பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ₹1,887 கோடி முறைகேடு... DHFL நிறுவனம் சிக்கியது எப்படி?

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 2,60,000 போலி கணக்குகள் தொடங்கி ரூ.14,000 கோடி கடன் வழங்கியதாக மோசடி செய்த வழக்கில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான கபில் வாதவன் மற்றும் தீரஜ் வாதவன் மீது சி.பி.ஐ வழக்கு தொடுத்துள்ளது.
நலிவுற்ற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 2,60,000 போலி கணக்குகள் தொடங்கி ரூ.14,000 கோடி கடன் வழங்கியதாக மோசடி செய்த வழக்கில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான கபில் வாதவன் மற்றும் தீரஜ் வாதவன் மீது சி.பி.ஐ வழக்கு தொடுத்துள்ளது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டியாக 3 முதல் 6.5% வசூலிக்கப்படும். அரசின் இந்தக் கடன் திட்டத்தைக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்குவதால் மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும். இந்தத் திட்டத்தில் வீடு கட்ட தகுதியான நபர்களுக்கு ரூ.24 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். கடன் மானியமாக 2,30,156 முதல் 2,67,280 ரூபாய்
இதில்தான் திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் புரொமோட்டர்கள் மோசடி செய்துள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மும்பை பாந்திரா பகுதியில் கிளை எதுவும் இல்லை. அங்கு புதிய கிளை இருப்பது போல மோசடி செய்து அந்தக் கிளையிலிருந்து பெரும்பாலான கடன்கள் வழங்கபட்டதாக போலி கணக்கை தயாரித்து அந்த நிறுவனர்கள் ஏமாற்றியுள்ளனர்.
வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று கூறி கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க முயல்வார். ஆனால், இங்கோ இல்லாத ஒரு நிறுவனத்தின் கிளையை இருப்பதாகக் கூறி 2,60,000 நபர்களுக்கு கடன் கொடுத்ததாக ஜோடித்துள்ளனர்.
அந்த வகையில் வீட்டுக் கடன் வழங்கப்பட்டதற்கு வட்டி மானியமாக 1,187 கோடி ரூபாய் டிஹெச்எப்எல் நிறுவனம் மத்திய அரசிடம் கோரியுள்ளதுதான் அந்த நிறுவனங்களைத் தற்போது சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. இதன் நிறுவனர்கள் ஏற்கெனவே யெஸ் பேங்க் மோசடியில் ஈடுபட்டு தற்போது சிறையில் உள்ளனர். அவர்கள் மோசடி வழக்கில் மேலும் ஒரு வழக்காக இந்த வழக்கும் சேர்ந்துள்ளது.

தற்போது திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பிரபல பிரமல் நிறுவனம் வாங்கிவிட்டது. இந்த நிறுவனம் பல வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் உள்ளது. பிரமல் நிறுவனம் இந்த நிறுவனத்தை புனரமைக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
அரசு நல்ல திட்டங்களை ஏழை மக்களுக்கு கொண்டு வந்தாலும் அதை ஏமாற்றித் திருடுவதற்கு பல வழிகளில் முயற்சி நடக்கிறது. திவான் ஹவுஸிங் மோசடி நிச்சயம் பித்தலாட்டங்களின் ஒரு மையில் கல்லாக திகழ்கிறது என்றால் அது மிகை இல்லை.