நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 7 கோல்டன் ரூல்ஸ்! கஷ்டம் தவிர்க்க கரெக்ட் டிப்ஸ்...

கோல்டன் ரூல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கோல்டன் ரூல்ஸ்

P E R S O N A L F I N A N C E

சதீஷ் குமார், ஆலோசகர், http://sathishspeaks.com/

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் குடும்பத்தின் தேவைகள் மற்றும் ஆசை களை நிறைவேற்றிக் கொள்ள அதிகப் பணம் தேவைப் படுகிறது. இதை நிறைவேற்றத் தயங்காமல் கடன் வாங்கும் மனநிலைக்கு நம்மவர்களில் பலர் மாறியிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்கு கின்றன. அதுவும் விரைவுக் கடன், உடனடிக் கடன், ஆப் மூலமான கடன் எனப் பல கடன்கள் சில நிமிட நேரங்களில் கிடைத்துவிடுகின்றன. கடன்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய ஏழு கோல்டன் விதிமுறை களை இங்கே பார்ப்போம்.

சதீஷ் குமார் 
ஆலோசகர், 
http://
sathishspeaks.
com/
சதீஷ் குமார் ஆலோசகர், http:// sathishspeaks. com/

1. தகுதிக்கு மீறிய கடன் வேண்டாம்...

உங்களால் மாதம் எவ்வளவு தொகையை (இ.எம்.ஐ) சிக்கல் இல்லாமல் தொடர்ந்து கட்ட முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப கடன் வாங்கவும். எப்போதும் தகுதிக்கு மீறிய பெரிய தொகையைக் கடனாக வாங்கக் கூடாது.

வாழ்க்கை முறை ஆசைகளைப் (lifestyle wants) பூர்த்தி செய்ய நுகர்வோர் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கும்போது, உங்களின் மாதச் சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கு மேல் இ.எம்.ஐ போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு பொதுவான விதிமுறை (thumb rule) ஆகும். இதை விடக் குறைவாக இருப்பது எப்போதும் நல்லதாகும்.

இன்றைய இளைஞர்களில் பலர் அவர்களின் மாதத் தவணையில் 40% வரைக்கும்கூட நுகர்வோர் கடன் மற்றும் தனிநபர் கடன்களை வாங்கி யிருக்கிறார்கள். மோசமான கடன்கள் (Bad Loans) பட்டியலில் இருக்கும் இந்தக் கடன்களை அதிகம் வாங்கும் போது ஒருவருக்கு இவை தேவை இல்லாத செலவாக அமைவதுடன், வட்டி சுமையானது அவரிடம் செல்வம் சேர்வதைத் தடுக்கிறது.

2. முதலீட்டு நோக்கில் வீட்டுக் கடன் வாங்குவது லாபம் அல்ல...

வீட்டுக் கடன் நல்ல கடன் என்பதுடன், அது நீண்டகாலக் கடன் என்பதால், சம்பளத்தில் 30% வரை அதன் இ.எம்.ஐ இருக்கலாம். இந்தக் கணக்கு குடியிருப்பதற்காக வாங்கும் வீட்டுக்குத்தான். முதலீட்டு நோக்கில் அல்லது இரண்டாவது வீட்டைக் கடனில் வாங்குவது அவ்வளவு லாபகரமாக இருக்காது. காரணம், வீட்டுக் கடன் தொகை அல்லது வீட்டின் மதிப்புடன் ஒப்பிடும்போது சுமார் 2 - 3 சதவிகிதம்தான் வாடகை வருமானம் உள்ளது.

கடன்...
கடன்...

3. கடன் தவணைக் காலம் குறுகியதாக இருப்பது நல்லது...

பொதுவாக, பெரும்பாலானோர் குறைவான மாதத் தவணை இருக்கும் என்பதால், நீண்டகாலத்தில் கடனைக் கட்டவே விரும்புவார்கள். இதனால், நீண்டகாலத்தைத் தேர்வு செய்து விடுகிறார்கள்.

வீட்டுக் கடன் என்பது பெரிய தொகையாக இருக்கும் என்பதால், அதை நீண்டகாலத்தில்தான் சுலபமாகத் திரும்பச் செலுத்த முடியும். மேலும், அதில் திரும்பக் கட்டும் அசல் (80சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம்) மற்றும் வட்டிக்கு (24 பிரிவின்கீழ் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம்) வரி விலக்கு இருக்கிறது.

எனவே, வீட்டுக் கடன் தவிர்த்து இதரக் கடன்களான தனிநபர் கடன்கள், நுகர்வோர் கடன்கள், கார் கடன்கள் போன்றவற்றை வாங்கும்போது கடனைக் கட்டும் காலம் குறுகியதாக இருப்பது நல்லது. அப்போதுதான் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். மேலும், கடன் தவணைத் தொகையை அதிகரித்து, தவணைக் காலத்துக்கு முன் கட்டிமுடிக்கும்பட்சத்தில் சிபில் ஸ்கோர் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

4. முதலீடு செய்ய கடன் வாங்க வேண்டாம்...

அதிக வருமானம் தரும் திட்டங்களில் சேருங்கள் எனப் பல எஸ்.எம்.எஸ்கள் நமக்கு வருகின்றன. இவை கிட்டத்தட்ட மோசடித் திட்டங்களாக இருக்கும். அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு, கையில் பணம் இல்லையெனில், சிலர் கடன் வாங்கியாவது இந்தத் திட்டங்களில் முதலீடு செய்துவிடு கிறார்கள். இது மகா தவறு.

இப்படிக் கடன் வாங்கி முதலீடு செய்யும்போது, முதலுக்கு மோசம் ஏற்படுவதுடன், தேவையில்லாமல் வட்டியும் கட்ட வேண்டிவரும். எனவே, எப்போதும் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மேலும், கடன் வாங்கி சுற்றுலா செல்வதையும் தவிர்க்கலாம். பலரும் இப்படிச் சுற்றுலா சென்று விட்டு, அடுத்து வரும் மாதங்களில் கடன் தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் நிம்மதி இல்லாமல் தவிப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

5. கடன் காப்பீடு கட்டாயம்...

நீங்கள் எந்தக் கடன் வாங்கி னாலும் அதற்கு இணையான தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, வீட்டுக் கடன் வாங்கும் போது, அந்தக் கடன் தொகைக்கு இணையாக அல்லது கடன் தொகை குறையக் குறைய அதற்கு இணையான கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது கட்டாயம். டேர்ம் பிளான் என்கிறபோது பிரீமியம் குறைவாக இருப்பதுடன், கவரேஜ் தொகையும் அதிகமாக இருக்கும்.

கார் கடன் வாங்கினாலும் ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயம். தேய்மானம் மற்றும் பழைய கார் என்பதால், அதன் மதிப்பு வேகமாகக் குறைந்துவிடும். குடும்பத் தலைவர் திடீரென மறைந்துவிடும்போது காரை விற்றுகூட முழுக் கடன் தொகையைக் கட்ட முடியாத சூழ்நிலை உருவாகும் என்பதை நினைவில்கொள்வது நல்லது.

6. கடனுக்கான வட்டியைக் கவனியுங்கள்...

இப்போதெல்லாம் தினம் குறைந்தது ஐந்து தொலைபேசி அழைப்பாவது கடன் வேண்டுமா எனக் கேட்டு வருகிறது. அவர்கள் மிகக் குறைவான வட்டி என்பார்கள். உண்மையிலேயே அது குறைவான வட்டிதானா, அந்த வட்டியை எந்த முறையில் கணக்கிடுகிறார்கள் (ஃப்ளாட் ரேட், குறையும் அசலுக்கான வட்டி) என்பதைக் கவனியுங்கள்.

வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங் களிடம் இப்போது கைவசம் அதிக தொகை இருப்பதால், அவை கடன் கொடுக்க ஆள்களைத் தேடிக்கொண்டிருக் கின்றன. எனவே, பல நிறுவனங் களிடம் விசாரிப்பது மற்றும் பேரம் பேசுவது மூலம் வட்டியைக் குறைக்க முடியும். உதாரணமாக, உங்களுக்கு அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது. உங்களுக்குக் கடனைக் கட்டுவதற்கான தகுதி அதிகமாக இருக்கிறது. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனம் என்றால், தாராளமாக வட்டி யில் பேரம் பேசலாம். மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குறைவான வட்டியில் கடன் கிடைக்கின்றன.

7. விதிமுறைகளை முழுமையாகப் படிக்க மறக்காதீர்கள்...

கடன் வாங்குவதற்குக் கடன் வகையைப் பொறுத்து சுமார் 15 முதல் 20 இடங்களில் கையொப்பம் போட வேண்டியிருக்கும். நம்மில் பலர் பெருக்கல் குறி போட்டிருக்கும் இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போடுவதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறோம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (Read the terms and conditions) முழுமையாகப் படியுங்கள். அதிக தொகையைக் கடனாக வாங்கும்போது நிதி ஆலோசகர்கள், ஆடிட்டர்கள், வழக்கறிஞர்களிடம் ஆலோசனைக் கேட்கவும். சில நூறு ரூபாய்கள் அல்லது ஆயிரங்களை இதற்காகச் செலவிடு வதன்மூலம் பிற்காலத்தில் லட்சங்களை மிச்சப்படுத்த முடியும்; நிம்மதியாகவும் இருக்க முடியும்.

கடன் வாங்குபவர்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு இருக்கிறது. கண்டபடி கடன் வாங்கி கடன் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். இது உங்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும். இப்போதுள்ள கடனைச் சரியாகக் கட்ட வில்லையெனில், கிரெடிட் ஸ்கோர் குறைந்து எதிர்காலத்தில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, கடன் வாங்கி நிலைமையைச் சமாளிக்கலாம் என்று நினைக்காமல், எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைச் சேர்த்து வைப்பது அவசியம். பெரிய அளவிலான, அதனால் நன்மை விளைக்கக்கூடிய கடன்களை மட்டுமே வாங்குங்கள்.

இனி கடன் வாங்கும்போது இந்தத் தங்க விதிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள்!

பிட்ஸ்

னியார் துறை வங்கிகளில் சி.இ.ஓ-வாக இருப்பவர்கள் 15 ஆண்டு களும் வங்கியின் சொந்தக்காரரே சி.இ.ஓ-வாக இருந்தால் 12 ஆண்டுகளும் அந்தப் பதவியில் இருக்கலாம் என ஆர்.பி.ஐ புதிய வரைமுறை கொண்டு வந்திருக்கிறது!