Published:Updated:

மதுரையில் பிறந்த அனந்த நாகேஸ்வரன் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்..!

டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்

நியமனம்

மதுரையில் பிறந்த அனந்த நாகேஸ்வரன் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்..!

நியமனம்

Published:Updated:
டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார்.

மதுரையில் பிறந்து வளர்ந்த அவர், மதுரை டி.வி.எஸ் பள்ளியில் படித்தவர். மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்து முடித்தபின், அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தார். பின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார். படித்தபின் உலகப் புகழ் பெற்ற யு.பி.எஸ், கிரெடிட் சூஸ் நிறுவனங் களில் பணியாற்றினார். பெரும்பாலான மேற்குலக நாடுகளில் இவர் பணியாற்றி யிருக்கிறார். கடைசியாக, ஜூலியஸ் பேயர் முதலீட்டு நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாகப் பணியாற்றினார்.

ஆசிரியர் அனந்த நாகேஸ்வரன்

சர்வதேசப் பொருளாதாரம் குறித்து சிந்திப் பதிலும் எழுதுவதிலும் பேசுவதிலும் ஆர்வத்துடன் செயல்படுபவர் அனந்த நாகேஸ்வரன். பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்மில் சர்வதேசப் பொருளாதாரம் குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ் மென்ட் கல்லூரியிலும் சர்வதேசப் பொருளாதாரம் குறித்து மாணவர்களுக்குப் பாடம் நடத்திவந்தார்.

சென்னையை அடுத்துள்ள ஐ.எஃப்.எம்.ஆர் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் டீனாக 2017 - 2019 வரை பணியாற்றினார். க்ரியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்
டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன்

அனந்த நாகேஸ்வரனின் அரசியல் சித்தாந்தம்

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் வலதுசாரி பொருளாதார சிந்தனையாளர் ஆவார். திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்பவர். தொடர்ந்து பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்தாமல், அதன் போக்கில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவர். அரசாங்கங்கள் பொருளாதாரப் பாதையை நிர்ணயம் செய்யலாமே தவிர, அதைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியான எண்ணம் கொண்டவர்.

பொருளாதாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனாவின் நடவடிக்கைகள் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருபவர். சீனாவின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருபவர். காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து வந்த அவர், பா.ஜ.க-வின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பவர். பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் சில ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

நான்காவது தமிழர்

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்கும் நான்காவது தமிழர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் ஆவார். இதற்குமுன் இருந்த டாக்டர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியம், டாக்டர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, தற்போது டாக்டர் அனந்த நாகேஸ்வரன் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.

தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு தற்போது முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் சஞ்சய் சன்யால் உட்பட பலரது பெயரும் அடிபட்டது. இறுதியாக, அனந்த நாகேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் இந்தப் பதவிக்கு சில மாதங்களுக்குமுன்பே தேர்வு செய்யப்பட்டிருந்தால், கடந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை அவர் தயார் செய்திருப்பார். ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், ``தொடர்ந்து இந்தப் பதவியில் இருக்கப்போவதில்லை” என்று கடந்த செப்டம்பரிலேயே அறிவித்தபின்னும், புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், கடந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தற்போது முதன்மைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் சஞ்சய் சன்யால்தான் தயாரித்தார்.

அனந்த நாகேஸ்வரனின் புத்தகங்கள்

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் இதுவரை நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். `தி எக்னாமிக்ஸ் ஆஃப் டெரிவேட்டிவ்’ அவர் முதலில் எழுதிய முதல் புத்தகம் ஆகும். `தி டெரிவேட்டிவ்ஸ்’ என்கிற புத்தகம், தற்போது நிதித்துறை செயலாளராக இருக்கும் டி.வி.சோமநாதனுடன் சேர்ந்து எழுதிய புத்தகம் ஆகும். `கேன் இந்தியா குரோ?’ என்கிற புத்தகம் குல்சர் நடராஜனுடன் சேர்ந்து எழுதிய புத்தகம் ஆகும். இந்தியாவினால் அதிவேகமான முன்னேற்றம் காண முடியுமா என்பது குறித்து எழுதப்பட்ட இந்தப் புத்தகம் முக்கியமானது என்பதால், எல்லோரும் இதை எளிதாகப் படிக்க ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கும்படி செய்திருக்கிறார். (இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் தரவிறக்கிப் படிக்க: https://carnegieendowment.org/files/CEIP_CanIndiaGrow_Final_.pdf). `தி ரைஸ் ஆஃப் ஃபைனான்ஸ்’ என்கிற புத்தகம் உலக அளவில் நிதிப் பொருளாதாரம் செயல்படுகிறது என்பதை விளக்கும் புத்தகமாகும்.

சிங்கப்பூர் தமிழர்

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு அங்கு ஒரு சர்வதேச இந்தியப் பள்ளியைத் தொடங்கியதில் அனந்த நாகேஸ்வரனுக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தியாவில் புதிதாக ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் தக்‌ஷசீலா அமைப்பைத் தொடங்கியதிலும் இவருடைய பங்கு முக்கியமானது.

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் தற்போது சிங்கப்பூரில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். அவரின் மனைவி ரம்யா, சென்னையைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் தொண்டு அமைப்பு ஒன்றைத் தொடங்கி, இந்தியப் பெண் களுக்கும் பிற ஆசிய நாட்டுப் பெண்களுக்கும் முன்னேற்றம் காண்பதற்கான பல்வேறு உதவி களைச் செய்துவந்தார். அவரின் மகள் அமெரிக்காவில் பொருளா தாரம் படித்துவிட்டு, தற்போது சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மகன், பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

கர்நாடக இசை ஆர்வலர்

கர்நாடக இசையில் டாக்டர் அனந்த நாகேஸ்வரனுக்கு ஆர்வம் அலாதியானது. உலகில் எங்கிருந்தாலும் டிசம்பர் மாதம் சென்னைக்கு வந்து, இங்கு நடக்கும் கச்சேரிகளில் கலந்து கொண்டு ரசிப்பார். கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகங்கள், அவற்றுக்கு இடையேயான யாசங்கள், ஆலாபனைகளில் உள்ள சூட்சுமங்கள் என இழை இழையாக ஆராய்ந்து ரசிப்பவர்.

இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றம் காணச் செய்யும் பல நல்ல ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவார் என்று எதிர்பார்ப்போம்.

தமிழ் ஆர்வலர்!

டாக்டர் அனந்த நாகேஸ்வரன் தமிழில் எழுதுவதிலும் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 15 ஆண்டுகளாக நாணயம் விகடனில் அவர் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். சர்வதேசப் பொருளாதாரம் குறித்து நாணயம் விகடனில் அவர் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நாணயம் விகடன் நடத்திய பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். கொரோனாவால் ஏற்பட்ட உலகப் பொருளாதார பிரச்னைகள் குறித்து சிங்கப்பூரில் இருந்தபடி ஜூம் இணையதளம் மூலம் தமிழ் வாசகர்களுடன் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism