Published:Updated:

கீழக்கரையிலிருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் செல்லக்கனி துதல்...

துதல் ( உ.பாண்டி )

கிட்டத்தட்ட 50 வருஷமா துதல் வியாபாரம் நாங்க பண்ணிகிட்டு இருக்கோம். கடைய தொறந்ததுலயிருந்து இப்போ வர ஒரு நாள்கூட கடைய அடச்சதே இல்ல... தீபாவளி, பொங்கல், ரம்ஜான் பண்டிகைக் காலங்களில் இந்த துதல் அல்வா ராமநாதபுரத்தில் இருந்து உலகம் பூராவும் ஏற்றுமதி ஆகும்.

கீழக்கரையிலிருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் செல்லக்கனி துதல்...

கிட்டத்தட்ட 50 வருஷமா துதல் வியாபாரம் நாங்க பண்ணிகிட்டு இருக்கோம். கடைய தொறந்ததுலயிருந்து இப்போ வர ஒரு நாள்கூட கடைய அடச்சதே இல்ல... தீபாவளி, பொங்கல், ரம்ஜான் பண்டிகைக் காலங்களில் இந்த துதல் அல்வா ராமநாதபுரத்தில் இருந்து உலகம் பூராவும் ஏற்றுமதி ஆகும்.

Published:Updated:
துதல் ( உ.பாண்டி )

அல்வா - இந்த இனிப்பை வெறுக்கும் தமிழன் இருக்க முடியாது. என்னதான் பல வகையான அல்வாக்கள் இருந்தாலும், ராமநாதபுரத்தில் புகழ்பெற்ற துதல் அல்வாவை மற்ற வகையான அல்வாக்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும். அந்தளவுக்கு ருசியா இருக்கும். அதிலும் கீழக்கரை துதல் அல்வாவுக்கு உலகம் பூராவுமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கீழக்கரை துதல்
கீழக்கரை துதல்
படம்: உ.பாண்டி

தீபாவளி, பொங்கல், ரம்ஜான் பண்டிகைக் காலங்களில் இந்தத் துதல் அல்வா ராமநாதபுரத்தில் இருந்து உலகம் பூராவும் ஏற்றுமதி ஆகும். கீழக்கரை செல்லக்கனி துதல் கடையின் உரிமையாளர் அமீரிடம் இந்தத் துதல் பற்றிக் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

துதலை எப்படி செய்றீங்க?

``நம்ம கடையில மூணு வகையான துதல் இருக்குதுங்க. மைதா துதல், அரிசி மாவு துதல், கருப்பட்டி துதல். மைதா துதல்னா சீனி, மைதா அப்புறம் கொஞ்சம் கருப்பட்டி இன்னும் சில பொருள்கள் சேத்து பண்ணுவோம்.

அமீர்
அமீர்
உ.பாண்டி

அரிசி மாவு துதல்ல மைதா மாதிரி செஞ்சு அரிசி மாவு சேர்ப்போம். கருப்பட்டி துதல்னா சுத்தமான தேங்காப்பால் முக்கியமா, கருப்பட்டி அதிகமா சேர்ப்போம்.

எல்லாரும் விரும்பி வாங்குறது கருப்பட்டி துதல்தான். எல்லாரும்னா சர்க்கரை வியாதி உள்ளவங்ககூடதான். சர்க்கரை வியாதி உள்ளவங்ககூட நம்ம துதல்லைத் தாராளமா சாப்பிடலாம்.

தினமும் 15 சட்டி வரை கிண்டுவோம். தீபாவளி டைம்னா நாங்க ரொம்பவே பிஸி. தமிழ்நாடு பூரா ஆர்டர் வந்திடும். பெரிய பெரிய கம்பெனிலயிருந்து பெரிய பெரிய ஆர்டர் வரும். அதுனால தீபாவளி டைம்ல வழக்கத்தைவிட கொஞ்சம் இல்ல அதிகமாவே துதல் செய்வோம்.

துதல்
துதல்
உ.பாண்டி

ஈஸியா துதல்ல செஞ்சிட முடியாது. மூணு மணி நேரம் வரை கிண்டிக்கிட்டே இருக்கணும். ஒரு நிமிஷம்கூட கிண்டாம விட்டுட்டா, துதல் பூரா புடுச்சிடும். ஒரு மாசம் வரைக்கும் நாங்க பண்ற துதல் கெட்டுப் போகாது.

நம்ம ஊர்லயிருந்து வெளிநாடுகளுக்கு போறவங்க துணிமணிய எடுத்துக்கிட்டு போறாங்களோ இல்லையோ, நம்ம துதல்லதான் முதல்ல வாங்கிட்டுப் போறாங்க. துபாய், மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சவுதி, லண்டனுக்கு பசங்க வேலைக்குப் போகும்போது நம்ம கடைக்கு வந்து 10 கிலோ தொதல் வாங்கி குடுத்துவிடுவாங்க.

இப்படி ஒரு நாளுபேரு நம்மகிட்ட வந்து உங்க துதல் ரொம்ப நல்லா இருக்குதுனு சொல்லும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்குது.’’

இந்தத் துதல்ல எப்ப இருந்து பண்ணி விக்கிறீங்க?

``வியாபார ரீதியா பல வருஷத்துக்கு முன்னாடி சிலோனுக்கு போன எங்களோட முன்னோர்கள் இந்த துதல் அல்வாவ பார்த்து இருக்காங்க. ரொம்ப நல்லா இருக்கேனு இந்தியாவுக்கு வந்த பிறகு, சும்மா வீட்ல பண்ணி பார்த்து இருக்காங்க. அப்புறம் ஒரு நாளைக்கி வீட்லேயே ஒரு சட்டி துதல் பண்ணி அக்கம்பக்கத்துல வித்தாங்க. துதல்க்கு நல்ல வரவேற்பு கிடச்சது. ஒரு சட்டி துதல் இரண்டு சட்டியா மாறி இப்போ இவ்ளோ பெரிய கடையா மாறியிருக்கு.

துதல்
துதல்
உ.பாண்டி

கிட்டத்தட்ட 50 வருஷமா துதல் வியாபாரம் நாங்க பண்ணிக்கிட்டு இருக்கோம். கடைய தொறந்ததுலயிருந்து இப்போ வர ஒரு நாள்கூட கடைய அடச்சதே இல்ல. சின்னச் சின்ன வியாபாரிங்க நம்மகிட்ட வந்து வாங்கிட்டுப் போய் அவங்க கடைல வச்சு விப்பாங்க. திடீர்னு ஓடிவந்து எங்க வீட்டுக்கு விருந்தாளி வந்து இருக்காங்க, அவங்களுக்கு துதல் குடுத்துவிடணும்னு வாங்கிக்கிட்டுப் போவாங்க.

நம்ம கடை துதல்ல சாப்பிடுறதுக்காகவே பல மாநிலம், பல மாவட்டத்திலிருந்து வருவாங்க. அதுனால வரவங்க ஏமாந்திடக் கூடாதுனு ரம்ஜானோ, தீபாவளியோ எப்பவுமே கடைய மூட மாட்டோம். தமிழ்நாடு மட்டும் இல்ல, உலகம் பூரா யாரு எவ்வளவு கேட்டாலும் உடனே பண்ணி குடுத்திடுவோம். இங்கேயிருந்து வாங்கிட்டு போய் தமிழ்நாட்ல பல மாவட்டத்துல கீழக்கரைத் துதல்னு விக்கிறாங்க.

துதல்
துதல்
உ.பாண்டி

வெளிநாடுகள்னு வரும்போது அதிகமா சிங்கப்பூர், மலேசியா, சவுதி, துபாய்க்கு அனுப்புவோம். அப்புறம் மற்ற நாடுகள்லயிருந்து கேட்டாலும் உடனே கொடுத்திடுவோம்’’ என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ``அண்ணே அரை கிலோ துதல்ல கொடுங்க’’ என்று ஆரம்பிச்சு, 10 கிலோ தாங்க, 15 கிலோ தாங்கனு மக்கள் போட்டி போட்டு வாங்க ஆரம்பித்ததைப் பார்த்தால், அட, இந்தத் துதல்லுக்கு இவ்வளவு கூட்டம் இருக்கா என்று எங்களுக்கு மலைப்பாக இருந்தது.

அடுத்தமுறை ராமநாதபுரத்துக்கோ, கீழக்கரைக்கோ போனால், அவசியமா இந்தத் துதலை வாங்கி சாப்பிட மறக்காதீங்க!