Published:Updated:

`100 ஆண்டுகளில் இந்தியா பார்த்திராத பட்ஜெட்!' - பட்ஜெட் 2020-21 குறித்து நிர்மலா சீதாராமன்

Finance Minister Nirmala Sitharaman
Finance Minister Nirmala Sitharaman ( Photo: AP )

வரப்போகிற மத்திய பட்ஜெட்டின் மீது பாமர மக்கள் முதல் துறை சார்ந்த நிபுணர்கள் வரை எதிர்பார்ப்புகள் ஏராளம்.

வருகிற நிதி ஆண்டுக்கான (2021-2022) மத்திய பட்ஜெட்டில், பல விஷயங்கள் எதிர்பார்க்கப்படும் வேளையில், சமீபத்தில் இந்திய தொழில் கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கும் விஷயம் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. மிக நீண்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டபோதும், இன்னும் தொழில்துறைகள் முழுமையாகத் தன் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.

மோடி
மோடி

ஏற்கெனவே வேலையில்லா நிலைமை இருந்து வந்த நிலையில், தற்போது வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான், வரப்போகிற மத்திய பட்ஜெட் '2020-21' தாக்கல் ஆகவிருக்கிறது. பாமர மக்கள் முதல் துறை சார்ந்த நிபுணர்கள் வரை பட்ஜெட் மீதுள்ள எதிர்பார்ப்புகள் ஏராளம்.

"இந்திய பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அடுத்த நிதியாண்டுக்கான (2021-2022) மத்திய பட்ஜெட், வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும்.

நிர்மலா சீதாராமன் அறிவித்த விடுமுறை பயணச் சலுகை... யாருக்கு லாபம்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தூக்கி நிறுத்தவும், தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் யோசனைகளை எனக்கு அனுப்பி வையுங்கள். நான் நிதி அமைச்சர் ஆன பிறகு ஒவ்வொரு வருடமும் உங்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று, அதிலிருக்கும் விஷயங்களையும் சேர்த்துதான் இதுவரையிலான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். அப்படிச் செய்வதன் மூலம், இந்த முறை இதற்கு முன்பு யாரும் பார்த்திராத பட்ஜெட்டை தயாரிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுபோல், ஒரு பெருந்தொற்றுக்குப் பிறகு, தயாரிக்கப்படும் பட்ஜெட்டை கடந்த 100 ஆண்டுக் கால இந்தியா பார்த்திருக்காது.

Budget
Budget

தொழில்துறையினரின் யோசனைகளைப் பெறாமல் இது சாத்தியமில்லை. அவர்களது விருப்பப் பட்டியல் இல்லாமல், முன்னெப்போதும் இல்லாத பட்ஜெட்டை என்னால் தயாரிக்க முடியாது.

வளர்ச்சிக்குப் புத்துயிரூட்ட கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். நமது பரப்பளவு, மக்கள்தொகை, பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் திறன் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, சர்வதேச வளர்ச்சிக்கான எந்திரமாக இந்தியா திகழும். சர்வதேச பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று தயக்கமின்றி சொல்வேன்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு