Published:Updated:

நடுத்தர வர்க்கத்து மக்களின் சரியும் பொருளாதாரம்... மீட்டெடுக்க என்ன வழி..?

சரியும் பொருளாதாரம்...
பிரீமியம் ஸ்டோரி
சரியும் பொருளாதாரம்...

M I D D L E C L A S S

நடுத்தர வர்க்கத்து மக்களின் சரியும் பொருளாதாரம்... மீட்டெடுக்க என்ன வழி..?

M I D D L E C L A S S

Published:Updated:
சரியும் பொருளாதாரம்...
பிரீமியம் ஸ்டோரி
சரியும் பொருளாதாரம்...

'தி கிரேட் இண்டியன் மிடில் கிளாஸ்’ என்று போற்றப்படும் நடுத்தர வர்க்கத்து மக்களாகிய நம்மில் பலர் கொரோனாவின் கோரத் தாண்டவத்துக்குப் பின் மெள்ள மெள்ள அடித்தட்டுக்குச் சரியும் துரதிர்ஷ்டசாலிகள் ஆகியிருக்கிறோம். இந்திய மக்கள் தொகையில் 55 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் நாம்தான் இந்தியாவின் முதுகெலும்பு. அடுத்தவர் தயவில் வாழ விரும்பாத நாம்தான், நேர்மையாக வரி கட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறோம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

தி கிரேட் இண்டியன் மிடில் கிளாஸ்...

ஆசைகளும் தேவைகளும், அவற்றை நிறைவேற்றும் திறமைகளும் நிறைந்த நம்மை நம்பியே அமேசான், ஃபேஸ்புக், வால்மார்ட், நிசான் போன்ற உலக நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வந்தன. உலக கார் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது நம் தயவில்தான். லாக்டெளனுக்கு முன் நம் உழைப்பில் தகவல் துறை, விமானப் போக்குவரத்து, ஆன்லைன் வர்த்தகம் போன்ற துறைகள் அதிவேக வளர்ச்சி பெற்றன. அதைக் கண்டபின்தான் டாடாவும் அம்பானியும் அதானியும் தங்கள் நிறுவனங்களை இன்னும் பெரிதாக்க ஊக்கம் பெற்றனர். பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக்கி, ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கிய கொரோனா, நம்மில் 3.5 கோடி மக்களை அடித்தட்டுக்குத் தள்ளியிருக்கிறது.

சரியும் பொருளாதாரம்...
சரியும் பொருளாதாரம்...

பணக்காரர்கள் இன்னும் உயர்ந்தது எப்படி?

2020-21-ல் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் எப்போதும் இல்லாத அளவு 37 பில்லியன் டாலரை இந்தியப் பங்குச் சந்தையில் கொட்டினர். பங்குகளின் விலை உயர்வு முதலாளி களுக்குப் பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. அதில்வரும் டிவிடெண்டிலும் பெரும் பகுதி அவர்களையே சேர்ந்தது.

கொரோனா காலத்தில் விற்பனை 10.4% அளவு சரிந்தாலும், நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படவில்லை. காரணம், சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, கேன்டீன் மற்றும் போக்குவரத்துச் செலவு குறைப்பு, வாடகைக் குறைப்பு, எலெக்ட்ரிசிட்டி மற்றும் குடிநீர் கட்டணம் குறைவு போன்ற அனைத்தும், கம்பெனிகளின் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரித்துள்ளது. பெரிய கம்பெனிகளின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்கள் தாங்களும் செலவைக் குறைக்க முற்பட்டதில் மீண்டும் பாதிக்கப் பட்டவர்கள் நடுத்தர மக்களே.

ஏழைகள் இன்னும் ஏழையானது எப்படி?

லாக்டெளன் காரணமாக பிழைப்பை இழந்து, பிள்ளைக் குட்டிகளுடன் கால் நடையாகவே ஊர் திரும்பியவர்கள், சொந்த ஊரில் ஏற்கெனவே பற்றாக் குறையுடன் போராடும் உறவினர்களுக்கு பாரமாகிப் போயினர். பள்ளிகள் மூடப்பட்டு ஸ்மார்ட்போனில் வகுப்புகள் நடக்கும் காலத்தில் இவர்கள் குழந்தைகள் கற்பது எப்படி? இன்னும் சரியான மின்சாரமோ, வேகமான இன்டர் நெட்டோ இல்லாத ஊர்களில் கற்க முயலும் குழந்தைகளின் கல்வித் தரம் எப்படி இருக்கும்? இப்படியாக, இன்றைய அவதி மட்டுமன்றி, குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி இன்னும் வெகு காலத்துக்கு இவர்களை ஏழையாகவே வைத்திருக்கும். ஆனால், இன்று அனைவருக்கும் பேசுபொருள் ஆகியிருப்பது நடுத்தர வர்க்கத்தினரே. ஏனெனில், பணக்காரர்களுக்கு உதவி தேவையில்லை. ஏழை களுக்கு அரசின் மானியங்கள் உதவுகின்றன. மிகுந்த முயற்சிக்குப் பின் நடுத்தட்டுக்கு முன்னேறிய பலரும் சறுக்கி இன்று அடித் தட்டுக்குச் செல்ல நேர்ந்த சோகம் தான் நடுத்தர வர்க்கத்தை பேசு பொருளாக மாற்றியுள்ளது.

சுருங்கிப்போன நடுத்தர வர்க்கம்...

ஒரு நாளுக்கு ரூ.750 முதல் ரூ.2,500 வரை சம்பாதிக்கக் கூடியவர்களை நடுத்தர வர்க்கம் என்கிறோம். கொரோனா கால கட்டத்தில் இவர்களில் சுமார் 3.5 கோடி பேர் அடித்தட்டு மக்களாக மாறியுள்ளனர்; சுமார் 1.66 கோடி பேர் வேலையை இழந்தனர். வேலையை இழக்காதவர்கள்கூட சம்பளக் குறைப்புக்கு ஆளாயினர். வொர்க் ஃப்ரம் ஹோம் வந்தபின் ஓலா, ஊபர் டிரைவர்கள், சிறிய காபி ஷாப், பேக்கரி, ஜிம், பியூட்டி பார்லர் ஓனர்கள் என்று பல நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் சரிந்துள்ளது.

மாதாந்தரச் செலவுகளைச் சமாளிக்க தன் பிரியமான சைக்கிளை விற்கப்போகிறார் தந்தை என்று அறியாமல் தூங்கும் ஏழு வயது நவீன்; ஃபேஷன் டிசைனிங் வேலை போனபின் இன்டர்வியூ தவிர, வேறு எதற் காகவும் வெளியே போகத் தோன்றாமல் மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கும் 28 வயது திவ்யா; சேமித்த பணம் அனைத் தையும் போட்டு பிப்ரவரி 2020-ல் தொடங்கிய கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போய் தந்தையின் சொற்ப பென்ஷனில் வாழும் 40 வயது வினோத்; வட்டி வருமானம் குறைந்ததால் எந்த மருத்துவச் செலவைக் குறைப்பது என்று புரியாமல் திண்டாடும் 62 வயது ரங்கநாதன் இவர்கள்தாம் இன்றைய இந்திய நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகள்.

வங்கிகளையும், போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகளையும், இன்ஷூரன்ஸ், பி.எஃப், பென்ஷன் போன்றவற்றையும் நம்பி 84.24% சேமிப்பை அவற்றில் வைத்திருக்கும் மிடில் கிளாஸ் மக்களில் 3% அளவே பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் இறங்கியிருப்பதால், பங்குச் சந்தையின் அபரிமித லாபம் அவர்களை எட்டவில்லை. ஆனால், வட்டி வருமானத்தை நம்பி வாழ்க்கை யை ஓட்டும் வயதானவர்களுக்கும், ரிஸ்க் இல்லாத வருமானம் என்று நம்பி எஃப்.டி, பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் வட்டி விகிதங்களின் அதிரடிக் குறைப்பும் பணவீக்கமும் பேரிடியாக வந்துள்ளது. வருமானம் குறைந்தாலும், கட்டவேண்டிய கடன் தொகை குறையாததால், இரண்டாம் அலையாக வந்திருக்கும் கொரோனாவை விட, வாழ்க்கை இவர்களை அதிகம் பயமுறுத்துகிறது.

என்ன செய்யலாம்?

இதுபோன்ற கஷ்டமான நேரங்களில் கைகொடுக்க அரசாங்கத்தால் மட்டுமே முடியும். வரிப் பொதியைச் சுமக்கும் நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே கொரோனாவின் பொருளாதார பாதிப்பை சரிகட்ட இயலும். ஆறு மாத காலம் வருமான வரி விடுமுறை (Tax Holiday), பிசினஸை எளிதாக்கும் நடவடிக்கைகள் (Ease of doing Business), திறன் அதிகரிப்பு பட்டறை கள் (Skill upgradation), உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் (Infra spending) இவைகளே நடுத்தர மக்களை சரிவிலிருந்து காக்கும். அரசு என்ன செய்யப்போகிறது..?