Published:Updated:

பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் - சவால்களைச் சந்தித்து தடைகளைத் தாண்டி வருவாரா?

ரிஷி சுனக் ( Tolga Akmen )

குறிப்பாக சொல்லப்போனால், ரிஷி பிரதமராவதற்குக் காரணமே பொருளாதாரம்தான். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் 2022 பிப்ரவரி மாதம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிமிடம் முதல் கவனிக்கப்பட்ட நபராக ரிஷி விளங்கினார்.

பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் - சவால்களைச் சந்தித்து தடைகளைத் தாண்டி வருவாரா?

குறிப்பாக சொல்லப்போனால், ரிஷி பிரதமராவதற்குக் காரணமே பொருளாதாரம்தான். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் 2022 பிப்ரவரி மாதம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிமிடம் முதல் கவனிக்கப்பட்ட நபராக ரிஷி விளங்கினார்.

Published:Updated:
ரிஷி சுனக் ( Tolga Akmen )

பிரிட்டனின் பிரதமர் ஆகியிருக்கிறார் ரிஷி சுனக். `நம்மை ஆண்ட ஆங்கிலேயர் தேசத்தை இனி இந்தியர் ஒருவர் ஆளப் போகிறார்’ என்றெல்லாம் பேச்சுகள் எழுந்து, பெங்களுரூவின் மருமகன் இன்று இங்கிலாந்தின் பிரதமர் என்று கொண்டாட்டத்தைப் பார்க்க முடிகிறது.

பஞ்சாப் வம்சாவழியினரான சுனக்கின் பெற்றோர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த கென்யாவில் பிறந்து பிற்காலத்தில் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். அவ்வகையில் பார்த்தால், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் முதல்முறையாக பிரிட்டிஷ் பிரதமராகிறார் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். அவர். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது கூடுதல் அடையாளம்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

இவர் மீதான கவனத்தை பல மடங்கு அதிகரிக்க வைக்கும் இன்னுமொரு முக்கியமான காரணம், தீபாவளித் திருநாளில் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ரிஷி தேர்ந்தெடுக்கப்படுவது அரசியல்ரீதியாக பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு மைல் கல். கூடவே பொருளாதார ரீதியிலும்தான்.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், ரிஷி பிரதமராவதற்கு காரணமே பொருளாதாரம்தான். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் 2022 பிப்ரவரி மாதம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நிமிடம் முதல் கவனிக்கப்பட்ட நபராக ரிஷி விளங்கினார். கோவிட் காலகட்டத்தில் நாடு முழுவதும் பொது முடக்கம் காலத்தில் மக்கள் பாதிக்காத வகையில் திறம்படக் கையாண்டார்.

ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் மீதான அதிருப்தியில் ரிஷி சுணங்க் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து 31 அமைச்சர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பதவி விலகினர். போரிஸ் வேறு வழியில்லாமல் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்தார்.

அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷியும், லிஸ் (எலிசபெத்) ட்ரஸ்ஸும் மோதினர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், குறைந்தபட்சம் 100 எம்.பி-க்கள் ஆதவரவு இருந்தால் மட்டுமே பிரதமராகப் போட்டியிட முடியும். இது போட்டியிடுவதற்கான தகுதி மட்டுமே. இப்படி போட்டியிடும் வேட்பாளர்களை சுமார் 1,80,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து வாக்கெடுப்பில் தேர்ந்தெடுப்பார்கள்.

ரிஷி சுனக் -  லிஸ் ட்ரஸ்
ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ்

எலிசபெத் ட்ரஸ்ஸைக் காட்டிலும் ரிஷிக்கு அதிக எம்.பி.க்கள் ஆதரவு இருந்தாலும் கட்சி வாக்கெடுப்பில் எலிசபெத் வெற்றி பெற்று பிரதமரானார். அவர் பிரதமரானதும் 70 ஆண்டு காலம் அரசாண்ட எலிசபெத் மகாராணி இறந்தது ஒரு பக்கம் நடந்தாலும் அது பொது மக்களை பாதிக்காத விஷயம். ஆனால் மக்களையும், தேசத்தையும் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சியில் ஆழ்த்திய விஷயங்கள் பொருளாதார ரீதியிலானவை.

அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு இந்த வருடம் 20 சதவிகிததுக்கும் கீழே சரிந்தது. சர்வதேச முதலீட்டாளர்கள் பிரிட்டிஷ் பவுண்டில் வைத்திருந்த சொத்துகளை விற்று டாலராக மாற்றும் வேலையில் இறங்கினார்கள்.

நாணய மாற்று விகிதம் மோசமாகப் போனால், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பயனடையும். உதாரணத்துக்கு அமெரிக்க டாலர் ரூ.70 இருக்கும்போது 100 டாலருக்கு ஏற்றுமதி செய்தால் ரூ.7,000 கிடைக்கும். இதுவே $1 = ரூ.80 எனும்போது 100 டாலர் ஏற்றுமதி ரூ.8,000 ஈட்டித் தரும். எனவே, ஒரு நாட்டின் நாணய மதிப்பிழப்பு ஏற்றுமதிக்கு உதவும்.

பிரிட்டன் பெரும்பாலும் இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் தேசம். அப்படிப்பட்ட ஒரு நாட்டின் நாணயம் தனது மதிப்பை இழக்கும்போது முன்பு இறக்குமதி செய்த அதேயளவு பொருளை வாங்குவதற்கு அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். பிரிட்டிஷ் பவுண்ட் தனது மதிப்பை 20% இழந்தால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.

ஏற்கெனவே இங்கிலாந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பணவீக்கத்தில் உள்ளது. விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறி ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 10 சதவிகிதமாக உயர்ந்தது. பொது மக்களை இது வெகுவாக பாதித்துள்ளது.

பிரிட்டனின் பொருளாதாரப் பிரச்னை திடீரென முளைக்கவில்லை. இது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் (Brexit) நிகழ்வில் இருந்து தொடங்கியது.

பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் - சவால்களைச் சந்தித்து தடைகளைத் தாண்டி வருவாரா?

பின்தங்கிய பீகார், உ.பி மாதிரியான மாநிலங்களில் இருந்து குறைந்த சம்பளத்தில் கட்டட வேலைக்கு சென்னை மாதிரியான ஊர்களுக்கு ஆட்கள் வருவதுபோல, ருமேனியா, போலந்து முதலிய பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் வந்து அடிமட்ட வேலைகளில் மக்கள் ஈடுபடுவது இயல்பு.

ஆங்கில மக்கள் மத்தியில் இதற்கு எதிரான ஒரு பொது மனநிலை நிலவியது. நாட்டின் வேலையின்மைக்கும், பொருளாதார மந்தநிலைக்கும் இந்த மலிவு விலை ஐரோப்பிய ஆட்களே காரணம் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. நாம் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து அங்கம் வகித்தால் நம்மை இவர்கள் சுரண்டிவிடுவார்கள், எனவே, நாம் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதே தீர்வு என முடிவெடுத்தார்கள்.

அதுதான் பிரெக்ஸிட், அதன்பிறகு ஐரோப்பியர்கள் பிரிட்டனில் வந்து வேலை செய்ய விசா வேண்டும். அந்த விசாவுக்கு ஒரு கம்பெனி விண்ணப்பிக்க வேண்டும். இதனால் மலிவு விலை பணியாளர்கள் கிடைப்பது நின்றுபோனது. வேலைகள் தேங்க ஆரம்பித்தன. ஆட்பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம் படிப்படியாக நடந்தது. இது ஊழியர்களை மட்டும் பாதிக்கவில்லை. ஐரோப்பியாவிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பொருள்களையும் பாதித்தத்து. முன்பு சரளமாக நடந்த சரக்குப் பரிமாற்றம் இப்போது சர்வதேச இறக்குமதியானது.

உதாரணமாக, முன்பு இத்தாலியிலிருந்து சிமென்ட் வாங்கியதற்கும், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு சிமென்ட் கொண்டுவருவதற்கும் உள்ள வித்தியாசம்தான். ஒரே நாட்டுக்குள் நடக்கும் வர்த்தகம்போல, இப்போது அதே இத்தாலியிலிருந்து பிரிட்டனுக்கு சிமென்ட் வாங்கினால், பாகிஸ்தானிலிருந்து சென்னைக்கு சிமென்டை இறக்குமதி செய்வது போல என்றாகிவிட்டது.

2020 ஜனவரி இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது. (நல்ல வேளையாக) கோவிட் பெருந்தொற்று உருவெடுத்ததால் பாதகங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை. அல்லது அதன் விளைவுகளை அப்பட்டமாக அனுபவிப்பது தள்ளிப்போனது.

பிரெக்ஸிட் பாதகங்களை கோவிட் பாதகம் என செளகரியமாக ஒதுக்கி நிம்மதியும் அடைந்தார்கள். காய்கறி, இறைச்சி, கட்டுமானப் பொருள்கள் உள்ளிட்ட எல்லாவற்றின் விலையுமே ஏறிவிட்டது. மொத்தத்தில் பிரெக்ஸிட், அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேரெதிரான மோசமான விளைவுகளை உண்டாக்கியது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ரஷ்ய உக்ரைன் யுத்தம் பிரிட்டனின் பிரச்னைகளை மேலும் ஆழமாக்கியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த பிரிட்டன் உள்ளியா மேலை நாடுகள் ரஷ்யப் பொருள்களுக்கு, ரஷ்ய முதலீடுகளுக்கும் தடை விதித்தன. ஆனால், அவை மறந்துபோன விஷயம் பிரிட்டனின் பெருமளவு எரிபொருள் தேவையை ரஷ்யாதான் நிறைவு செய்து வந்துள்ளது என்பதைத்தான்.

தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் மற்றும் மின் தேவைகளுக்கான செலவும் பிரிட்டனில் வெகுவாக உயர்ந்தது. ஒரு சராசரி குடும்பத்தின் மின் மற்றும் எரிவாயு செலவு 2 அல்லது 3 மடங்கு ஏறியது. நவம்பர் தொடங்கி அடுத்துவரும் நான்கு மாதங்கள் கடுமையான குளிர்காலம். கோடை காலத்தில் இரவு 9 மணி வரை இருக்கும் சூரிய வெளிச்சம் குளிர்காலத்தில் மாலை 4 மணிக்கே இருட்டிவிடும். வழக்கமாகவே, எரிபொருள் & மின்தேவை குளிர்காலத்தில் பெருகும். இவ்வருடம் எரிபொருள் தட்டுப்பாடு, கட்டுக்கடங்காத விலையேற்றம் என்ற பேரச்சம் நிலவுகிறது.

இன்னொரு பக்கம், வங்கிக் கடன்களின் வட்டியும் பன்மடங்கு ஏறிவிட்டது. கோவிட் காலத்தில் 1.5% இருந்த வீட்டுக் கடன் வட்டி வீதம், இவ்வருட தொடக்கத்தில் 2.5% எனவும், தற்போது 6% எனவும் ஏறிவிட்டது.

25 வருட 2,00,000 பவுண்டு வீட்டுக் கடன் 1.5% வட்டி விகிதத்தில் மாதத் தவணை 800 பவுண்டு வரும். இதுவே 2.5% வட்டி எனில், மாதம் 897 பவுண்டாக உயரும். இப்போது 6% வட்டியில் மாதம் 1,288 பவுண்டு கட்ட வேண்டிவரும். பல பேர் தமது வீட்டுக் கடனை திரும்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். அல்லது 20 வருடத்துக்குப் பதில் 30 - 35 வருடம் கட்ட நேரிடும்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

இதைவிடப் பெரிய சிக்கல், பென்ஷன் முதலீடுகளை பாதிப்பது. பிரிட்டனின் பாதிக்கு மேற்பட்ட தனியார் சேமிப்புகள் பென்ஷன் திட்டங்களில் உள்ளன. அவை பெரும்பாலும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன. 2% வட்டி இருக்கும் பொதுக் கடன் பாத்திரம் 98 பவுண்டுக்கு விற்கிறது எனில், 8% வட்டி சமயத்தில் அதே கடன் பத்திரத்தின் சந்தை மதிப்பு 92 பவுண்டாகக் குறைந்துவிடும். ஆக, வட்டி வீதம் ஏறுவது, கடன் பாத்திரங்களின் மதிப்பு குறைவது எல்லாமே பல ஆண்டு காலம் மக்கள் சேமித்து வைத்த பென்ஷன் நிதியையும் பாதிக்கிறது.

இத்தனை பிரச்னைகளோடுதான் லிஸ் ட்ரஸ் பிரதமரானார். அவர் வெளியிட்ட சில அறிவிப்புகள் இந்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் சிக்கலாக்கிவிட்டது. அதனால் அவர் 45 நாளில் பதவி விலகிவிட்டார். இப்போது மீண்டும் ரிஷி சுனக் பொறுப்புக்கு வருகிறார்.

சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காத பெருமை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்தது உண்டு. அந்தப் பாரம்பர்யத்துக்கு திருஷ்டி பொட்டு மாதிரி 2022 அமைந்துவிட்டது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் பிரிட்டிஷ் வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் நாட்டையும், பொருளாதாரத்தையும், அரசியல் எதிரிகளையும் எப்படி கையாளப்போகிறார் என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

- லண்டனில் இருந்து செல்லமுத்து குப்புசாமி