
சர்ச்சை
‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ – ஔவை மூதாட்டியின் வாக்கு உண்மைதான். அதற்காக பெற்றோரைப் பிச்சைக்காரர் களாக்குவது எந்த விதத்தில் நியாயம்? சமீப காலமாக பைஜூஸ் எஜு டெக் நிறுவனம் பற்றி வெளியாகும் செய்திகள் மேற்கண்ட கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது. “என்ன? பைஜூஸா?” என்று பலரும் ஆச்சர்யப்படுவதில் அர்த்தம் இல்லாமலில்லை. அந்த அளவுக்கு பள்ளிகளுக்கான ஆன்லைன் கல்வியில் புகழ் பெற்று விளங்குகிறது இந்த நிறுவனம். கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் அவர் மனைவி திவ்யா கோகுல்நாத் ஆகியோரால் 2011-ல் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று 40 பில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்த ஸ்டார்ட் அப் கம்பெனியாக உருவெடுத்துள்ளது.

அதன் பாடத்திட்டம் இந்தியாவில் புகழ் பெற்ற கல்வியாளர்களால் வடிவமைக்கப் பட்டது. பொதுவாக, ஒவ்வொரு பாடத்திலும் சில எளிதான நுணுக்கங்கள் இருக்கும்; அவற்றைக் கற்றுத் தேர்ந்தால் போதும்; தேர்வில் பாஸாவது நிச்சயம். அது போன்ற நுணுக்கங்களைத் தேடிப் பிடித்து கற்றுத் தருவது பைஜூஸின் ஸ்பெஷாலிட்டி.

ஆயிரக்கணக்கான மணி நேரங்களுக்கான வீடியோ பாடங்கள், பொறுமையாகக் கற்றுத் தரும் ஆசிரியர்கள், சிறப்பான டெஸ்ட்டுகள் என்பதெல்லாம் பைஜூஸைப் பெற்றோர்களின் டார்லிங்காக மாற்றியது. பள்ளி அளவில் மட்டுமன்றி, மற்ற போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற அதன் பாடத்திட்டங்கள் உதவியது. கோவிட் காலத்தில் பள்ளிகளை வழக்கமான முறையில் நடத்த இயலாமல் போனதால், பைஜூஸில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. ஆன்லைனில் மட்டுமன்றி, கல்வி வகுப்புகளை நேரடியாகவும் வழங்க விரும்பி ஆகாஷ் என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தி இன்னொரு மைல்கல்லையும் தாண்டியது பைஜூஸ்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டிய கட்டணத் தொகை ரூ.1,200 என்பது எட்டிப் பிடிக்கக்கூடிய கனவாகவே பெற்றோருக்குத் தோன்றியது. சில பல அடிஷனல் வசதிகளைச் சேர்த்து, மெள்ள மெள்ள கட்டணம் ரூ.4,000 வரை எகிறியதுகூட பலருக்குத் தவறாகவே தோன்றவில்லை. வருடத் துக்கு ரூ.48,000 வரை கட்டணம் ஏறினாலும், அதை மாதம்தோறும் கட்டக்கூடிய வசதி அளிக்கப்பட்டிருந்ததால் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர்கள் தயாராகவே இருந்தார்கள்.
அவர்கள் கல்வித் தாகம் அப்படி. தாங்கள் பெற இயலாத கல்வியை பிள்ளைகளுக்குக் கொடுக்க முடிந்தால் தமக்குக் கிட்டாத வசதி வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும் என்ற மனநிலை இந்தியாவில் பல பெற்றோருக்கு இருப்பதால், ‘பிச்சை புகவும்’ அவர்கள் தயாராகி விட்டார்கள்.
எவ்வளவு ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவரும் ஆன்லைனில் குறிப்பிட்ட வெப்சைட்டுக்கு சென்று அல்லது ஒரு ஆப்பை டவுன்லோடு செய்து கல்வி கற்பது என்பது கிராமங்களில்கூட எளிதாகிவிட்ட காலம் இது. ஆனால், ஒரு கோர்ஸுக்கு சப்ஸ்க்ரைப் செய்து, அவர்கள் கேட்கும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் அப்லோட் செய்து, கட்டணம் செலுத்தி, கோர்ஸில் சேர்வது கடினம்; அதுவும் ஆங்கிலக் கல்வியறிவு அதிகம் இல்லாத பெற்றோருக்கு இயலாத காரியம். அவர்களுக்கு உதவுவதற்காக பைஜூஸ் நிறுவனம் ஏஜென்ட்டு களை நியமனம் செய்தது.
தலைவலி ஆரம்பித்தது இங்குதான். இந்த ஏஜென்ட்டுகள் பற்றி நிறைய புகார்கள் வர ஆரம்பித்தன. உதாரணமாக, ஒரு கிராமத்து ஏழைப் பெற்றோரை வீட்டுக்கே சென்று அணுகிய பைஜூஸ் ஏஜென்ட்டுகள் தங்கள் தேர்வில் அவர்கள் பையன் தேர்ச்சி பெற்றால், கட்டணம் இன்றி கல்வி பெற லாம்; சில ஸ்காலர்ஷிப்கள் கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு என்று கூறியுள்ளனர்.
அந்தத் தேர்வை எழுதிய பின் அவர்கள் பையன் 5 லட்சம் மாணவர்களில் 28-வது இடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இன்னொரு தேர்வு எழுதி அதில் பத்து இடத்துக்குள் தேர்ச்சி பெற்றால் கட்டணமில்லாக் கல்வியும், ஸ்காலர்ஷிப்பும் உறுதி என்றும் கூறியுள்ளனர்.
அந்தத் தேர்வுக்குப் பின், பையன் பன்னிரண்டாவது இடத்தில் பாஸ் செய்திருப்ப தாகவும் ஒரு சின்ன பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கும் பட்சத்தில் 10 இடத்துக்குள் வருவது உறுதி என்றும், அதற்குக் கட்டணம் வெறும் ரூ.5,000 என்றும் கூறியுள்ளனர். இதில் சேருவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த பெற்றோர் களுக்கு பையன் எதிர்காலம் பற்றி ஆசை காட்டியும், பய முறுத்தியும் சம்மதிக்க வைத் துள்ளனர்.

பைஜூஸ் ஆப்பைக் கொண்டுள்ள ஒரு சிறிய டேப்லெட் எனப்படும் கருவி யைக் கொடுத்துவிட்டு, ரூ.5,000 மற்றும் அவர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களின் காப்பியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பையன் ஒருவேளை, தேர்ச்சி பெறாவிட்டால் ரூ.5,000 வங்கிக் கணக்கில் திருப்பி அளிக்கப்படும் என்று உறுதி கூறி, சில ஆவணங்களில் கையெழுத்துக் கேட்டுள் ளனர். ஆங்கிலம் அறியாத அந்தப் பெற்றோரும் நம்பிக் கையின் பேரில் கையெழுத் திட்டுள்ளனர்.
இது பற்றி அறியவந்த பையனின் உறவினர் ஒருவர், ஆன்லைனில் அவர்கள் அக்கவுன்ட்டைப் பார்த்த போது பெற்றோர் பெயரில் ரூ.48,000 கடன் பெறப்பட்டு அது மாதம்தோறும் ரூ.4,000 கட்டணத் தொகையாக பைஜூஸுக்கு செலுத்தப் படுவதை அறிந்தார்.
இது தொடர்பாக அவர் பைஜூஸுக்கு அளித்த புகார்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. அதன்பின் வங்கியை அணுகிய பெற்றோர் தங்கள் கடனை உடனடியாக ரத்து செய்யும்படி கேட்டுள்ளனர். ஆனால், பைஜூஸ் கேட்டுக் கொண்டால் மட்டுமே கடன் ரத்து செய்யப்படும் என்று வங்கி கைவிரித்துவிட்டது. இதற்கிடையே மாதம்தோறும் அவர்கள் அக்கவுன்டில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு, பைஜூஸுக்கு அனுப்பப் படும் வேலை தொடர்ந்தது.
எஜு டெக் கம்பெனிகள் பற்றிய இது போன்ற புகார்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன. சில பெற்றோர்கள் வாழ்நாள் சேமிப்பைக்கூட இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தினக்கூலி வேலை மற்றும் வீட்டு வேலை செய்வோர். தங்களுக்கு அளவுக்கதிக வட்டி விகிதத்தில் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது பற்றிய விவரம்கூட அறியாதவர்கள். சென்ற வருடமே கல்வி அமைச்சரகம் இது போன்ற எஜு டெக் மோசடிகள் அதிகரிப்பதாகவும், அவற்றுக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ளும்படியும் அறிக்கை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக, பைஜூஸ் நிறுவனத்துக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடம் புகார்கள் இன்னும் அதிகரிக்கவே நிலைமை கைமீறிச் செல்வதை அறிந்த ‘தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு நிறுவனம்’ (National Commission for Protection of Child Rights- NCPCR) வருகிற 23-ம் தேதி பைஜூஸ் ரவீந்திரன் தகுந்த ஆவணங்களுடன் தன்முன் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
பைஜூஸின் துணை நிறுவனமான ஆகாஷின் ஐ.பி.ஓ கூடிய சீக்கிரம் வரும்; இந்த நல்ல நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம் என்று காத்திருக்கும் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது பலத்த அதிர்ச்சி. பைஜூஸ் மட்டுமன்றி வேறு பல எஜு டெக் நிறுவனங்களும் குழந்தை களின் எதிர்காலம் பொன் மயமாக இருக்கும் என்று ஆசை காட்டி பெற்றோ ரின் அறியாமையைப் பயன்படுத்தி மோசம் செய்யும் செயல் பாடுகளில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி, உழைக்கும் பணத்தை குழந்தைகளின் கல்விக்காக கண்மூடித்தனமாக செலவிட முனையும் பெற்றோர்; அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் எஜு டெக் நிறுவனங்கள்; இந்த நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து மனசாட்சியை அடகு வைத்து செயல்படும் ஏஜென்ட்டுகள் - இதில் யார் தவறு அதிகம் என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை... மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியத்திலும் அவசியம்!