Published:Updated:

`புவனா சிப்ஸ்’ மூர்த்தியின் புகைப் பிரச்னை! `மாத்தி யோசி' கதைகள்!

சிப்ஸ்

வியாபாரத்தில், பிசினஸில் பிரச்னைகள் எழத்தான் செய்யும். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தாலே போதும். தீர்வுகள் கிடைக்கும். ‘மாத்தி யோசி’த்து புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, நம் பிரச்னையைப் பற்றி சிந்தித்தபடியே இருக்க வேண்டும்...

`புவனா சிப்ஸ்’ மூர்த்தியின் புகைப் பிரச்னை! `மாத்தி யோசி' கதைகள்!

வியாபாரத்தில், பிசினஸில் பிரச்னைகள் எழத்தான் செய்யும். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தாலே போதும். தீர்வுகள் கிடைக்கும். ‘மாத்தி யோசி’த்து புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, நம் பிரச்னையைப் பற்றி சிந்தித்தபடியே இருக்க வேண்டும்...

Published:Updated:
சிப்ஸ்

பச்சைப் பட்டாணியை உரித்தால் உள்ளே முத்துகள் வரிசையாகவும் நெருக்கமாகவும் இருக்குமே. அதைப் போலவே இந்த பஜார் தெருவில் இரு புறமும் கடைகள் விரவி இருக்கும்.

அதில் நீங்கள் நடந்து செல்லும்போது உங்கள் கண்கள்கூட மிஸ் பண்ணலாம். ஆனால் உங்கள் மூக்கு? இந்தக் கடையைத் தாண்டும்போது தானாகவே திரும்பும். காந்த ஊசி வடக்கு நோக்கித் தானாகவே திரும்புவது போல், புவனா சிப்ஸ் பக்கம் தானாக திரும்பும்...!

 சிப்ஸ்
சிப்ஸ்

அங்கே பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் குதித்துக் கொண்டிருக்கும் ஆனியன் பக்கோடா!

மூர்த்தி கடையை ஆரம்பித்து சுமார் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. பத்துக்குப் பத்து இடம். ஆரம்பத்தில் வியாபாரம் சுமார்தான். வாடகையைக் கொடுக்கவே வாய்தா வாங்குவார். இப்போதெல்லாம் மாலைப் பொழுதில் நல்ல கூட்டம் வருகிறது.

வாசலில் இடுப்பளவு உயரத்தில் ஒரு அடுப்பு. அதன் மீது பெரிய வாணலி. மசால் தோசை அளவிற்கு ஜல்லி உள்ள கரண்டி. உருளை, வாழை என இரண்டு மூன்று வகை சிப்ஸ். பக்கோடா, மிக்ஸர் என ஒரு நான்கைந்து வகை நொறுவை என பிசியாக இருக்கும்.

Food Delivery
Food Delivery

வியாபாரத்தை வளர்க்கப் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தார் மூர்த்தி. கடைக்கு வருபவர்களைத் தாண்டி வாடிக்கையாளர் வட்டம் பெருகு வேண்டுமானால் என்ன செய்யலாம் ? வீட்டிற்கே சப்ளை.

அடுத்து, அந்தப் பகுதியில் கேட்டரிங் வைத்திருப்பவர்களை அணுகினார். சின்ன ஃபங்ஷன்களுக்கு உணவு அளிக்கும்போது இவரது சிப்ஸ் அதில் தவறாமல் இடம் பெறும். விற்பனை கிராஃப்-பின் முதுகு நிமிர்ந்தது.

அடுத்து வந்தவர்கள் ஹோட்டல்காரர்கள். அவர்களது சமையலறை நேரத்தை மற்ற உணவு வகைகளைத் தயாரிக்க ஒதுக்கினார்கள். பக்கோடா சிப்ஸ் போன்றவைகள்தான் தரமாகவும் சகாய விலையிலும் இவரிடம் கிடைக்கிறதே.

வியாபாரம் பெருகப் பெருக, தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார் மூர்த்தி. அதுவே அவரது வெற்றிக்கான மையப் புள்ளி.

ஒரு அடுப்பு இரண்டானது. எண்ணையின் தரம் கொஞ்சம் கூடக் குறையாமல் பார்த்துக் கொண்டார். நொறுவைகள் சற்றும் நமர்த்துப் போகாமல் இருக்கும் வழிகளைக் கண்டறிந்தார்.

 எண்ணெய்
எண்ணெய்

ஆனால் பக்கத்துக் கடைக்காரர் மூலம் ஒரு பிரச்சனை வந்தது. அது ஒரு துணிக் கடை. இங்கே எழும் வாணலிப் புகை அவர்கள் கடையில் உள்ள துணிகளின் மீது படிந்ததால் சிக்கல் உருவானது. அவரும்கூட நல்ல நண்பர்தான். ஆனாலும் இந்த விஷயத்தில் அவர் பக்கம் நியாயம் இருந்ததே !

மூர்த்தி சில நாட்கள் இதைப் பற்றிக் கவலைப்பட்டார். ஆழமாகச் சிந்தித்தார். இவர் கடையில் புகைப்போக்கி இருந்தது. ஆனாலும் அதன் வழியாகப் புகை மேலேறாமல், காற்று திசை மாற்றியது. பக்கத்துக் கடையை நோக்கிப் புகை நகர்ந்தது. எப்படி யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை.

ஒரு நாள் கல்லாவில் அமர்ந்திருந்தபோது ஒரு ஐடியா தோன்றியது. அமல்படுத்தினார். பிரச்னை தீர்ந்தது...

நடந்தது இதுதான். மூர்த்தியின் கடைக்குப் பக்கத்தில் மிகவும் ”வயதான” ஒரு தியேட்டர். ஏஸி வசதி இல்லாத அரங்கம். பழைய படங்களை மட்டும்தான் திரையிடுவார்கள். அதில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. கட்டிடத்தின் மேலே எக்ஸாஸ்ட் ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது. சூடான காற்றை வெளியேற்றுவதற்காக.

புகை போக்கி அடுப்பு சமையல்
புகை போக்கி அடுப்பு சமையல்

அது எதேச்சையாக மூர்த்தியின் கண்ணில் பட்டது. இவரது சிந்தைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. கடையின் புகைப்போக்கியை சற்றே மாற்றி வடிவமைத்தார். அடுப்புக்கு மேலே புகைப் போக்கியின் வாயை அகலப்படுத்தினார். போக்கியின் தொடக்கப் பகுதியில் ஒரு உறிஞ்சு விசிறியைப் (exhaust fan) பொருத்தினார். போக்கியின் உச்சியில் இன்னொரு விசிறி.

இரண்டையும் ஓடவிட்டால் போதும். தரதரவெனப் புகையை இழுத்து கொண்டு போய் மேலே தள்ளிவிடும். பக்கவாட்டில் பரவாமல் பார்த்துக் கொள்ளும்.

மூர்த்தியின் வியாபாரம் மேலும் பெருகியது. லாபத்தில் ஒரு பகுதியை கடை மேம்பாட்டிற்குச் செலவழித்தார். நட்பையும் இழக்காமல், பிரச்னைக்கும் தீர்வு கண்டது மூர்த்தியின் புதுமையைத் தேடிய ‘மாத்தி யோசி’ சிந்தனை. மனிதர் இன்று விற்பனையில் அசத்திக்கொண்டிருக்கிறார்.

புத்தாக்க சிந்தனை
புத்தாக்க சிந்தனை

வியாபாரத்தில், பிசினஸில் பிரச்னைகள் எழத்தான் செய்யும். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தாலே போதும். தீர்வுகள் கிடைக்கும். ‘மாத்தி யோசி’த்து புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது, நம் பிரச்னையைப் பற்றி சிந்தித்தபடியே இருக்க வேண்டும். கோழி முட்டையை அடைகாப்பது போல். நம்மை அறியாமல் நம் பிரச்னைக்கு ஒரு அருமையான தீர்வு கிடைத்து, அது நம் மூளைக்குள் பளிச்சென்று ஒளிரும்.

எங்கோ தூரத்தில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன். அதை எதற்காகப் பயன்படுத்துவார்கள் என்று மூர்த்தி திரும்பத் திரும்ப யோசித்ததன் விளைவு, அதனை தன் கடைக்குள் கொண்டுவர அவரால் முடிந்தது, பிரச்னையும் தீர்ந்தது

இதுவே “மாத்தி யோசி” சீக்ரெட். நாம் கொஞ்சம் முனைப்பு காட்டினாலே போதும். விடைகள் தாமாக வந்து நம் மடியில் விழும்!

- வெற்றி விடியல் சீனிவாசன்