் குடும்பமானது, குடும்பத் தலைவர் மறைவுக்குப் பின் சுபிட்சமாக இருக்கும்.

பல வகை பணப் பலன்கள்...
யாருக்கு எது சரியாக இருக்கும்..?

இதற்கு மாறாக, அந்தக் குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டாலோ, எழுதிய உயில் முறையானதாக அமையாவிட்டாலோ சொத்துப் பங்கீடானது நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டுவிடும் என்றாலும், குடும்ப உறுப்பினர் களுக்குள் விரோதம், குரோதம் துளிர்விட வாய்ப்பு ஏற்படுவதும் உண்டு.

இதே நிலைப்பாடுதான் அரசு ஊழியர்களின் நாமினேஷனுக்கு. அதாவது, சம்பளம், பென்ஷன், குடும்பப் பாதுகாப்பு நிதி, பொது சேமநல நிதி, சிறப்பு சேமநல நிதி, பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன் முதலான அனைத்துக்கும் தனித்தனியே முறையாக, தெளிவாக நாமினேஷன் செய்துவிட்டால், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். குடும்ப அமைதியை நிலை நாட்டலாம். அதன் விவரம் என்னவென்று பார்க்கலாம்.

குடும்ப உறுப்பினர் பட்டியல்...

தமிழக அரசு ஊழியர்கள் தாம் பணியில் சேர்ந்து ஓராண்டு நிறைவு பெற்றதும் தன் குடும்ப உறுப்பினர் யார் யார் என்பதை இதற்கான படிவம் 3-ல் குறிப்பிட்டு தனது கையொப்பம் மற்றும் தேதியுடன் அலுவலகத் தலைவர் அல்லது மாநிலக் கணக்காயருக்குச் சமர்ப்பித்துவிட வேண்டும்.

இத்துடன் பொறுப்பு தீர்த்துவிடாது. ஏனெனில், மணமாகாத ஊழியர் தனக்கு மணமான பிறகும், அதைத் தொடர்ந்து குடும்பத்தில் ஏற்படும் பிறப்பு – இறப்பு குறித்தும் அவ்வப்போது தெரிவித்து, இன்றைய நிலையில் யாரெல்லாம் குடும்ப உறுப்பினர் என்பதை இன்றைய நாள் வரை புதுப்பித்துக் கொண்டே (Update) இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் பட்டியலில் உள்ள நபர்களின் அடிப்படையில்தான், நாமினி இருக்க முடியும் என்பதால், இது மிக மிக முக்கியம்.

குடும்ப உறுப்பினர்களை அப்டேட் செய்வது பணியில் இருக்கும் வரை மட்டுமல்ல, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவசியமாக இருக்கிறது. ஏனென்றால், ஓய்வு பெற்ற பிறகு மகனோ, மகளோ உடல்தகுதியை இழக்கலாம். சித்த சுவாதீனத்துக்கு உள்ளாகலாம். இத்தகையவர்களுக்கு குடும்ப பென்ஷனுக்குத் தகுதியான வயது கடந்த பிறகும் குடும்ப பென்ஷன் கிடைக்கும் என்பதால், இது முக்கியம்.

இதேபோல், திருமணமாகி விவாகரத்தான மகள், விதவையான மகள் வயது கடந்த பிறகும் மணமாகாத மகள் ஆகியோருக்கும் தற்போது குடும்ப பென்ஷன் கிடைக்கும் என்பதால், ஓய்வு பெற்ற பிறகு, நிகழும் இத்தகைய நிகழ்வு களைக் கடைசியாகப் பணியாற்றிய அலுவலகத் தலைவர் மூலம் மாநிலக் கணக்காயருக்குத் தெரிவித்து இத்தகையவர்களும் குடும்ப பென்ஷன் பெற வழி வகுப்பது முக்கியம்.

ஒருவேளை, ஓய்வு பெற்ற ஊழியர் மரண மடைந்த பின் இத்தகைய நிகழ்வு ஏற்படுமாயின், அவரின் மனைவி மாநிலக் கணக்காயருக்குத் தெரிவிக்கலாம். எனவே, குடும்ப உறுப்பினர் அப்டேட் செய்வது அவசியமான ஒன்று.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

மூன்று வகை குடும்ப உறுப்பினர்கள்

இறந்துபட்ட ஊழியரின் பணப்பலனைப் பெற குடும்ப உறுப்பினர்கள் மூன்று பிரிவாக உள்ளனர். அதாவது, ஃபேமிலி பென்ஷனைப் பெறத் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் முதல் வகை; பணிக்கொடை உள்ளிட்ட இதர பணப் பலன்களைப் பெறத் தகுதி பெற்றவர்கள் இரண்டாவது வகை; இவ்விரண்டு வகை தவிர, பொது சேமநல நிதி (G.P.F) மற்றும் குடும்பப் பாதுகாப்பு நிதி (Family Security Fund) ஆகிய இரண்டையும் பெறத் தகுதியுள்ளவர்கள் மூன்றாவது வகை.

ஃபேமிலி பென்ஷன் பெறத் தகுதி உள்ளவர்கள்

இறந்துபோன அரசு ஊழியர் ஆண் எனில் அவரின் மனைவியும், இறந்த ஊழியர் பெண் எனில் அவரின் கணவருமே ஃபேமிலி பென்ஷன் பெறத் தகுதி உடையவர்கள். இவர்கள் இருவரும் வருமான வரம்பு பற்றிய நிபந்தனை ஏதுமில்லாமல் ஃபேமிலி பென்ஷன் பெறலாம். எனவேதான், ஃபேமிலி பென்ஷனுக்கு நாமினேசன் செய்வது கிடையாது. (சட்டபூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள கணவர் / மனைவி உள்பட)

இறந்துபோன ஆண் ஊழியரின் மனைவி முன்னேயே இறந்துபோயிருந்தாலும் அல்லது இறந்துபோன பெண் ஊழியரின் கணவர் மனைவிக்கு முன்பே இறந்து போயிருந் தாலும் கீழ்க்கண்டவர்கள் தன் தாய் அல்லது தந்தை மரணத்துக்குப் பின் ஃபேமிலி பென்ஷன் பெற விண்ணப்பிக்கலாம். வயது மூப்பின் அடிப்படையில் குடும்ப பென்ஷன் கிடைக்கலாம்.

25 வயதுக்கு உட்பட்ட மகன், 25 வயதுக்கு உட்பட்ட மணமாகாத மகள் (தத்தெடுத்த மற்றும் சட்டபூர்வமில்லாத மனைவி மூலம் பிறந்த மகன் மகள் உட்பட) மற்றும் ஊழியரின் ஓய்வுக்குப் பிறகு பிறந்த மகன், மகளும், மணமாகாத ஊழியர் எனில் தாய் தந்தையர்... இவர்கள் அனைவரும் ஊழியரைச் சார்ந்து வாழ்பவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

பணிக்கொடை, சிறப்பு சேமநிதி முதலியவற்றுக்குத் தகுதி உள்ளவர்கள்

இறந்தவர் கணவர் எனில் மனைவி, மனைவி எனில் கணவர், மகன் (தத்தெடுக்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமற்ற மனைவியின் மூலமான மகன் உட்பட), மணமாகாத மகள் (தத்தெடுக்கப்பட்ட மகள் மற்றும் சட்டபூர்வமல்லாத மனைவி யின் மகள் உட்பட) விதவை மகள் (மாற்றாந்தாய்/ மாற்றாந் தந்தை மகள், தத்தெடுத்த, சட்ட பூர்வமற்ற மனைவியின் விதவை மகள் உட்பட்ட) தந்தை / தாய் (தனிவிதி அனுமதிக்குமாயின் தத்தெடுத்த பெற்றோர் உட்பட்ட) மாற்றாந்தாய் 18 வயதுக்கு உட்பட்ட சகோதரர்கள் (மாற்றுத் தாய் - தந்தை மூலமான சகோதரர்கள் உட்பட) மணமாகாத மற்றும் விதவை சகோதரி (மாற்றாந்தாய் / தந்தை சகோதரி உட்பட) மணமான மகள்கள், முன்னமேயே இறந்து போன மகனின் குழந்தைகள் ஆகியோர்.

இந்தப் பிரிவுக்கு உட்பட்ட வர்கள் நாமினேஷன்படி இறந்து போன ஊழியரின் பணிக் கொடை சிறப்பு சேமநல நிதி (Special Provident Fund and Gratuity scheme) சம்பளம் - பென்ஷன் – கம்யூடேசன் உள்ளிட்ட வாழ்நாள் நிலுவை முதலானவற்றை, நாமினே ஷனில் குறிப்பிட்டபடி முழுமை யாகவோ, பகுதியாகவோ பெற முடியும்.

பொது சேமநல நிதி

ஆண் ஊழியர் எனில், அவரின் மனைவி, ஊழியரின் பெற்றோர், பிள்ளைகள், மைனர் சகோதரர்கள், மணமாகாத சகோதரிகள், இறந்துபோன மகனின் மனைவி மற்றும் குழந்தைகள், ஊழியரின் பெற்றோர் இல்லாதபட்சத்தில், அந்த ஆண் ஊழியரின் தந்தை வழி பாட்டனார் – பாட்டி பொது சேமநல நிதியைப் பெறலாம்.

இதில் கவனிக்க வேண்டியது, தன் மனைவி சட்டபூர்வமாகப் பிரிக்கப்பட்டுவிட்டார் என்றோ, தன் சமுதாயப் பாரம்பர்ய வழக்கப்படி ஜீவனாம்சம் பெறும் உரிமையற்றவர்; எனவே, குடும்ப உறுப்பினர் என்ற தகுதியை இழந்துவிட்டார் என்றோ, எழுத்து பூர்வமாக நிரூபித்து மாநிலக் கணக்காயருக்கு தெரிவித்துவிட்டால் அவரின் மனைவிக்கு ஜி.பி.எஃப் பெற தகுதியிருக்காது.

இறந்துபோனவர் பெண் ஊழியர் எனில், கணவர் பெற்றோர், பிள்ளைகள், மைனர் சகோதரர்கள், மணமாகாத சகோதரிகள், இறந்துபோன மகனின் விதவை மனைவி, குழந்தைகள், ஊழியரின் பெற்றோர் இல்லை எனில் ஊழியரின் தந்தை வழி பாட்டனார்-பாட்டி ஜி.பி.எஃப் பெறலாம்.

ஆனால், இந்த பெண் ஊழியர், ‘தனது குடும்ப உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து தனது கணவரை நீக்கிவிடுங்கள்’ என்று எழுத்துப்பூர்வமாக மாநிலக் கணக்காயருக்கு அறிவித்துவிட்டால் அவர் ஜி.பி.எஃப் பணம் பெறும் தகுதியை இழந்துவிடுவார்.

குடும்பப் பாதுகாப்பு நிதி

கணவருக்கு மனைவியும், மனைவிக்கு கணவரும் ரூ.5 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி பெற வாரிசாக இருப்பார்கள். மனைவி / கணவர் உயிரோடு இல்லாத பட்சத்தில், வாரிசுச் சான்றின்படி தொகை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

மேற்கண்ட விஷயங்களின் அடிப்படையில் எந்தெந்த பணப் பலனுக்கு எந்தெந்த குடும்ப உறுப்பினர்களை நாமினேஷன் செய்யலாம் என்பதை தமிழக அரசு ஊழியர் ஒருவர் நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதற்கேற்ப குடும்ப உறுப்பினர்களை நாமினியாக நியமனம் செய்யலாம்.

விருப்பப்படிதான் செய்யலாம்

குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிக மாகவும் பல்வேறு பிரிவுகளுக்கு உட்பட்டவர் களாகவும் இருந்தாலும் விதிக்கு உட்பட்டு தனது விருப்பப்படி அந்தந்தப் பிரிவுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களை அந்தந்தப் பணப் பலனுக்கு நாமினேஷன் செய்யலாம்.

எப்படியெனில், பணப் பலன் மொத்தத்தையும் கணவர் ஒருவர் தன் மனைவி ஒருவருக்கே நாமினேஷன் செய்யலாம். அதேபோல, மனைவியாக உள்ள ஊழியர் கணவருக்கே ஒட்டுமொத்தமாக அனைத்தை யும் நாமினேஷன் செய்யலாம்.

ஒவ்வோர் இனத்திலும் அனை வரையும்கூட நியமனம் செய்யலாம் மகன் அல்லது மகள் ஆகியோரின் பொருளாதார நிலைமைக்கேற்ப அவ்வப்போது நாமினேஷனை மாற்றி அமைக்கலாம்.

தனக்கு விருப்பமான மகன் அல்லது மகனுக்கே ஒட்டுமொத்தமாக நாமினேஷனை செய்யலாம். இதில் சட்டக் குறுக்கீடு கிடையாது. எனவே, எத்தனை தடவை வேண்டுமானாலும் நாமினேஷனை மாற்றி அமைக்கலாம்.

நன்கு பரிசீலனை செய்து முறையாக முழுமையாக நாமினேஷன் செய்து விட்டால், குடும்ப அமைதிக்குக் குந்தகம் ஏற்படாது என்பது நிச்சயம்.