Published:Updated:

நீங்கள் சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி? நிபுணரின் வழிகாட்டல்...

நிதி ஆலோசகர்...
பிரீமியம் ஸ்டோரி
நிதி ஆலோசகர்...

F I N A N C I A L P L A N N I N G

நீங்கள் சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி? நிபுணரின் வழிகாட்டல்...

F I N A N C I A L P L A N N I N G

Published:Updated:
நிதி ஆலோசகர்...
பிரீமியம் ஸ்டோரி
நிதி ஆலோசகர்...

ஆசை... பலருக்கும் பலப்பல ஆசை. சொந்த வீடு அமைக்க ஆசை, விடுமுறைகளை இனிதாகச் செலவழிக்க ஆசை, கடனில்லாத வாழ்க்கை வாழ ஆசை... இப்படி ஆசைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆசைகளைப் பூர்த்தி செய்ய வரவு செலவு விவகாரங்களைச் சரிவரக் கையாள்வதும் சரியான இலக்கை எட்ட அதற்கேற்ற தொகையில் முதலீடு செய்வதும் அவசியம். இதற்கான முடிவுகளை செய்ய நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள்தான் நிதி ஆலோசகர்கள்.

இந்த நிதி ஆலோசகர்களை எப்படித் தேர்வு செய்வது, சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகரும் மைஅஸெட்ஸ் கன்சாலிடேஷன் (myassetsconsolidation.com) நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

நிதி ஆலோசகர் என்பவர்...

‘‘நிதியை எப்படிக் கையாள்வது, எப்படித் திட்டமிட்டு முதலீடு செய்வது, செலவு செய்வது என எளிமையாக எடுத்துச்சொல்லும் வேலையைச் செய்பவர்கள்தான் நிதி ஆலோசகர்கள். குறிப்பிட்ட நிதி இலக்கை அடைய எந்தெந்த முதலீடு களில் கவனம் செலுத்தவேண்டும் என்பது முதற்கொண்டு வரி விலக்குக்கு அறிவுரை சொல்வது, முதலீட்டுக்கான திட்டமிடல், ஓய்வுக் காலத் திட்டமிடல் என அனைத்து வகையான யோசனைகளையும் நிதி ஆலோசகரே சரியாகத் தந்துவிடுவார்.

முதலீடு செய்வதில் ஒவ்வொரு வருடைய ரிஸ்க் எடுக்கும் தன்மையும் சூழ்நிலைக்குத் தகுந்ததுபோல மாறுபடும். எனவே, ஒரு நிதி ஆலோசகர் சரியான முதலீட்டுத் திட்டங்களைத்தான் நமக்குப் பரிந்துரை செய்கிறாரா அல்லது சுய லாபத்துக்காகக் குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரை செய்கிறாரா என்பதைக் கவனிப்பது முக்கியம். நிதி ஆலோசகரை நியமித்தாகி விட்டது, இனி எந்த பிரச்னையும் இல்லை என்று நாம் இருக்காமல், நம்முடைய நிதி ஆலோசகர் நம்மை சரியான பாதையில் வழிநடத்துகிறாரா என்பதை அவ்வப்போது ஆராய்ந்து முடிவெடுப்பது முக்கியமான விஷயம்.

யார் நிதி ஆலோசகர்?

மூலதனச் சந்தைக்கான தேசிய மேலாண்மை மையம் (NISM- National Institute of Securities Management) நடத்தும் கோர்ஸானது லெவல் 1, 2 என இரு நிலைகளில் உள்ளன. இந்த இரு நிலைகளில் தேர்ச்சி பெறுபவரே நிதி ஆலோசகர் என்கிற தகுதியைப் பெறுகிறார். இந்த இரு நிலைகளிலும் நடக்கும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு லைசென்ஸ் நம்பர் வழங்கப்படும். இவர்கள் தங்கள் வெப்சைட்டுகளிலும் விசிட்டிங் கார்டுகளிலும் இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸர் எனப் போட்டுக் கொள்ளலாம். இந்த இன்வெஸ்ட் மென்ட் அட்வைஸர்களே வாடிக்கை யாளர்களிடம் கட்டணம் பெற்று வேலை செய்யும் தகுதியைப் பெறு கிறார்கள். என்.ஐ.எஸ்.எம் நடத்தும் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறாத பட்சத்தில் ஃபைனான்ஷியல் பிளானர் எனக் கூறிக்கொள்ளலாமே தவிர, இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸராகத் தன்னைக் கூறிக் கொள்ளக்கூடாது என்கிறது செபி விதிமுறை. எனவே, எந்த நிதி ஆலோசகரை அணுகும்முன்னும் நீங்கள் இதை ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம்.

நீங்கள் சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி? நிபுணரின் வழிகாட்டல்...

கட்டணம் வாங்கும் அட்வைஸர்...

நிதி ஆலோசகர்களில் கட்டணம் வாங்குபவர், வாங்காதவர் என இரு விதமாக இருக்கிறார்கள். இந்த இருவருமே நேர்மையானவர்களாக இருக்கலாம். கட்டணம் வாங்குபவராக இருந்தால் அவர் மற்ற யாரிடமும் அனுகூலத்தை எதிர்பார்க்காதவராக இருப்பார். கட்டணம் வாங்காதவராக இருந்தால், அவர் தனது வருமானத்துக்கு வேறு யாரையாவது சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்க வாய்ப்பு உண்டு.

சரியான நிதி ஆலோசகரைக் கண்டறிவது...

ஒரு நிதி ஆலோசகர் முதலீடுகள் பற்றி நன்கு தெரிந்துவைத்திருப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு முக்கியம் அவர் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும் என்பது. நிதி ஆலோசகரை நியமிக்கும் முன் அவருடைய பின்புலம், அவருக்கு எத்தனை வருட அனுபவம் இருக்கிறது, நமக்கு நம்பிக்கையான நபர் அவரை பரிந்துரைக்கிறாரா என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த விஷயங்களை அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது ஒருவிதம் என்றால், சம்பந்தப்பட்ட நிதி ஆலோசகரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வது மற்றொருவிதம். அவருடைய வாடிக்கையாளர்களில் சிலரிடம் பேசிக்கூட அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்.

சிறந்த நிதி ஆலோசகர் என்பவர், வாடிக்கையாளர்கள் கூறுவதை நிதானமாக முழுவதும் காதுகொடுத்து கேட்டபின் அதற்கேற்றபடி தீர்வுகளைக் கொடுப்பார். குறிப்பிட்ட விஷயங்களில் விசாலமான அறிவு இல்லாதபட்சத்தில், அவருக்குத் தெரியாத விஷயங்களை ‘எனக்குத் தெரியவில்லை’ என்றோ, ‘தெரிந்துகொண்டு சொல்கிறேன்’ என்றோ ஒளிவுமறைவில்லாமல் பேசுவார். தன் துறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அந்தத் துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பரிந்துரைப்பார்.

நமக்கேற்ற சரியான திட்டத்தைத்தான் நிதி ஆலோசகர் பரிந்துரை செய்கிறாரா அல்லது அல்லது அதனால் வரவிருக்கும் அனுகூலத்தை எதிர்பார்த்துப் பரிந்துரை செய்கிறாரா என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, குறைந்த பிரீமியத்தில் அதிக இழப்பீட்டைத் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தைத்தான் ஓர் ஆலோசகர் பரிந்துரை செய்வார். அந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தை விட்டுவிட்டு வேறொரு இன்ஷூரன்ஸ் திட்டத்தை ஒருவர் பரிந்துரை செய்தால், அதில் உள்ள காரணத்தை நாம் தாராளமாகக் கேட்கலாம்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான முதலீடு...

முதலீடு செய்யும்போது எல்லோருக்கும் ஒரே மாதிரியான முதலீடு என்பது சரிவராது. ஒவ்வொரு தனிநபரும் அவரவர்களின் இலக்குகளுக்கு ஏற்றபடி நிதித் திட்டமிடல் செய்து முதலீட்டில் இறங்குவதே சரியான அணுகுமுறை ஆகும். பாதுகாப்பான முதலீடுகளில் மட்டும் கவனம் செலுத்துபவர் களுக்குப் பங்குச் சந்தை முதலீடு பயத்தையே தரும். இதைப் புரிந்து கொள்ளாமல் பங்குச் சந்தை முதலீட்டையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினால், அவர் வேறொரு நிதி ஆலோசகரைத் தேடிப் போய்விடுவார். எனவே, முதலீட்டாளர் எடுக்க நினைக்கும் ரிஸ்க்கை அறிந்து, என்ன ரிஸ்க் எடுத்தால் என்ன வருமானம் கிடைக்கும் என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அவரை வெற்றி அடையச் செய்வதே சரியாகும்’’ என்றார் சுரேஷ் பார்த்தசாரதி.

உங்களுக்கான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்யும் போது இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism