Published:Updated:

கறுப்புப் பொருளாதாரமும் கறுப்புப் பணமும்! பணமதிப்பிழப்புக்குப் பலன் கிடைத்ததா..?

BLACK MONEY

பிரீமியம் ஸ்டோரி

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு 8 மணி... நம்மில் பலரும் மறக்க நினைத்தாலும் மனதை விட்டு அகல மறுக்கும் தினம். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்கிற முதன்மையான நோக்கத்துடன் வேறு சில நோக்கங்களையும் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி, பணமதிப்பு இழப்பு குறித்து `அதிரடியாக’ அறிவித்த நாள்.

கறுப்புப் பணம் என்றால் என்ன, கறுப்புப் பொருளாதாரம் என்றால் என்ன, இரண்டு ஒன்றா, இல்லை வேறுவேறா, பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன என்பது போன்ற விஷயங்களை அலசி ஆராய்ந்து பிரபல பொருளாதார பேராசிரியர் அருண்குமார் எழுதி வெளியான புத்தகம் `அண்டர்ஸ்டாண்டிங் தி ப்ளாக் எகானமி (Understanding the Black Economy)’ ஆகும். இவர் கறுப்புப் பொருளாதார ஆய்விலும், அபிவிருத்தி பொருளாதாரம், பொது நிதி, பொதுக்கொள்கை ஆகிய வற்றிலும் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

கறுப்புப் பொருளாதாரமும் கறுப்புப் பணமும்! பணமதிப்பிழப்புக்குப் பலன் கிடைத்ததா..?

பணமதிப்பு இழப்பு அறிவிப்பால் குறுகியகால அடிப்படையில் பல சிரமங்களும், பலனைவிட பாதகங்கள் தான் அதிகம் இருந்தன. நீண்டகால அடிப்படையில் இதனால் ஏதேனும் பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்தவரையில் பொருளாதார நிபுணர்களிடையே பலவிதமான கருத்துகள் நிலவி வந்ததுடன் சாமானியர் களிடையே குழப்பத் தையும் ஏற்படுத்தின.

பணமதிப்பு இழப்பு என்கிற கருத்தாக்கத்துக்கு இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆதரவு தெரிவித்தாலும் ஊழல் மற்றும் கறுப்புப் பொருளா தாரத்தைக் கையாள்வதில் இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். ஏனெனில், இது பிரச்னையின் மையத்தை, அதாவது, ஊழல் செய்யக்கூடிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் (Executive) மீது (அதாவது, காவல் துறை, அரசு அதிகாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்கள்) தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்கிறார்.

கறுப்புப் பொருளாதாரமும் கறுப்புப் பணமும்! பணமதிப்பிழப்புக்குப் பலன் கிடைத்ததா..?

நம் நாட்டில் கறுப்புப் பணம் வளர்ச்சி அடையக் காரணம், 1991-க்கு முன் இருந்த `லைசென்ஸ்-பெர்மிட்’ கொள்கையோ, அதற்குப் பிறகான `தாரளமயமாக்கல்’ கொள்கையோ இல்லை. அதுபோல, மற்ற காரணிகளான அதிக வரி விதிப்போ, அதிக பணவீக்கமோ, ஊகமோ (speculation) இல்லை. இந்த இரண்டு காலகட்டத்திலும் குற்றம் செய்பவர்கள் மற்றும் ஊடக வியலாளர்களிடையே மேற்குறிப் பிட்ட `மும்மூர்த்திகளு’க்கான (அதாவது, காவல்துறை, அரசு அதிகாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்கள்) நெருக்கம் காலப் போக்கில் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துவிட்டது. ஆக, கட்டுப் பாடுகள் இருந்தபோதும், கட்டுப் பாடுகள் தளர்ந்தபின்னும் இந்தப் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் மோசடிகளின் மதிப்பு அதிகரித்து வருவதே ஊழலும் கறுப்புப் பணமும் தொடர்ந்து அதிகரித்து வருவதற்குச் சான்றாகும். இந்தியாவினுடைய கறுப்புப் பொருளாதாரம் 2017-ம் ஆண்டு (அந்த ஆண்டு விலைவாசிப்படி) உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 62% ஆகும். அதாவது, ஏறக்குறைய 93 லட்சம் கோடி ரூபாய்!

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

எனவே, கறுப்புப் பணத்தையும், கறுப்புப் பொருளாதாரத்தையும் நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ற வாறு நடவடிக்கைகள் எடுத்தால் தான் இதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்த இரண்டு சொற்றொடர் களுக்கும் வேறுபாடு இருந்தாலும் பலரும் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்தி வருகின்றனர். கறுப்புப் பொருளா தாரம் என்பது ‘இணையான பொருளாதாரம்’ (parallel economy)இல்லை. `சட்ட ரீதியிலான’ பொருளாதாரத்துடன் (white economy) பின்னிப் பிணைந்ததாகும். ஒரே பொருளாதார நடவடிக்கை கறுப்பு, வெள்ளை வருமானத்தை உருவாக்கும். அதுபோல, முறையான மற்றும் முறைசாரா (unorganized) துறைகள் கறுப்புப் பணத்தை உருவாக்கும். சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் மட்டுமல்லாமல், சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகளையும் `சட்டத்துக்குப் புறம்பாக’ செய்வதன் மூலம் (உதாரணமாக, வரி ஏய்ப்பு) கறுப்புப் பணம் உருவாகிறது என்று விளக்கும் ஆசிரியர், கறுப்புப் பணம் குறித்து பொதுவாக நிலவிவரும் பல தவறான எண்ணங்களையும் நீக்குகிறார். உதாரணமாக, கறுப்புப் பொருளாதாரமும் ஊழலும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டாலும் அவை இரண்டும் ஒன்றல்ல. அது போல, இது பொதுத்துறை மட்டும் சார்ந்தது விஷயமில்லை, இது தனியார் துறையையும் பாதிக்கிறது.

கறுப்புப் பண உருவாக்கத்தைத் தடுப்பதற்கு நூலாசிரியர், ‘‘குறுகியகாலத் தீர்வாக இப்போது இருக்கும் பல்வேறு விதிகளையும் சட்டங்களையும் நிறை வேற்றுவதை வலுப்படுத்த வேண்டும். துறைசார்ந்த கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு செயல்படுவது மத்திய காலத்துக்கானத் தீர்வாகும். நீண்டகாலத் தீர்வாக, அமைப்பிலேயே சீர்த்திருத்தம் (structural reforms) கொண்டு வர வேண்டும். குறிப்பாக, தகவல் உரிமைச் சட்டத்தை சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தீவிரமாக நிறைவேற்றுவது, லோக்பால் நியமிப்பது, அபராதங்களை அமல்படுத்துவது, சட்டத்தை முறையாகக் கடைப்பிடிப்பது, இது சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு சுயாதீனமாக இயங்கும் உரிமையை வழங்குவது ஆகியவை குறுகிய காலத்துக்கான சில தீர்வுகள்’’ எனக் குறிப்பிடுகிறார்.

காவல் துறை, அதிகார வர்க்கம், சட்டத்துறை ஆகியவற்றில் உடனடியாக என்னென்ன சீர்திருத்தம் கொண்டு வர வேண்டுமோ, அதைச் செய்வது மத்திய காலத்துக்கான தீர்வு களாகும். நீண்டகாலத் தீர்வுகளாக அவர் குறிப்பிட்டிருப்பது அரசியல் கட்சிகளின் செயல்பாடு, தேர்தல் முறையில் சீர்திருத்தம், கார்ப்பரேட் துறையில் பொறுப்பை வலுவடையச் செய்வது போன்றவையாகும். ஆனால், கறுப்புப் பணம் என்கிற பூனைக்கு யார், எப்படி மணி கட்டுவது என்பது மிகப்பெரியக் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த சீர்த்திருத்தங் களுக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான யோசனை என்ன வெனில், அமைப்பு களையும் அரசையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் பொறுப்பாளிகள் ஆக்குவதாகும். இந்த மாற்றங்களைக் கடின மாக வலியுறுத்துவதற்கு ஒரு சமூக இயக்கம் அவசியமான ஒன்றாகும்.

சுமார் 140 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் கறுப்புப் பணம், கறுப்புப் பொருளாதாரம் குறித்து சில சுவாரஸ்யமான கருத்துகளைச் சொல்லியிருப்பதுடன், ஆணித் தரமாக சில விவாதங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய அனைத்துக் கருத்துகளையும் முடிவுகளையும் ஒப்புக்கொள்வது அவசியமில்லை என்றாலும் இந்தப் புத்தகம் செறிவான தகவல்களைக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு