Published:Updated:

ஏர் இந்தியாவின் 100% பங்குகளை வாங்கலாம்! - வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சலுகை

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏற்கெனவே, ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு 2018-ம் ஆண்டே வெளியிட்டது. ஆனால், யாருமே அந்த நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை.

நேற்று (04.03.2020) கூடிய கேபினெட் மந்திரிசபைக்கூட்டத்தில் ஏர் இந்திய நிறுவனத்தை விற்பனை செய்வதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாங்குவதற்கான ஒப்புதலை கேபினெட் வழங்கியுள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா
vikatan

தற்போதுள்ள விதிமுறைகளின்படி வெளிநாடுவாழ் இந்தியர்களால் 49% பங்குகளை மட்டுமே வாங்க முடியும். எனவே, இதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் 100% பங்குகளையும் வாங்குவதற்கு ஒப்புதல் தந்துள்ளனர். இதன்படி, வெளிநாடுவாழ் இந்தியர்களும் உள்நாட்டு முதலீட்டாளர்களாகக் கருதப்படுவார்கள்.

ஏற்கெனவே, ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு 2018-ம் ஆண்டே வெளியிட்டது. ஆனால், யாருமே அந்த நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்துக்கு இருந்த 60,000 கோடி ரூபாய் கடனில் 33 ஆயிரம் கோடி ரூபாயை ஏலத்தில் எடுப்பவர்கள் செலுத்தவேண்டுமென்று கூறப்பட்டது. ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை இவ்வளவு தொகையைச் செலவழித்து வாங்க யாரும் முன்வரவில்லை. அடுத்ததாக, கடந்த ஜனவரி 27-ம் தேதியில் செலுத்தவேண்டிய கடன் தொகையை 23,286.5 கோடியாகக் குறைத்தது. மேலும், 100% பங்குகளையும் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்தது. எனினும் பெரிதும் யாரும் ஆர்வம்காட்டவில்லை.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா
vikatan

எனவே, தற்போது வெளிநாடுவாழ் இந்தியர்களை இதில் முழுமையாகப் பங்கேற்கச்செய்வதற்காகச் சட்டத்தில் திருத்தம் செய்ய கேபினெட் மந்திரிசபையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் எடுப்பதற்கு மார்ச் 17 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க அதானி குழுமமும், டாட்டா சன்ஸ் நிறுவனமும் ஆர்வம்காட்டுவதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு