Published:Updated:

வணிகத் தலைமை கொள் - 12

வணிகத் தலைமை கொள்
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமை கொள்

வணிகம் ஆரம்பித்த 2007-ல், எங்கள் சப்ளையர் ஒருவருக்கு ரூபாய் அறுபதாயிரத்துக்கு நான் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனது.

ஒரு நிறுவனமாக நிதி நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களையும், அவை எப்படி நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக முடியும் என்பதையும் சென்ற வாரம் பார்த்தோம். இந்த வாரம், ஒரு வணிகனாக, வணிகத்தின் தலைவனாக, பண விஷயங்களில் எப்படிச் செயல்பட்டால் நல்லது என்று பார்ப்போம்.

உங்கள் பணம் வேறு, நிறுவனத்தின் பணம் வேறு:

பல சமயங்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் பணம் இருந்ததில்லை. ஆனால், நிறுவனத்தில் இருக்கும். ஒருநாள்கூட நிறுவனத்தின் பணத்தை எனக்கான பணமாக நான் நினைத்ததில்லை. நிறுவனம் என்னுடையதுதான். எனவே அதன் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து எந்தச் செலவு செய்தாலும் யாரும் என்னைக் கேட்கப் போவதில்லை. ஆனால், செய்ய மாட்டேன்.

காரணம், நிறுவனத்தின் பணம் என்பது என் பொறுப்பு. அது என் அதிகாரமல்ல. நிறுவனம் மாதா மாதம் தரும் சம்பளம் மட்டுமே எனது அதிகாரம். என் நிறுவனத்தின் பணம் என் பொறுப்பு என்பதால்தான், நான் சென்று எங்கள் அக்கவுன்டன்டிடம் நூறு ரூபாய் கேட்டாலும், வவுச்சரில் என் பெயரெழுதி, ‘அட்வான்ஸ்' என எழுதி, என் கையெழுத்து வாங்கிக்கொண்ட பிறகே கொடுக்கும் நடைமுறையை நான் உருவாக்கியிருக்கிறேன்.

வணிகத் தலைமை கொள் - 12

ஒருநாளும் மாலையில் வீடு திரும்பும்போது கல்லாவில் இருந்து பத்து ரூபாய் நான் எடுத்ததில்லை. கல்லாவின் பணம் நேரே வங்கிக்கு அல்லது வரவு செலவுக் குறிப்பேட்டுக்குச் (Cash book) சென்றுவிடும். இவ்வாறு நிறுவனத்தின் பணத்தை என் பணமாக நினைக்காமல், என் பொறுப்பாக எண்ணிச் செயல்பட்டதால்தான், ஒவ்வொரு ரூபாயையும் செலவழிக்காமல் செலவாக்கம் செய்ய முடிந்தது.

எல்லோராலும் தங்கள் உழைப்பால் பணத்தை ஈட்ட முடியும். ஆனால், வணிகனுக்குப் பணத்தைப் பெருக்கத் தெரிய வேண்டும். நிறுவனத்தின் பணம் அவனது பொறுப்பு எனக்கொண்டால் நிச்சயம் அது சாத்தியம்.

லாபத்தை வணிகத்திலேயே இடுங்கள்:

2007-ம் ஆண்டில் வணிகம் தொடங்கிய நான், ஒவ்வொரு வருடமும் நிறுவனம் ஈட்டிய லாபத்தை வணிகத்திலேயே மீண்டும் முதலீடாகத்தான் செய்திருக்கிறேன். எனக்கென நான் எடுத்துக்கொள்வது Remuneration எனப்படும், உழைப்புக்கான ஊதியம் மட்டுமே. அப்படி லாபத்தை வணிகத்திலேயே இட்டதன் பலன், இன்று நிறுவனத்தின் மூலதனம் அதிகமாகி இருக்கிறது. மூலதனம் அதிகமானதால் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக OD எனப்படும் வங்கி தரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பின் மூலம் வணிகத்தைப் பன்மடங்காக உயர்த்தலாம்.

வணிகத் தலைமை கொள் - 12

சமீபத்தில் எங்கள் அலுவலகத்துக்கு ஒரு வங்கியின் அலுவலர்கள் வந்தார்கள். எங்கள் நிறுவனத்தின் Balance sheet-ஐ (நிதி அறிக்கை) ஆய்வு செய்துவிட்டு அவர்கள் தருவதாகச் சொன்ன OD தொகை, என் எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருந்தது. காரணம், நிறுவனத்தின் முதலீட்டு அளவானது அவர்கள் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்தது. ஒன்றுமே இல்லாமல் வணிகம் தொடங்கியவன்தான். ஆனால், ஒவ்வொரு வருடமும் ஈட்டிய சிறுலாபத்தை வணிகத்திலேயே இட்டதால் அது வளர்ந்து பெரிதானது. அதற்கான பெரும்பலனும் இதோ இன்று கிடைக்கிறது.

வணிகம் ஆரம்பித்த 2007-ல், எங்கள் சப்ளையர் ஒருவருக்கு ரூபாய் அறுபதாயிரத்துக்கு நான் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனது. வங்கிக்கு அந்தக் காசோலை வந்த தினம், அறுபதாயிரம் கேட்டுப் பத்துப் பேருக்கு அழைத்திருப்பேன். யாரும் தரவில்லை. அவர்கள் மேல் தவறில்லை. நான் அப்போதுதான் தொழில் தொடங்கியிருந்ததால், கொடுத்த பணம் எப்படித் திரும்ப வரும் என சந்தேகப்பட்டிருக்கலாம். அல்லது நான் கடைசி நேரத்தில் கேட்டதால், பணம் புரட்ட அவகாசம் இல்லாமலிருந்திருக்கும்.

எது எப்படியோ, இன்று நாங்கள் தரும் ஒரு காசோலைகூட திரும்ப வராது. காரணம், வங்கிக்கணக்கில் தேவையான பணம் இருக்கிறது. அது எப்படி வந்ததெனில், வந்த லாபத்தை மீண்டும் வணிகத்தில் இட்டதாலேயே! வாழ்க்கையில், வணிகத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பது முக்கியமல்ல. எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

உடைமைகளைக் கூட்டுங்கள்:

ஒரு நிறுவனத்தின், வணிகனின் வலிமையை அவர்களின் உடைமைகளும் (Assets) தீர்மானிக்கின்றன. சொந்த வீடு, சொந்த அலுவலகம், சொந்த உற்பத்தி இயந்திரங்கள் போன்றவை கனவு மட்டுமல்ல; நம் வணிகத்துக்குக் காலப்போக்கில் உதவும் உத்தரவாதங்கள் அவை. அடுத்த கட்டத்துக்குச் செல்ல உங்களுக்கு முதலீடு தேவைப்படும்போது, வங்கிக்கு வரும் பக்கத்துணை இந்த உடைமைகளே.

ஒரு வணிகன் உடைமைகளை மேம்படுத்தினால், அவன் கந்துவட்டிக்காரர்களிடம் போய் நிற்கத் தேவையில்லை. சம்பாதித்ததை வட்டிக்காரர்களிடம் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீடு வரத் தேவையில்லை. உடைமைகள் இருப்பின் வங்கிகளின் உதவி கிடைக்கும். ஆகையால் சிறுகச்சிறுக உடைமைகளைப் பெருக்குங்கள். நாளை நமக்கு ஏதோ ஒரு பெரும் பிரச்னை என வரும்போதும், அந்த உடைமைகள் நம்மை மீட்கும். அவற்றுக்கு ஈட்டுக்கடன் வாங்கியோ, விற்றுவிட்டோ, வியாபாரத்தைப் பார்க்கலாம்.

இச்சமயத்தில் நான் கடைப்பிடித்த இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். இதுவரை நான் வட்டிக்கார தனிநபர்களிடம் பணம் வாங்கியதில்லை. வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கி வியாபாரம் செய்தால் நாம் என்றைக்குமே நிம்மதியாக இருக்க முடியாது. அவர்களிடம் மீண்டும் மீண்டும் மாட்டிக் கொண்டும் விடுபட்டுக்கொண்டும் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் நாம் அவர்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பிறவிகளாக மாறியிருப்போம். அந்த அவலம் யாருக்கும் வரக்கூடாது. வட்டிக்காரர்களிடம் வணிகத்துக்காகப் பணம் வாங்காதீர்கள். வங்கிக்கடனை அடைக்க முடியும். ஆனால் ஐந்து வட்டி, பத்து வட்டிக் கடன்களை வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் அடைக்க முடியாது.

வரவு செலவுக் கணக்கை வாரம் ஒருமுறை பாருங்கள்:

நான் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் நிறுவனத்தின் Debtor/ Creditor அறிக்கையை அக்கவுன்டன்டிடம் கோருவேன். Debtor என்பவர் நமக்குப் பணம் தர வேண்டியவர். Creditor-க்கு நாம் தர வேண்டும். வணிகம் வளரும்போது நிச்சயம் இரு சாராரும் இருப்பார்கள். ஆனால், ஒரு நல்ல வணிக அறிக்கையில், நமக்குத் தர வேண்டியவர்கள் கூடுதலாகவும், நாம் தர வேண்டியவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். எனவே, ஒரு பக்கம் வணிகத்தைப் பெருக்கும்போது, மறுபக்கம் கடன்களைக் குறைத்துக்கொண்டே வர வேண்டும். இல்லையெனில் வணிகம் செய்து என்ன பலன்?

இந்த வரவு செலவுக் கணக்கை வாரம் ஒருமுறை பார்த்தால்தான் நாம் எங்கிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியும். இல்லையெனில் திடீரென ஒருநாள் நாம் பள்ளத்தில் வீழ்ந்திருப்பது புரியவரும். மேலே ஏறி வரும் வழிகளும், அவகாசங்களும் இன்றித் திக்கற்ற நிலையே எஞ்சியிருக்கும்.

உங்கள் வணிகப் பயணத்தில் நீங்கள் முன்னோக்கி நடக்கிறீர்களா அல்லது பின்னால் போய்க்கொண்டிருக்கிறீர்களா என்பதை அறிய வரவு செலவுக் கணக்கை வாரம் ஒரு முறையேனும் பாருங்கள்.

பார்த்தால்தானே வரவேண்டியதைப் பெறவும், தர வேண்டியதைச் செலுத்தவும் வழிகளைத் தேட முடியும். அதுதான் வணிகம். அதைச் செய்தல்தான் வணிகனின் தலையாய பணி.

பொறியாளர்கள் உலகத்தை உருவாக்கலாம். அதற்கான வரவு செலவுக் கணக்கு பார்ப்பவனே அதன் தரத்தை முடிவுசெய்கிறான்.

- வணிகம் பெருகும்