அமேசான் நிறுவனத்தின் சட்டப் பிரதிநிதிகள் சிலர் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்த நிறுவனத்திற்கு எதிரான விசாரணையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அமேசான் இந்தியக் கிளை, கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவிலான சட்டச் செலவுகள் செய்துள்ளதாகவும் அதில் பெரும்பகுதி லஞ்சமாக வழங்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையை இந்நிறுவனமே எடுத்துள்ளதாகவும் இதுதொடர்பான அதிகாரிகளை தற்காலிக விடுப்பில் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆனால், உள்நிறுவன விசாரணையை முடிக்கும் வரை பொறுத்திருக்காமல், மத்திய அரசு உடனடியாக தன் விசாரணையை தொடங்கவுள்ளது. அதே நேரம், இந்த விசாரணையை முன்னெடுப்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை, இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டால், மத்திய, மாநில அளவில் என்று இருதரப்பிலிருந்தும் விசாரிக்கப்படும். ஆனால், சட்டச் செலவுகள் என்ற கணக்கில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 8,546 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக எழுந்த இந்தக் குற்றச்சாட்டை அமேசான் நிறுவனம் மறுத்துள்ளது.

அத்துடன், சட்டம் மற்றும் தொழில்சார்ந்த செலவுகளின்கீழ் வரவேண்டிய தொகை, தவறுதலாக சட்டச் செலவுகளின்கீழ் மட்டும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதில் சட்டச் செலவுகள் மட்டுமின்றி, அவுட்சோர்சிங், வரி ஆலோசகர்கள், வாடிக்கையாளர் ஆராய்ச்சி, அமைப்பியல் சேவைகள், வாடிக்கையாளர் சேவை தொகை போன்ற தொழில்சார் செலவுகளும் அடங்கும் என்றும் சட்டச் செலவிற்காக ரூ. 52 கோடி மட்டுமே செலவிடப்பட்டது என்றும் அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.