Published:Updated:

`பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மோடி கைவிட்டுவிட்டார்!’- பிரெஞ்சுப் பொருளாதார வல்லுநர் கவலை

மோடி
மோடி

நன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடி திடீரென பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டு அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

இந்தியத் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும்விதமாகப் பல்வேறு மறுசீரமைப்பு முயற்சிகளை எடுத்துவந்த பிரதமர் மோடி, தற்போது அதிலிருந்து விலகி அரசியல் விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியதால், அவரின் முயற்சிகள் அனைத்தும் பாதியிலேயே நின்றுவிட்டதாக பிரெஞ்சுப் பொருளாதார வல்லுநர் கய் சோர்மன் கூறியிருக்கிறார்.

இந்தியப் பிரதமரின் கவனம் திசைமாறியதால் தற்போது பாதகமான சூழலை இந்தியா சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பிரெஞ்சுப் பொருளாதார வல்லுநர் கய் சோர்மன்
பிரெஞ்சுப் பொருளாதார வல்லுநர் கய் சோர்மன்
wikipedia

`உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அச்சத்தில் இருக்கிறார்கள். தற்போது பாதுகாப்பு குறித்த சிந்தனையே அனைவரிடத்திலும் வலுவாக இருக்கிறது. மோடி ஆட்சிக்குவந்த புதிதில் தொழில்முனைவோர்களுக்கு சர்வதேச சந்தையை உருவாக்கி ஊக்குவித்தார். ஊழலைக் கட்டுக்குள் வைத்திருப்பது, மேக் இன் இந்தியா திட்டம் போன்றவற்றின் மூலமும் நம்பிக்கையளித்தார்.

இறங்கும் பொருளாதாரம்... ஏறும் பங்குச் சந்தை... ஐந்து காரணங்கள்!

இப்படி நன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடி திடீரெனப் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டு அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இது இந்தியாவுக்கும் அவரது அரசுக்கும் கெட்ட பெயரைச் சம்பாதித்துக்கொடுத்துள்ளது' என்றார்.

எனினும் இந்துத்வா அரசியல் குறித்தோ, குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்தோ கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்தியப் பொருளாதார மந்த நிலை
இந்தியப் பொருளாதார மந்த நிலை
vikatan

உலகப்பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள சூழலில் அவரது அரசியல் செயல்பாடுகள் இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தையும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் புள்ளிவிவரங்கள் எடுக்கப்படும் தரம் சரியானதாக இல்லை என்று குறிப்பிட்டவர், ஜி.டி.பி வளர்ச்சி விகித விவரங்களும் நம்பகத்தன்மையோடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பொருளாதார மந்தநிலை குறித்து இந்தியாவைச்சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் குறைகூறிவரும் சூழலில் தற்போது வெளிநாட்டுப் பொருளாதார வல்லுநரும் குறைகூறியிருப்பது அனைத்து தரப்பினரையும் கவனிக்க வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு