Published:Updated:

83 டன் போலித்தங்கம்; 2.8 பில்லியன் டாலர் கடன்பெற்ற நிறுவனம்... சீனாவை உலுக்கிய தங்க ஊழல்!

தங்கம் (மாதிரி படம்)
தங்கம் (மாதிரி படம்)

மற்ற முதலீடுகளைக் காட்டிலும், தற்போது தங்க முதலீடுதான் அதிகமான லாபத்தைக் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த மோசடி அம்பலமாகியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு விதமான கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

பல ஆண்டுகளாகப் போலி கரன்சி நோட்டுகள் சர்வ சாதாரணமாக வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதில் இந்திய நோட்டுகள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் அடங்கும்.

ஆனால், தங்கத்தில் போலித் தங்கம் என்பது எப்போதாவது ஒரு முறை நடக்கும் விஷயமாகும். அதுவும் மிகச் சிறிய அளவில், நகைக்கடைகளில் போலித் தங்கம் கை மாறி பிடிபட்டுள்ளதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், சீனாவிலுள்ள `கிங் கோல்டு ஜுவல்லரி' நிறுவனம்  83 டன் எடையுள்ள போலியான தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ள விவகாரம், தங்கச்சந்தையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற முதலீடுகளைக் காட்டிலும், தற்போது தங்க முதலீடுதான் அதிகமான லாபத்தைக் கொடுத்துவருகிறது. இந்த நிலையில் இந்த மோசடி அம்பலமாகியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு விதமான கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் வுகான் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட, மிகப்பெரிய தங்க பதப்படுத்தும் மற்றும் தங்க நகை தயாரிப்பு நிறுவனம்தான் இந்த `கிங் கோல்டு ஜூவல்லரி' நிறுவனம். இந்நிறுவனம், முன்னாள் ராணுவ வீரரான `ஜியா ஜிஹோங்' என்பவரால், 2002-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டபோது, சிறிய தங்கச் தொழிற்சாலையாக இருந்து, இப்போது உலகிலேயே மிகப்பெரிய தனியார் தங்க நகை நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் `தங்கமயமான எதிர்காலம் கொண்ட நிறுவனம்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  ஆனால், உண்மையில் இது `செம்புமயமான நிறுவனம்' என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 83 டன் எடை கொண்ட, தங்க முலாம் பூசப்பட்ட செம்புகளை ஈடாக வைத்துதான் இந்நிறுவனம் 2.8 பில்லியன் டாலர் (ரூ.20,913 கோடி) அளவுக்கு 14 நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றிருக்கிறது. இந்தத் தங்கத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டிருப்பது தனிக்கதை. 

கிங்கோல்டு ஜூவல்லரி
கிங்கோல்டு ஜூவல்லரி

கடந்த 5 வருடங்களாக இந்த நிறுவனம் தன்னிடம் இருந்த தங்கம் என ஈடாகக் காட்டியவை அனைத்தும் தங்க முலாம் பூசிய செம்பு கட்டிகள் என்பதைக் குறிப்பிட்டு, பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட புலனாய்வு பத்திரிகையான `கைஷின்' இந்த மிகப்பெரிய தங்க ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பத்திரிகை நிறுவனம், தங்கத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டி, ``2019-ம் ஆண்டு நிலவரப்படி, இது சீனாவின் ஆண்டு தங்க உற்பத்தியில் 22% அல்லது சீனாவின் ஆண்டுத் தங்க இருப்பில் 4.2 சதவிகிதமாகும். இது சீனப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பாதிப்பாகும். மேலும், இது நாட்டின் கடன் மதிப்பைச் சிதைத்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளது. 

ரூ.2,09,131.580 கோடி
கிங்கோல்டு நிறுவனம் கடன் வாங்கிய தொகை!

கிங்கோல்டு நிறுவனம் கடன் வாங்கி இருந்த நிறுவனங்களில் ஒன்று `டங்குவான் டிரஸ்ட்.' இந்த நிறுவனம் திவாலாகும் நிலையை அடைந்துள்ளது. அந்த நஷ்டத்தைச் சரிகட்ட, கிங்கோல்டு நிறுவனத்தின் தங்க விவரம் குறித்து ஆராய்ந்தபோது, போலித் தங்க விவகாரம் வெளியாகியுள்ளது. இது மற்ற நிதி நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மற்றொரு நிதி நிறுவனமான `மின்ஷெங் டிரஸ்ட்' நிறுவனம் நடத்திய ஆய்வில், அந்த நிறுவனத்திடமும் போலி தங்கக் கட்டிகளை ஈடாகக் காட்டி கிங்கோல்டு நிறுவனம் கடன் வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.

சீனாவின் மொத்த தங்க இருப்பானது 1,948.30 டன்னாகும். இது உலக நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா 8,134 டன் தங்கத்துடன் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் முறையே ஜெர்மனி (3,364 டன்) மற்றும் இத்தாலி உள்ளன (2,452 டன்). இந்தியா முதல் பத்து இடங்களில் ஒன்பதாவது இடத்தில் (642 டன்) தான் உள்ளது. உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்திருக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றான சீனாவுக்கு இந்தத் தங்க ஊழலானது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Kingold chairman Jia Zhihong
Kingold chairman Jia Zhihong

அமெரிக்க பங்குச்சந்தை இன்டெக்ஸான `நாஸ்டாக்' பங்குச்சந்தையில் `கிங் கோல்டு ஜூவல்லரி'  நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்நிறுவனத்தின் தங்க ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருப்பதால், இன்று (3.7.2020) இதன் பங்குவிலை 20% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால் பங்கு முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த நிறுவனப் பங்கின் திடீர் விலை வீழ்ச்சியால், அமெரிக்க முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்புகளைச் சந்திப்பார்கள் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

kingold jewelry
kingold jewelry

இந்த மாபெரும் தங்க ஊழல் குறித்து கிங்கோல்ட் நிறுவனத் தலைவர் ஜியாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, `தாம் எதுவும் தவறு செய்யவில்லை. போலி நகைகளை நான் ஈடாகக் காட்டவில்லை' என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகிறார். 

இன்றைய தங்க விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

இன்றைய வெள்ளி விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு