Published:Updated:

தமிழக அரசைப் பாராட்டுவோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

‘வேண்டாமே ஊரடங்கு நடவடிக்கை’ எனக் கடந்த சில வாரங்களாகச் சிறிய அளவில் பேசப்பட்ட விஷயம், இன்று பேசு பொருளாகியுள்ளது.

‘வேண்டாம் ஊரடங்கு... ஒமிக்ரானை சமாளிக்க மைக்ரோ கான்செப்ட் உத்திகள்!’ என்ற தலைப்பில் டிசம்பர் 26-ம் தேதி வெளியான, 2.1.2022 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெரும் கஷ்டத்திலிருக்கும் சிறு, பெரும் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களின் மனக்குமுறல்களை முழுமையாக அந்தக் கட்டுரையில் இடம்பெறச் செய்ததோடு... அடுத்தடுத்த வாரங்களில் கொரோனா பரவலுக்கு வாய்ப்பிருப்பதால், ஊரடங்கைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வர்த்தகம் உட்பட மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல், கொரோனா சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அதில் வலியுறுத்தியிருந்தோம். என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் முன்வைத்த ஒருசில உபாயங்களையும் அந்தக் கட்டுரையிலேயே கோடிட்டிருந்தோம். கட்டுரையின் முக்கியமான அம்சங்களை, தமிழகத்தின் உயரதிகாரிகள் சிலருக்கு அனுப்பியும் வைத்தோம்.

இந்த நிலையில், நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், ‘பொருளாதாரம் பாதிப்பு அடையக் கூடாது என்பதற்காக முழு ஊரடங்கு அவசியம் இல்லை எனத் தமிழக அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது’ என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கூறியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இது, தமிழகத்தில் உள்ள பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, பெரும் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

தமிழக அரசு, சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறது. வர்த்தக ரீதியிலும் மிக முக்கியமான கொண்டாட்டமாக இருப்பது பொங்கல். இந்தத் திருநாள் முடிந்த பிறகு, முழுஅளவில் ஊரடங்கு வரும் என்றொரு செய்தி பரவி, கடந்த சில நாள்களாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. சொந்த ஊர்களுக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் இடம்பெயரத் தொடங்கினார்கள். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பணியாற்றும் பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைத்தார்கள். இந்த நிலையில், ‘ஊரடங்குக்கு அவசியம் இல்லை’ என்கிற அறிவிப்பு, அவர்களின் அச்சத்தைப் போக்கியிருக்கும் என்று நம்பலாம்.

அரசு அளித்திருக்கும் இந்த அறிவிப்பை உற்சாகமாகவும் கவனத்துடனும் எதிர்கொள்ளும் அதே வேளையில், நெருக்கடியான காலத்தில் புதுமையான வழிமுறைகள் மூலம் இன்னும் சிறப்பாக எப்படி சமாளிக்க முடியும் என்பதை அரசும், தொழில் நிறுவனங்களும், மக்களும் தொடர்ந்து கண்டறிய வேண்டும். அந்தக் கண்டுபிடிப்பில்தான் நம்முடைய அடுத்தகட்ட முன்னேற்றம் இருக்கிறது. நம்பிக்கையோடு நடைபோடுவோம்!

- ஆசிரியர்