Published:Updated:

50,000 டாலரைக் கடந்து புதிய உச்சத்தில் பிட்காயின்... வர்த்தகத் தடை விதிக்குமா மத்திய அரசு?

பிட்காயின்
பிட்காயின்

கடந்த ஓராண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு 293% உயர்ந்து, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை வழங்கியிருக்கிறது.

கடந்த மார்ச் 5-ம் தேதி, கிரிப்டோ கரன்சி என்று சொல்லப்படுகிற பிட்காயின் வர்த்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்குப்பிறகு, உலக நாடுகளைப் போல, இந்தியாவிலும் பிட்காயின் வர்த்தகம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

மத்திய நிதி அமைச்சகத்தின் முக்கியப் பிரிவாக விளங்கும் சி.இ.ஐ.பி (Central Economic Intelligence Bureau), 'பிட்காயின் பரிமாற்றங்கள் மீது 18% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாம்’ என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறையிடம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. மேலும், இந்த வரி விதிப்பின் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.7,200 கோடி அளவிலான வரி வருமானம் கிடைக்கும் என்றும், பிட்காயின் போன்ற தொட்டுணர முடியாத அல்லது கண்ணுக்குத் தெரியாத அனைத்து சொத்துகள் மீது நடக்கும் பணப் பரிமாற்றங்கள் மீதும் வரி விதிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இthaiத் தொடர்ந்து, நம் நாட்டில் கிரிப்டோ கரன்சிகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரில் கொண்டுவரப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்த இந்திய அரசின் நடவடிக்கை இப்படியிருக்க, அதில் முதலீடு செய்ய இந்த முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஏனெனில், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 7,198 டாலராக (ஜனவரி 1, 2020 நிலவரப்படி) இருந்த ஒரு பிட்காயின் மதிப்பு / விலை, ஆண்டு முடிவில் (டிசம்பர் 30, 2020 நிலவரப்படி) 28,348 டாலருக்கு வர்த்தகமானது. கடந்த ஓராண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு 293% உயர்ந்து, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை வழங்கியது.

சமீபத்தில்கூட, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், கிரிப்டோ கரன்சியான பிட்காயினில் சுமார் 10,000 கோடி ரூபாயை (1.5 பில்லியன் டாலர்) முதலீடு செய்திருப்பதாகவும், இனி தங்கள் நிறுவனங்களில் பொருள்கள், சேவைகளை வாங்க பிட்காயின் மூலம் பணம் செலுத்தலாம் என எலான் மஸ்க் அறிவித்ததை தொடர்ந்து, பிட்காயின் மதிப்பு 44,000 டாலரைத் தாண்டி வர்த்தகமானது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இந்த நிலையில், பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, 16.02.2021-ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக 50,000 டாலர்களைக் கடந்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரையில் பிட்காயின் மதிப்பு சுமார் 72% ஏற்றம் கண்டுள்ளது.

கிரிப்டோகரன்சிகள் அதிக ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வருவதால், அதிக லாபத்தை மட்டுமல்ல, அதிக இழப்பையும் ஏற்படுத்தக்கூடும். அதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin
அடுத்த கட்டுரைக்கு