Published:Updated:

சரியும் சீனப் பொருளாதாரம்... நமக்கு பாதிப்பு ஏற்படுமா?

அனந்த நாகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அனந்த நாகேஸ்வரன்

சீனப் பொருளாதாரம்

அண்மைக் காலமாக உலக அளவில் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்குக் காரணமாக அமைந்து வருகிறது சீனப் பொருளாதாரம் குறித்த செய்திகள். சீனாவில் இப்போது என்ன நடக்கிறது, சீனப் பொருளாதாரம் சரிகிறதா, இதனால் நமக்கு பாதிப்பு ஏற்படுமா என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிற மாதிரி நாணயம் விகடன் கிளப்ஹவுஸ் நிகழ்ச்சியில் பேசினார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன். சிங்கப்பூரில் இருந்தபடி அவர் பேசியதன் சுருக்கம் இனி...

‘‘இயக்குநர் கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் பாடலில், ‘‘காலை எழுந்தவுடன் நாளையக் கேள்வி...’’, ‘‘மனிதன் இன்ப, துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்’’, ‘‘கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா..?’’ எனக் கேள்வி குறித்து பல வரிகள் வரும். சீனாவைப் பொறுத்தவரை, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் கடைசியில் கேள்விகளே மிஞ்சும். காரணம், இந்தக் கேள்விகளுக்கு நாயகனாக இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங். சீனாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து, அந்த அரசாங்கம் அதிக புள்ளிவிவரங்களைத் தருவ தில்லை. அப்படியே தரும் புள்ளிவிவரங்களும் எந்த அளவுக்கு நம்பத் தகுந்தவை என்பதும் கேள்விக்குறியே. உதாரணமாக, கொரோனா பெருந்தொற்று நோயே அங்குதான் தோன்றியது என்றாலும், அது இயற்கையாகத்தான் தோன்றியதா அல்லது ஆய்வுக்கூடத்தில் நடந்த ஆராய்ச்சியில் தெரியாமல் வெளியேறியதா என்கிற கேள்வி களுக்கு பதில் இல்லை.

கடந்த ஓராண்டுக் காலமாக அங்கு நிறைய மாற்றங்கள் நடந்து வருகின்றன. அலிபாபா நிறுவனத்தின் அதிபர் ஜாக் மா, சீன அரசின் நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு விமர்சித்தார். அவர் எந்தத் தைரியத்தில் இப்படிப் பேசுகிறார் என அப்போதே ஆச்சர் யப்பட்டார்கள் பலர். விளைவு, அவரது நிறுவனத்தை அமெரிக்கச் சந்தையில் பட்டிய லிட நினைத்தபோது, கடைசி நேரத்தில் அதைத் தடுத்தது. இன்று அவர் வெளியே தலைகாட்டுவதே இல்லை. அவர் நடத்தும் முக்கியமான மேனேஜ்மென்ட் ஸ்கூலில் தலைமைப் பதவியில் அவர் தொடர்ந்து இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறிதான்.

அனந்த நாகேஸ்வரன்
அனந்த நாகேஸ்வரன்

அலிபாபா மாதிரி, சீனாவின் மிகப் பெரிய கார் சேவை நிறுவனமான டிடி நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் செயல்பாடே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. சீனாவில் இருக்கிற ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மீது பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘‘பூனை கறுப்போ, சிவப்போ, அது எலியைப் பிடிக்கிறதா, இல்லையா என்பதே விஷயம்’’ என்றார் முன்னாள் சீனப் பிரதமர் டென் சியாவோ பிங். கம்யூனிஸமோ, முதலாளித் துவமோ, வளர்ச்சி வேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்தது. இதைத் தொடர்ந்து சீனா அதிவேகமாக வளர ஆரம்பித்தது. 1979-94 வரை சீனா அடைந்த வளர்ச்சிக்கு தங்கப் பதக்கமும், 1994 - 2003 வரை அடைந்த வளர்ச்சிக்கு வெள்ளிப் பதக்கமும் தரலாம். ஆனால், 2003-க்குப் பிறகு, அடைந்த வளர்ச்சிக்கு வெண்கலப் பதக்கம்தான் தரலாம். காரணம், 2005-க்குப் பிறகு, சீனாவின் வளர்ச்சியானது மக்களின் உழைப்பாலும், தொழில் முன்னேற்றத்தாலும் வரவில்லை. அளவுக்கதிகமாகக் கடன் வாங்கியதால்தான் அங்கு அபரிமிதமாக வளர்ச்சி ஏற்பட்டது. சீனாவின் ஜி.டி.பி பிரமாண்டமாக நமக்குத் தெரிந்தாலும், அதன் கடன் இன்னும் பிரமாண்டமானது. இந்தக் கடன்தான் இன்றைக்கு ‘எவர்கிராண்ட்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் வெளிப்படுகிறது. இந்த நிறுவனத்தைப்போல இன்னும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சீனாவில் கடன் சிக்கலில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கின்றன.

அடுத்த ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியமான தேர்தல் நடக்கப்போகிறது. இந்தத் தேர்தலில் சீன அதிபராக இருப்பவர் ஆயுள் காலம் வரை பதவி வகிக்கலாம் என்கிற புதிய விதிமுறை கொண்டுவந்தால், மக்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ என்று நினைத்து, சீன அரசாங்கம் இப்போது பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

சீனாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களைப் பார்த்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் சரியத் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. இதனால் உலக அளவில் சில பாதிப்புகள் ஏற்படலாம்; சில பொருள்களின் விலை உயரலாம். ஆனால், அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போது ஏற்பட்ட மாதிரியான பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. டாலருக்கு இருக்கும் பலம், சீன யென்னுக்கு இல்லை. சீனப் பொருளாதாரம் பாதிப்படைந்தால், இந்தியாவுக்கு சில நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நமது அரசாங்கம் தயாராக வேண்டும்’’ என்று பேசி முடித்த டாக்டர் அனந்த நாகேஸ்வரன், வாசகரின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.