Published:Updated:

100% லாபம்..! ஆசையைத் தூண்டும் டிரேடிங் நிறுவனங்கள்... உஷார் மக்களே உஷார்!

டிரேடிங் நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
டிரேடிங் நிறுவனங்கள்

C O V E R S T O R Y

100% லாபம்..! ஆசையைத் தூண்டும் டிரேடிங் நிறுவனங்கள்... உஷார் மக்களே உஷார்!

C O V E R S T O R Y

Published:Updated:
டிரேடிங் நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
டிரேடிங் நிறுவனங்கள்

பங்கு வர்த்தகத்தின் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளைச் சொல்லி, மக்களை மோசடி வலையில் சிக்க வைத்து, பணத்தைக் கொள்ளை அடிக்கும் கும்பல் சமீப நாள்களில் அதிகரித்து வருகிறது. இப்படித்தான் கடந்த 2020-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், கோயம்புத்தூரில் உள்ள ப்ரோஸோன் மாலில் ‘வின் வெல்த் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த செரின் என்பவர் கைதான விவகாரம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

டிரேடிங் நிறுவனங்கள்
டிரேடிங் நிறுவனங்கள்

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த இவர், தனது நிறுவனத்தில் 20,000 ரூபாய் முதலீடு செய்தால், வாரம் 1,600 ரூபாய் வீதம் 25 வாரங்களுக்கு ரூ.40,000 தரப்படும் என்று விளம்பரம் செய்தார். மேலும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்குத் தகுந்தாற்போல் தங்க நாணயம் அல்லது வைரம் வழங்கப் படும் என்றும் விளம்பரம் செய்தார். இதை நம்பி தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் பலரும் இவர் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்களுக்கு சில வாரங்கள் சரியாக பணம் கொடுத்த செரின், அதன் பிறகு திடீரென தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க, செரினை கண்டுபிடித்து விசாரித்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

அதேபோல, கடந்த ஆண்டு, பங்குச் சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் 50 கோடி ரூபாய் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோரிடம் மோசடி செய்ததாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி இளம்பெண் ஒருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. வெள்ளக் கோட்டையைச் சேர்ந்த இவர், தான் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாகவும், மொத்தமாக முதலீடு செய்பவர்களுக்கு தினம்தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையைத் தருவதாகவும், 100 நாள்களுக்குப் பிறகு முதலீடு செய்த மொத்த தொகையைத் திரும்பத் தருவதாகவும் கூறியதாகத் தெரிகிறது. இதே போல, விருதுநகர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இப்படி சமீப காலமாக ஆன்லைன் டிரேடிங் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் தனிநபர்களை கூட்டு சேர்த்து பலர் மோசடி செய்வது அம்பலமாகி வருகிறது. இந்த மாதிரியான மோசடிக் கும்பலை இனம்கண்டு கொள்வது எப்படி, இவர்களிடம் இருந்து எப்படித் தப்பிக் கலாம், இது மாதிரியான நிறுவனங்களிடம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

“பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது, ஆன்லைன் டிரேடிங் மூலம் ஏமாற்றுபவர்கள் சுயமாக நிறுவனம் துவங்கி, அந்த நிறுவனத்தின் வாயிலாக மக்களை ஏமாற்றுவது அதிகரிக்க ஆரம்பிக்கிறது. பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது, அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு வருவது சாதாரண மானதுதான். ஆனால், இந்த நேரத்தைப் பயன்படுத்தி மோசடிக் கும்பல்கள் களமிறங்கு கிறார்கள்.

உச்சத்தில் இருக்கும் பங்குச் சந்தையைப் பற்றி மக்களிடம் ஏகபோகமாக எடுத்துச் சொல்லி, அதிலிருந்து 100% லாபம் பெறலாம் என உத்தரவாதத்தைக் கொடுத்து பணத்தைக் கபளீகரம் செய் கிறார்கள். மக்கள் இது மாதிரியான மோசடிப் பேர்வழிகளை நம்பி பணம் போடுவதற்கு மிக முக்கிய மான காரணமே, குறுகிய காலத்தில் அதிக லாபத்தைச் சம்பாதித்துவிட வேண்டும் என்கிற பேராசைதான். பாதுகாப்பான வங்கி மற்றும் அஞ்சலகச் சேமிப்புத் திட்டங் களில் 6 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டியே கிடைப் பதால், அதில் அவர்கள் பணத்தைப் போட்டு வைக்கத் தயாராக இல்லை. அதைவிடக் கூடுதலாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் 3% கிடைத்தாலும், 9% வருமானத் துக்காக நீண்டகாலம் வரை காத்திருக்க வேண்டுமா என நினைத்து அதிலும் அவர்கள் முதலீடு செய்ய யோசிக்கிறார்கள்.

ஆனால், யாரோ ஒருவர் நடத்தும் நிறுவனம் ‘அதிக வருமானம் தருகிறது’ என பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார், உறவினர்கள் சொன்னார்கள் என்கிற வாய் வார்த்தையை மட்டுமே நம்பி நிச்சயமற்ற லாபத்துக்கு ஆசைப் பட்டு மோசடி வலையில் சிக்கு கிறார்கள்.

பங்குச் சந்தையிலிருந்து கிடைக்கும் வருமானம் உத்திரவாதமான வருமானம் கிடையாது என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பங்குச் சந்தையிலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கு யாரும் கேரன்டி தரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அதனால், முதலீடு செய்யும் பணத்திலிருந்து குறுகிய காலத்துக்குள் அதிக லாபத்தை சம்பாதிக்க முடியும் என யார் சொன்னாலும் மக்கள் அதை நம்ப வேண்டாம்.

உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளரான வாரன் பஃபெட்டிடம், ‘உங்களுடைய முதலீட்டு விதிமுறைகள் எளிமையாகத் தான் இருக்கின்றன; ஆனால், அதை ஏன் யாரும் கடைப்பிடிப்பதில்லை’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னைப் போல யாரும் காத்திருக்கத் தயாராக இல்லை’ என்றார். உலகின் நம்பர் ஒன் முதலீட்டாளரான வாரன் பஃபெட் எப்போதும் முதலீடு செய்துவிட்டு, நீண்டகாலம் வரை காத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பார். அதனால்தான் அவரால் இன்று வரை சிறந்த முதலீட்டாளராக இருக்க முடிகிறது. ஆனால், மக்களில் பலருக்கு முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகக் காத்திருப்பது கசப்பாக இருக்கிறது. இன்று முதலீடு செய்தால் அடுத்த வாரமே, அடுத்த மாதமே கைமேல் காசு வேண்டும் என நினைக்கிறார்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கமாடிட்டி, கரன்சி என எந்தவொரு முதலீடும் அவ்வளவு சீக்கிரம் எல்லாம், பணத்தைச் சம்பாதித்துக் கொடுக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

மோசடிக் கும்பல் விவகாரத்தில், அரசின் விதிமுறை சார்ந்த விஷயத்தில் எங்கு தவறு என்று எனக்குத் தெரிய வில்லை. அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் கண்டிப்புடன்தான் இருக் கின்றன. ஆனால், மக்களிடம் முதலீடு சார்ந்த விஷயத்தில் இருக்கும் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. அதனால்தான் மோசடி நடவடிக் கைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஏமாறுபவன் இருக்கிற வரைக்கும், ஏமாற்றுபவனுக்கு கொண்டாட்டம்தானே!

ஒரு நிறுவனத்தை அல்லது தனிநபரை முதலீட்டுக்காக அணுகும் போது, அவர் யார், அவர் வைத்திருக்கும் நிறுவனம் அரசின் விதிமுறைகள் மற்றும் கட்டுப் பாட்டுக்குள் வருகிறதா, பதிவு எண் இருக்கிறதா, அந்த நிறுவனத்தின் பின்புலன் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம். ஆனால், பணத்தாசை கண்ணை மறைப்பதாலும், பணத்துக்கான தேவை அதிகம் இருப்பதாலும் எதையுமே கேட்காமல் முதலீடு செய்து சிக்கலில் சிக்கிக்கொள்பவர்கள் அதிகம். கொஞ்சம்கூட யோசிக்காமல் பிள்ளைகளின் கல்வி, திருமணம் அல்லது ஆசை ஆசையாக வீடு கட்ட சேமித்த பணம் எனச் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டுபோய், இந்த மாதிரியான மோசடிக் கும்பலிடம் ஒப்படைத்து ஏமாறுவதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம்.

முதலீட்டின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், யார் சொல்வதையும் நம்பாமல், அது சார்ந்த விஷயங்களை அலசி ஆராய்ந்து சுயமாகத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்றுதான் கூகுளைத் திறந்தால், அனைத்து விஷயங்களும் கைக்குள் அடங்குகின்றன. நீங்கள் தேர்ந் தெடுக்கும் முதலீடு பங்குச் சந்தையாக இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாக இருந்தாலும், கரன்சி, கமாடிட்டி என எதுவாக இருந்தாலும் கூகுள் உதவியுடன் அதுபற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். முதலீடு சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளாமல், அந்த முதலீட்டில் கால்வைப்பது ஏமாற்றத்தைத்தான் தரும்.

இதுமாதிரியான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் மட்டுமல்லாமல், செபி அமைப்பும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. பங்கு வர்த்தகத்தைக் குறிவைத்து தலைதூக்கும் மோசடி நிறுவனங்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அதை அகற்றுவதற்கான நடவடிக் கையை செபி மேற்கொள்ள வேண்டும். இதற்கென பிரத்யேகமாக ‘இன்டலிஜென்ஸ் விங்க்’ அமைத்து, மாநிலங்கள் வாரியாக உள்ள டிரேடிங் மோசடி நிறுவனங்களைக் கண்டறிந்து, அவர்களுடைய பிசினஸ் மாடல்கள் குறித்த கேள்விகளை எழுப்ப வேண்டும். அப்போது இந்த மாதிரியான குற்றங்கள் நடைபெறு வதை முழுமையாகத் தடுக்க முடியும் என்பது என் கருத்து” என்றார் தெளிவாக.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

ஆசையைத் தூண்டும் டிரேடிங் நிறுவனங்களிடமிருந்து எப்படி நம்மை நாம் தற்காத்துக்கொள்வது என்பது குறித்து, பங்குச் சந்தை ஆய்வாளர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். “எங்கெல்லாம் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் பிக்பாக்கெட் திருடர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அப்படித்தான், முதலீட்டாளர்கள் அதிகம் கவனிக்கும் முதலீடுகளில் மோசடிக் கும்பலின் அராஜகம் தலைதூக்கி இருக்கிறது.

வருமானத்துக்கு மேல், ஏதாவது ஒரு வழியில், இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், குறுக்கு வழியில் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப் படுவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. மாறாக, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக் கிறது. 10 வருடத்துக்கு முன்பாக நடந்த ஈமூ கோழி மோசடிக் கும்பல், பல பேருடைய பணத்தைச் சூரையாடியது. அதே போல, இரிடியம் கலசம் விற்பதாகச் சொன்ன மோசடிக் கும்பலிடமும் பணத்தைக் கொடுத்து மக்கள் ஏமார்ந்து போனார்கள். இப்படி மக்களிடம் முதலீடு குறித்த விழிப்புணர்வுக் குறைவாக இருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.

நண்பர்களோ, தெரிந்தவர்களோ உங்களிடம், பணம் சம்பாதிக்கும் வழியைச் சொன்னால், ஒரு நிறுவனத்தைப் பற்றி சொல்லி அதில் முதலீடு செய்யச் சொன்னால் அதை அப்படியே நம்பாதீர்கள். நாலு இடத்தில் அந்த நிறுவனம் பற்றி விசாரியுங்கள். திருமணத்துக்குப் பெண் பார்ப்பதில் ஆரம்பித்து, சொந்தமாக வீடு வாங்குவது வரை ஏராளமான கேள்விகளைக் கேட்க தெரிந்த உங்களுக்கு, சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும்போது மட்டும் கேள்விகளைக் கேட்காமல், கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்வது முட்டாள்தனம் இல்லையா?

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ போன்ற வர்த்தக வலைதளங்களைப் பற்றி தெரியாமல் இருக்காது. அந்த வலைதளங்களில் ‘Broker Nearby me’ என டைப் செய்தாலே, உங்களுக்கு அருகில் உள்ள தரகு நிறுவனங்களின் பட்டியல், முழு விவரங்களுடன் கிடைத்து விடும். இதில் உங்களை அணுகும் நிறுவனம் மோசடி நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர்களின் விவரங்கள் இங்கு இருக்காது. ஒரு நேர்மை யான நிறுவனமாக இருந்தால், முறையான வலைதளம், அதில் அந்த நிறுவனத்தின் விவரம், யார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், அதிலுள்ள உறுப்பினர்கள் யார், நிறுவனத்தின் விலாசம், இ-மெயில், அலைபேசி எண்கள் போன்ற விவரங்களை வெளிப்படையாக வைத்திருப் பார்கள். மோசடி நிறுவனங்கள் இந்த விவரங்களை மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவதில்லை. இதிலிருந்தும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்” என்றார் தெளிவாக.

‘திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்கிற நிலையில், முதலீட் டாளர்களாகிய நாம் உஷாராக இல்லை எனில், பணத்தை இழப்பது தவிர வேறு வழியில்லை!

கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

1. சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு முதலீடு செய்வதால், அந்த பணத்தின் மீதுள்ள பொறுப்பும் அக்கறையும் உங்களுக்குத்தான் அதிகம் இருக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களுக்கு அல்ல. அதனால், முதலீடு சார்ந்த நடவடிக்கைகளில் மிகக் கவனமாக இருக்க வேண்டியது முதலீட்டாளர்களின் கடமை.

2. யாரிடம் பணம் கொடுத்தாலும், எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தாலும் அவர் அல்லது அந்த நிறுவனம் செபியிடம் அனுமதி பெற்ற நிறுவனமா என்பதைக் கவனிக்க வேண்டும்.

3. முதலீட்டுக்காக எப்போது பணம் கொடுத்தாலும் காசோலைகளில்தான் கொடுக்க வேண்டும். முதலீட்டின் மீதான லாபத்தைப் பெறுவதாக இருந்தாலும் அதையும் காசோலை மூலமாகவே வாங்க வேண்டும். ரொக்கமாகக் கொடுப்பதோ, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்வதோ கூடாது.

4. பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் நிரந்தர வருமானத்தைக் கொடுக்கிறேன் என யாராவது உறுதியாகச் சொன்னால், அவர்கள் சொல்லும் வார்த்தையை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.

5. இன்றைய நிலையில் முதலீட்டு விஷயங்களில் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்வதற்காக, என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ பல்வேறு வகுப்புகளை எடுக்கின்றன. பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களும், நம்பிக்கையான சில பத்திரிகை நிறுவனங்களும் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. இதுபோன்ற வகுப்புகளில் கலந்துகொண்டு, முதலீடு சார்ந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போது ஏமாற்ற நினைப்பவர்களின் மோசடி வலைகளில் சிக்காமல் தப்பிக்க முடியும்.

எஃப் & ஓ, கமாடிட்டி, கரன்சி, பிட்காயின்... தொடரும் மோசடி!

பங்குச் சந்தை மட்டுமன்றி, எஃப் & ஓ, கமாடிட்டி, கரன்சி, பிட்காயின் எனப் பலவிதங்களிலும் மோசடி நடப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷனில் இந்த புட் (put) வாங்கினால் அல்லது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று இணையதளங்களில் செய்தி பரப்ப, இதைப் பார்த்து பலரும் பணம் கட்டி இழக்கிறார்கள்.

கடந்த ஓராண்டுக் காலத்தில் சில முக்கியமான மெட்டல்களின் விலை கணிசமாக உயர்ந்திருப்பதைக் காட்டி, மீண்டும் நல்ல லாபம் வேண்டுமெனில் இதை வாங்கவோ, விற்கவோ சொல்லித் தரும் டிப்ஸினால் பலரும் பணத்தை இழக்கும் சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சமீபகாலமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக இறக்கம் கண்டதைத் தொடர்ந்து கரன்சி டிரேடிங்கிலும் பலர் பணத்தை இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்றுமதித் தொழில் செய்யாத ஒருவர் கரன்சியை வாங்கவோ, விற்கவோ தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டாலே அதில் ஈடுபடாமல் நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிட்காயின் வர்த்தகம் மூலமான ஏமாற்றுகள்தான் தற்போது மிக அதிகமாக இருக்கின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் பிட்காயின் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததைப் பார்த்து, இதன் மதிப்பு இனிவரும் காலத்திலும் உயரும் என சிலர் ஆசை காட்ட, கோவை, திருப்பூர், சேலம் பகுதிகளில் பிட்காயின் பெயரில் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

பிட்ஸ்

சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான சார்ஜ்பீயில் டைகர் குளோபல் நிறுவனம் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்ததன் காரணமாக, சார்ஜ்பீ நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பைக் கடந்து யுனிகார்ன் என்னும் மதிப்பைப் பெற்றுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism