ஹெச்.டி.எஃப்.சி குழும நிறுவனங்களை இணைக்க இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஹோல்டிங்ஸ் ஆகிய துணை நிறுவனங்கள் ஹெச்.டி.எஃப்.சி.யுடன் இணைக்கப்படும். இதனைத் தொடர்ந்து ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் ஹெச்.டி.எஃப்.சி இணைக்கப்படும். இந்த இணைப்புக்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
ஹெச்.டி.எஃப்.சியின் 25 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் வங்கிகளுடன் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த இரு முக்கிய நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுபோன்ற யூகங்கள் வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இணைப்பு அறிவிப்பு காரணமாக இந்த இரு பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய இரு பங்குகளும் 10 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
இந்த இரு நிறுவனங்கள் இணையும்பட்சத்தில் இந்தியாவில் சந்தை மதிப்பு அடிப்படையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி மாறும். அதாவது, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை இணையும்பட்சத்தில் அவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.14 லட்சம் கோடிக்குமேல் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.13 லட்சம் கோடிக்குமேல் இருக்கிறது.

ஆனால், அனைத்து ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதிக்குப் பிறகுதான் இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்கப்படும். ஆர்.பி.ஐ, செபி, என்ஹெச்பி, சி.சி.ஐ, ஐ.ஆர்.டி.ஏ, பி.எஃப்.ஆர்.டி.ஏ, என்.சி.எல்.டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் அனுமதி இதற்குத் தேவை. தவிர, பி.எஸ்.இ, என்.எஸ்.இ, பங்குதாரர்கள் என அனைத்து அனுமதிக்குப்பிறகு இந்த இணைப்பு அடுத்த கட்டத்துக்கு நகரும். நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்த இணைப்பு முடிவடையும் என எதிர்பார்ப்பதாக ஹெச்.டி.எஃப்.சி குழுமம் தெரிவித்திருக்கிறது.