Published:Updated:

காங்கிரஸின் `கரன்சி ஊழல்' - முதலில் மாயாராம்; அடுத்து ப.சிதம்பரமா...? வலை விரிக்கும் சி.பி.ஐ...

ராகுல் காந்தியுடன் அரவிந்த் மாயாராம்
News
ராகுல் காந்தியுடன் அரவிந்த் மாயாராம்

இந்தியாவுக்கு வழங்கும் அதே ரூபாய் நோட்டுகளுக்கான பேப்பர்களை நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இந்த நிறுவனம் சப்ளை செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

காங்கிரஸின் `கரன்சி ஊழல்' - முதலில் மாயாராம்; அடுத்து ப.சிதம்பரமா...? வலை விரிக்கும் சி.பி.ஐ...

இந்தியாவுக்கு வழங்கும் அதே ரூபாய் நோட்டுகளுக்கான பேப்பர்களை நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இந்த நிறுவனம் சப்ளை செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

Published:Updated:
ராகுல் காந்தியுடன் அரவிந்த் மாயாராம்
News
ராகுல் காந்தியுடன் அரவிந்த் மாயாராம்

ரூபாய் நோட்டுகள் அச்சிடும் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமரும், நிதி அமைச்சருமான மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சக செயலர் அரவிந்த் மாயாராம் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் அரவிந்த் மாயாராம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த ஊழலானது 'டெ லா ரூ கரன்சி ஊழல்' என்று அழைக்கப்படுகிறது.

அது என்ன 'டெ லா ரூ'?

இந்திய ரூபாய் நோட்டுகளைக் கள்ள நோட்டுகளாக அச்சடிக்க முடியாத வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்குவதற்கான திட்டத்துடன் இங்கிலாந்தை சேர்ந்த 'டெ லா ரூ' என்ற நிறுவனத்திடம் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்திடம் இருந்து ரூபாய் நோட்டுகளுக்கான பிரத்யேக நூல் இழைகள் கொண்ட காகிதங்களை வாங்க 2004-ல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ரிசர்வ் வங்கியின் அப்போதைய நிர்வாக இயக்குநர் பி.கே.பிஸ்வாஸ் கையெழுத்திட்டார்.

இந்திய கரன்சி
இந்திய கரன்சி

ஆனால், பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக பொறுப்பேற்ற (2009-2012) காலத்தில் இந்த 'டெ லா ரூ' நிறுவனத்தின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதைக் கண்டறிந்து, அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 'டெ லா ரூ' நிறுவனம் கறுப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.

எனினும் 2012-க்குப் பிறகு நிதி அமைச்சக செயலராக இருந்த அரவிந்த் மாயாராம், 'டெ லா ரூ' நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை 2015 வரையில் நான்கு முறை நீட்டித்து வந்துள்ளார்.

இதை அடுத்து 2012 முதல் 2015 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு 'டெ லா ரூ' நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் நோட்டுகளுக்கான காகிதங்களை வழங்கும் ஒப்பந்தம் கிடைத்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக நாட்டின் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறவேண்டிய பாதுகாப்பு சார்ந்த அனுமதியைப் பெறவில்லை. மேலும், அப்போதைய நிதி அமைச்சரிடமும் ஒப்புதல் பெறவில்லை.

டெ லா ரூ
டெ லா ரூ

'டெ லா ரூ' நிறுவனத்துக்குக் காலாவதியான ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக நீட்டித்துள்ளார் அரவிந்த் மாயாராம். 'அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்குத் தெரியாமல் அரவிந்த் மாயாராம் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை' என்று கூறப்படுகிறது.

'டெ லா ரூ' விஷயத்தில் இன்னொரு சிக்கல் என்னவெனில், மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கான பேப்பர்களைத் தருவதாகக் கூறும் டெ லா ரூ நிறுவனம், இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சமயத்தில் அதற்கான எந்தவித காப்புரிமையையும் கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதாவது, சி.பி.ஐ விசாரணையில் இந்த 'டெ லா ரூ' நிறுவனம் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கான பேப்பர்களை உற்பத்தி செய்வதற்கான காப்புரிமையைப் பெறுவதற்கு ஜூன் 28, 2004 அன்றுதான் விண்ணப்பித்திருக்கிறது என்பதும், அந்த காப்புரிமை மார்ச் 13, 2009-ல் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 17, 2011-ல் தான் காப்புரிமை வழங்கப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வழங்கும் அதே ரூபாய் நோட்டுகளுக்கான பேப்பர்களை நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இந்த நிறுவனம் சப்ளை செய்துள்ளது.

இதனால் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இந்தக் கள்ள ரூபாய் நோட்டுகள் மும்பையில் பிடிபட்டதும் செய்திகளில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இதை அடுத்து இந்த ஊழல் தொடர்பாக நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் 2018-ல் சி.பி.ஐ தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியது.

தற்போது இந்த விவகாரத்தில் அரவிந்த் மாயாராம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளுக்கான காகிதங்களை வழங்கும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு 'டெ லா ரூ' நிறுவனம் இந்திய ஏஜென்டுகளுக்கு லஞ்சம் வழங்கிய பனாமா பேப்பர்ஸ் வெளியீட்டில் அம்பலமாகி இருப்பதையும் மறக்கக்கூடாது. ஆனால், 2015-க்குப்பிறகு இந்த நிறுவனத்துக்கு எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை.

ராகுல் காந்தியுடன் அரவிந்த் மாயாராம்
ராகுல் காந்தியுடன் அரவிந்த் மாயாராம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்த 'பாரத் ஜோடோ யாத்ரா'வில் அரவிந்த் மாயாராம் கலந்துகொண்ட அடுத்த நாள் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாயாராம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். இந்த 'டெ லா ரூ கரன்சி ஊழல்' விவகாரத்தில் அடுத்து ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ விசாரணை பாயுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தவிர, 2016-ல் பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை திடீர் என்று கொண்டுவந்ததற்கான பல்வேறு காரணங்களில் இதுவும் ஒன்று சொல்லப்படுகிறது. மேலும், ராகுல்காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்ரா' குறித்து அவதூறுகளைக் கிளப்பவே இந்த வழக்கு இப்போது தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பட்ஜெட்டுக்குப் பிறகு அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது!