
தொழில்நுட்பம்
சமீபத்தில் கிளாஸ்கோவில் நடந்த COP26 (Conference of the Parties) மாநாட்டில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் நமது பிரதமர் நரேந்திர மோடி உட்பட 120 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட சில விஷயங்கள் பற்றிப் பார்க்கும்முன், இந்த மாநாட்டின் வரலாறு பற்றி சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

சூடாகும் பூமி...
உலக வெப்பமயமாதலைக் (Global warming) கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகளின் மேற் பார்வையில் முதலாவது மாநாடு ஜெர்மனியில் 1995-ல் நடந்தது. உலக வெப்பமயமாதலின் மூலகாரணம் என்ன? கடந்த நூற்றாண்டில் தொழில் மயமாக்கலால் பல எரிபொருள்களை எரித்து கார்பன் டை ஆக்ஸைட் போன்ற வாயுக்கள் வெளியிடப்பட்டுள்ளன. CO2 போன்ற வாயுக்கள் சூட்டை உள்ளடக்கி பூமியின் வெப்பநிலையைக் கணிசமாக உயர்த்தியுள்ளன. இப்படியே போனால் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெப்பநிலை அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வெள்ளம், புயல், கனமழை போன்ற தீவிர தட்பவெட்ப நிலைகளை நாம் இன்று உலகெங்கிலும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவோம்.
பூமி சூடாவதைத் தடுக்க இந்த மாநாட்டில் ஐந்து முக்கியமான துறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அவை, சாலைவழிப் போக்குவரத்து, மின்சாரம் தயாரிப்பு, விவசாயம், இரும்பு / ஸ்டீல் மற்றும் ஹைட்ரஜன் தயாரிப்பு. போக்குவரத்து துறையில் கார்பன் உமிழ்வைக் (carbon emission) கட்டுப்படுத்த வாகனங்களின் மின்சாரமயமாக்குவது ஒரு முக்கியமான தீர்வு. தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ‘எத்தனால்’ போன்ற எரிபொருள் களைப் பயன்படுத்துவதும் இன்னொரு தீர்வு. தெருக்களில் ஓடும் வாகனங்களில் மட்டும் இல்லாமல் விமானங்களிலும் இந்தவிதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுழற்சிமுறை பொருளாதாரம்...
எதிர்காலத் தலைமுறைக்கு பாதகம் விளைவிக்காத வகையில் இன்றைக்கு எப்படி முன்னேற்றம் காண்பது என்பது குறித்தும் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. நீர், மின்சாரம், பொருள்களை பொறுப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி விவாதிக்கும்போது, ‘சுழற்சிமுறை பொருளாதாரம் (Circular Economy)’ பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அது என்ன ‘சுழற்சிமுறை பொருளாதாரம்’?
பொதுவாக, ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுவிடு வோம். அதனால் சுற்றுப்புறச் சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் உண்டாகும் என்பது பற்றிக் கவலைப்பட மாட்டோம். ஆனால், சுழற்சிமுறை பொருளா தாரத்தில் ஒரு பொருளைப் பயன்படுத்தியபிறகு, அதை புதுப்பித்து, மீண்டும் எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
உதாரணமாக, ஒரு வாகனத் தின் பாகங்கள் வலிமையாக இருக்க காலம் காலமாக அவை கனமாக வடிவமைக்கப்பட்டன. ஆனால், இன்று கணினிகளின் உதவியுடன் சரியான மூலப் பொருள், தயாரிக்கும் வழிமுறை மூலம் ஒரு பாகத்தின் நீளம், அகலம், உயரம், தடிமன் முதலியவற்றை வடிவமைத்துவிடலாம். இதை லைட்வெயிட்டிங்க் (lightweighting) என்று அழைக்கிறார் கள். ஜெனரல் மோட்டார்ஸ் இதன் மூலம் எட்டு பாகங்களை ஒன்றாகச் செய்து அதன் எடை 40% குறைவாகவும் அதே சமயத்தில் 20% அதிக வலிமை யுடனும் மாற்றியது. இப்படிச் செய்வதால், பெட்ரோல்/டீசல் மூலம் ஓடும் வாகனங்களுக்கு அதிக மைலேஜும் மின்சார வாகனங்களுக்கு அதிக ஓடும் தூரமும் கிடைக்கும்.
டெஸ்லாவின் இலக்கு...
ஒரு வாகனத்தைத் தயாரிக்க நீர், மின்சாரம், நேரடியான மூலப்பொருள்கள் என அதிக இயற்கை வளங்கள் தேவைப்படும். இவற்றைக் கண்காணித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கால வரையறைக்குள் குறைக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, ஃபோர்டு நிறுவனம் அதன் நீர் பயன்பாட்டை 75% குறைக்கப் போவதாகச் சில வருடங்கள்முன் அறிவித்தது. அதற்கான முயற்சிகளை எடுத்து முன்னேற்றமும் கண்டது. டெஸ்லாவின் கிகா தொழிற்சாலையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வாகனம் தயாரிப்பது அடுத்த திட்டமாகச் செயல்பட்டு வருகிறது.
தொழிற்சாலையில் எவ்வளவு கார்பன் உமிழ்வு நடக்கிறது என்று மட்டும் பார்க்காமல், சப்ளையர்களின் செயல்முறைகளையும் கண்காணிக்க வேண்டும். பொறுப்பான சப்ளையர்களிடமிருந்தே பொருள்களை வாங்க வேண்டும் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பழுது பார்க்கும் உரிமை...
தயாரிக்கப்படும் பொருள்கள் வாடிக்கையாளரைச் சென்றடைய சாலை வழிப் போக்குவரத்தை மட்டும் நம்பியிருக்காமல் நீர் மற்றும் வான் வழிகளையும் (Multi modal logistics) கையாள்வதன்மூலம் புவி வெப்பமயமாதலைக் குறைக்க முடியும்.
பொதுவாக, ஒரு பொருளைப் பழுதுபார்க்கும் பொறுப்பு அதைத் தயாரித்த நிறுவனத்திடமே இருக்கும். அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் மட்டும் சென்று பழுதுபார்க்கும் நிலை இன்று உள்ளது.
ஆனால், ஒரு வாடிக்கையாளர் தானே பழுது பார்க்கும் உரிமையை மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதற்கேற்ற மாதிரி அந்தப் பொருளை எப்படி மாற்றி வடிவமைக்கலாம் என்று இந்த நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்கின்றன. இதனால் அவர்களுக்குப் புதிய பொருள்களின் விற்பனை, உதிரிபாகங்கள், பழுது பார்க்கும் சேவை ஆகியவற்றிலிருந்து வரும் வருமானம் குறைந்தாலும், நாளடைவில் நிலைத்தன்மையை நடை முறைப்படுத்த உதவும்.
ஆக, புவி வெப்பமயமாதலை எப்படியெல்லாம் தவிர்க்க முடியும் என இந்த மாநாட்டில் விவாதிக்கப் பட்டது. இந்த விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தனிநபரும் தன் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம். அப்படி செயல்பட்டால் மட்டுமே புவி வெப்பமாதலைத் தடுக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை!
மாநாட்டில் மோடி தந்த வாக்குறுதி..!
இந்தியாவில் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற க்ரீன் ஹவுஸ் எரிவாயுக்கள் (GHG) வெளிப்பாட்டில் மின்சாரம், ஆற்றல், சக்தி சார்ந்த துறைகளிலிருந்தே கிட்டத்தட்ட 69% வருகிறது. இவற்றில் மின் ஆலைகளில் மின் தயாரிப்பு, தொழிற்சாலைகள், போக்குவரத்தும் அடங்கும். இதைக் குறைக்க பிரதமர் மோடி ஒரு வாக்குறுதியாக 2030-க்குள் 50% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க வழிகளில் (Renewable energy) உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். மிகக் குறுகிய காலத்தில் இந்த இலக்கு எட்டப்படுமா என்பது முக்கியமான கேள்வி!