Published:Updated:

முகேஷ் அம்பானியுடன் கைகோக்கும் கோகோ கோலா- இந்தியாவில் சந்தையை விரிவுபடுத்த இலக்கு!

coco cola
coco cola

இந்தியாவில் கோகோ கோலா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் கோகோ கோலா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அந்நிறுவத்தின் தற்போதைய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் குவின்சி, "இந்தியா எங்களை எப்போதும் கவர்ந்திழுக்கக் கூடியதொரு சந்தை. 2019-ம் ஆண்டைப் பொறுத்தவரை விற்பனை ஒரு பில்லியன் டாலராக இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில், இதை இருமடங்காக்குவதுதான் எங்கள் இலக்கு. தற்போது, எங்கள் நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய சந்தையாக உள்ள இந்தியா, வெகுவிரைவில் மூன்றாவது பெரிய சந்தையாக மாறும். அதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் பிரகாசமாக உள்ளன" என்றார். கோகோ கோலா விற்பனையில் அமெரிக்கா முதலிடத்திலும், மெக்சிகோ, பிரேசில், சீனா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.

coke
coke

வரும் காலங்களில், இந்திய கோகோ கோலா நிறுவனம் ,தனது Limca, Maaza, Thums up, Sprite, Fanta போன்ற பிராண்டுகளில் புதுவகை அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. இதில், சர்க்கரையற்ற பானங்களும் அடங்கும். மேலும், தனது இந்திய பிராண்டான Maaza-வை உலக அளவில் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மலிவு விலையில் கிடைக்கும் வகையில் நீரேற்றப்பட்ட புதிய பானங்கள், சத்துள்ள பானங்கள் மூலம் தனது வர்த்தகச் சந்தையை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியப் பொருளாதாரச் சரிவு இந்நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

கொரோனா பரவாமல் தடுக்கும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்!- டிக்டாக்கை கையிலெடுக்கும் WHO

ஏற்ற இறக்கமின்றி நடைபெற்றுவரும் வர்த்தகத்தில், 2020-ம் ஆண்டில் கண்டிப்பாக விற்பனை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதாகவும் குவின்சி கூறியுள்ளார். இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் தங்களது வர்த்தகச் சங்கிலிக்கு எந்தவித தடங்கலும் இல்லை என்றும், தொற்றுநோய் பரவுதல் தொடர்ந்தால் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறினார்.

2017-ம் ஆண்டில், கோகோ கோலா Fruit Circular Economic Initiative-ன் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய வேளாண் சுற்றுச்சூழல் அமைப்புடன் 1.7 பில்லியன் டாலர் (ரூ.11,000 கோடி) ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 முகேஷ் அம்பானியுடன் கைகோக்கும் கோகோ கோலா-  இந்தியாவில் சந்தையை விரிவுபடுத்த இலக்கு!

இதன் தொடர் நிகழ்வாக, கோகோ கோலா சில்லறை வர்த்தகத்தை இந்தியாவில் விரிவுபடுத்துவது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் குளோபல் தலைமை அதிகாரி ஜேம்ஸ் குயின்ஸே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியைச் சந்தித்துப் பேசியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கோகோ கோலா நிறுவனமும் கைகோத்து, இரண்டு நிறுவனத் தயாரிப்புகளின் சில்லறை வர்த்தகத்தையும் எப்படித் துரிதப்படுத்தலாம் என்று ஆலோசித்துள்ளனர்.

ஏற்கெனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனையகங்களில் கோகோ கோலா தயாரிப்புகளும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இந்தச் சந்திப்பின்மூலம் அவர்களுக்கு இடையேயான வணிக உறவை மேலும் வலுப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து என்னென்ன வகையான விளம்பர உத்திகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், ரிலையன்ஸ் தயாரிப்புகளின் விற்பனைக்குக் கூடுதல் திறப்புகள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்பு நிறுவனங்களோடு ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து செயல்பட்டுவருவதன் தொடர்ச்சியாகவே கோகோ கோலா நிறுவனத்துடனான சந்திப்பும் நடந்துள்ளதாக, ரிலையன்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு