Published:Updated:

நம்பிக்கையுடன் வரவேற்போம் புத்தாண்டை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

புதிய ஆண்டான 2022-ல் நாம் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், சாமானிய மக்கள் அனைவரின் மனதிலும் இருக்கும் மிக முக்கியமான கேள்வி, ‘‘இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்கும்?’’ என்பதே. காரணம், கடந்த இரு ஆண்டுகளாகவே கொரோனா நோய்த்தொற்று நம்மை மேற்கொண்டு முன்னேறிச் செல்லவிடாமல் தடுத்தது. தனிப்பட்ட முறையில் புதிய வாகனம் வாங்குவது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, பெரிய அளவில் கடன் வாங்கி நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வது என எந்த வேலையையும் நம்மை செய்யவிடாமல் மிரட்டியது கொரோனா.

ஏற்கெனவே இரு பெரும் ஊரடங்கால் துவண்டுபோன நிலையில், இப்போது புதிதாக உருவாகி இருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கிருமி என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துமோ என்கிற பயம் நம் எல்லோர் மனதிலும் உருவாகி இருக்கிறது. ஒமிக்ரான் வைரஸ் கிருமி நம் உடல்நலத்தைப் பெரிய அளவில் பாதிக்காது என மருத்துவத் தரப்பில் சொல்லப்பட்டாலும், திடீரென அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கையும், திடீர் திடீரென நடைமுறைப்படுத்தப் படும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளும் நம் அடிவயிற்றைக் கலக்குகின்றன.

இப்படி உறுதியற்றதொரு காலம் நம்முன்னே உறுதியாக நின்றுகொண்டிருக்கும் நிலையில், நம்மிடம் இருக்க வேண்டியதெல்லாம் இரண்டு குணங்கள்தான். ஒன்று, நம்பிக்கை; இன்னொன்று, தைரியம். கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல நூறு மடங்கு உயர்ந்தபோதிலும், ஒமிக்ரான் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். எனவே, ‘முகக்கவசம் உயிர்க்கவசம்’, ‘சமூக இடைவெளியே உயிர்வாழ வழி’ என்பதை எல்லாம் மறவாமல், கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கும்பட்சத்தில் ஒமிக்ரான் வைரஸ் கிருமியிடமிருந்தும் நாம் நிச்சயம் தப்பித்துவிட முடியும்.

கொரோனா நோய்க் கிருமியின் உக்கிரம் குறைந்துகொண்டே வருவதால், இந்தப் புதிய ஆண்டின் நடுவிலோ இறுதியிலோ, இந்த நோய்த் தாக்கத்திலிருந்து முற்றிலும் வெளியில் வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. அதுவரை இந்த நோயின் பிடியில் சிக்காமல் இருக்கத் தேவையான அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை என்பதை அனைவருமே உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

அதே சமயம், இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி முழுமையான ஊரடங்குதான் என்கிற முடிவை மத்திய, மாநில அரசாங்கங்களும் எடுக்காமல், சூழ்நிலைக்குத் தக்கவாறு மட்டுமே நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது நிச்சயம்! கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் பார்க்காத கஷ்டம் இனி பார்த்துவிடப்போவதில்லை என்கிற தைரியத்துடன், நம்பிக்கையுடன் இந்தப் புதிய ஆண்டை வரவேற்போம்!

- ஆசிரியர்