Published:Updated:

கோவிட் பாதிப்பு... பி.எஃப்-லிருந்து பணம் எடுக்க அனுமதி! எடுப்பது சரியா, எப்படி எடுக்கலாம்?

P F M O N E Y

பிரீமியம் ஸ்டோரி

கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட, பணியாளர்கள் தங்கள் பி.எஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல மத்திய அரசாங்கம் அறிவித்தது. அப்போது எடுக்கத் தவறியவர்கள் இப்போது எடுக்கலாம்.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், மூன்று மாத அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது பிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75%, இதில் எது குறைவோ, அதை முன்பணமாகத் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக, உடல்நலக் குறைவு, புதிய வீடு வாங்க, திருமணம் போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே பி.எஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இதுபோல எந்தக் காரணமும் இல்லாமல் இப்போது பி.எஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும். இதற்கு எந்தவொரு ஆவணத்தையும் தரத் தேவையில்லை. பி.எஃப் கணக்கில் இருந்து எடுத்த தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டிய தில்லை என்பதுடன், விண்ணப்பித்த நாளிலிருந்து மூன்று நாள்களுக்குள் பணம் தரப்படும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பி.எஃப் என்பது நமது ஓய்வுக்காலத் தேவைகளுக்கான தொகை. இதிலிருந்து இடையிடையே பணத்தை வெளியில் எடுப்பது நல்லதா, அப்படி எடுத்தால் அதைத் திருப்பிச் செலுத்த என்ன செய்ய வேண்டும் என்ற சில கேள்விகளுடன் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

சுரேஷ் பார்த்தசாரதி
சுரேஷ் பார்த்தசாரதி

“பி.எஃப் சேமிப்பு ஓய்வுக்காலத் தொகையிலிருந்து எடுக்கப்படும் பணத்தை, கொரோனா காலத்தில் ஏற்பட்ட கஷ்டத்தைச் சமாளிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை இதர தேவைகளுக்காகப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் கிடைக்காத வட்டி விகிதம் அதாவது, 8.5% வட்டி பி.எஃப் கணக்கில் சேமிக்கும் பணத்துக்கு அரசு தருகிறது. எனவே, பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து பயன்படுத்துவதை கடைசி யோசனையாக வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

இதற்குப் பதிலாக, வீட்டில் தங்க நகைகள் இருந்தால், அதைக் கொண்டு வங்கியில் தங்க நகைக் கடன் வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், தற்போதைய நிலையில், மற்ற கடன்களைவிட தங்க நகைக் கடனுக்கான வட்டி குறைவு. கடனுக்கான வட்டி 7% எனில், பி.எஃப் சேமிப்பில் 1.5% வட்டி நமக்கு மிச்சமாகிறது.

கோவிட் பாதிப்பு... பி.எஃப்-லிருந்து 
பணம் எடுக்க அனுமதி! எடுப்பது சரியா, எப்படி எடுக்கலாம்?

பி.எஃப் பணத்தை எடுக்கலாம், தங்க நகைகளை வைத்து வங்கியில் கடன் பெறலாம் என்ற நிலையை முதலில் உருவாக்கிக் கொள்ளாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் வராமல் இருக்க அவசரகால நிதிச் சேமிப்பை அவசியம் உருவாக்கிக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 6 - 12 மாதங்களுக்குத் தேவைப்படும் நிதியை நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

வி.பி.எஃப் மூலம் கட்டுங்கள்...

தவிர்க்க முடியாத காரணத்தால், பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தால், எடுத்த பணத்துக்கு இணையான பணத்தை வி.பி.எஃப் மூலமாக ஒரு சில ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்திவிடுவது நல்லது. பி.எஃப் கணக்கிலிருந்து எடுக்கும் பணத்தைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை என அரசு சொன்னாலும் கூட, பணியாளர்கள் திரும்பச் செலுத்துவதே ஓய்வுக்காலத்துக்கு உதவியாக இருக்கும்.

நிறைய எடுக்கவிடக் கூடாது...

பெருந்தொற்று நேரத்தில், தொழிலாளர்களுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், தொழிலாளர் அமைச்சகம் சொல்லியிருப்பது போல, பணியாளர்களின் மூன்று மாதம் அடிப்படை சம்பளம் + டி.ஏ அல்லது பி.எஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 75% தொகை தரத் தேவையில்லை. இவ்வளவு பணத்தையும் ஒரே முறை தரும்போது தேவை இல்லாதவர்கள்கூட எடுத்து விடுகிறார்கள். எனவே, தேவைப்படும் தொகையை மட்டுமே எடுக்கும்படி, தொழில் நுட்ப ரீதியான மாற்றத்தைக் கொண் டுவர வேண்டும்’’ என்றார் தெளிவாக.

விண்ணப்பிப்பது எப்படி?

பி.எஃப் கணக்கிலிருந்து பணம் பெற https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய பக்கத்திற்குச் செல்லவும். உங்களுடைய யு.ஏ.என் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொண்டு உள்நுழையவும். ஆன்லைன் சர்வீசஸ் (Online Services) என்கிற ஆப்ஷனுக்குக்கீழ் உள்ள க்ளெய்ம் (Claim) என்பதைத் தேர்வு செய்யவும். அதில் காண்பிக்கப் படும் திரையில், உங்களுடைய வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு உறுதி செய்யவும். பிறகு, ‘Proceed for Online Claim’ என்பதை கிளிக் செய்யவும். பின்னர், திரையில் தோன்றும் தெரிவில், ‘PF Advance’ என்பதைத் தேர்வு செய்யவும். ‘Purpose of Withdrawl’ என்பதற்கு ‘Outbreak of Pandemic (Covid 19)’ என்பதைத் தேர்வு செய்யவும்.

உங்களுக்குத் தேவையான பணத்தைக் குறிப்பிட்டு, காசோலை (செக்) அல்லது வங்கி பாஸ்புக்கை ஸ்கேன் செய்து பதிவேற்றவும். இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி வரும். அதைக் குறிப்பிட்டால், உங்கள் கோரிக்கை சமர்பிக்கப் படும். பிறகு, உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துசேரும்.

ஆப் மூலமும் விண்ணப்பிக்கலாம்...

இது தவிர, உமாங் (UMANG) ஆப்ளிகேஷன் மூலமாகவும், பி.எஃப் பணத்தை எடுப்பதற்காக விண்ணப்பிக்கலாம். அதற்கு முதலில், உங்களுடைய ஸ்மார்ட் போனில் உமாங் ஆப்ளிகேஷனை டவுன்லோடு செய்து EPFO விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ‘அட்வான்ஸ் கோரிக்கை (கோவிட் -19)’ (Request for Advance (Covid-19)) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு உங்கள் UAN கணக்கு விவரங்களை உள்ளிட்டு அவற்றை ஓ.டி.பி மூலம் சரிபார்க்கவும்.

உறுப்பினர் ஐ.டியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிடவும். பின்னர் ‘Proceed’ என்பதைத் கிளிக் செய்யவும். அடுத்த கட்டத்தில் உங்கள் முகவரியை உள்ளிடவும். இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் வெற்று காசோலையைப் பதிவேற்றவும். இப்படி உமாங் ஆப் வழிமுறைகளைப் பயன்படுத்தி நீங்கள் பி.எஃப் பணத்தை அட்வான்ஸாகப் பெறலாம்.

ஆக, அரசு அனுமதிக்கிறது என்பதற் காக ஓய்வுக்காலத் தேவைக்கான பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு முன் அந்தப் பணத்தை எடுப்பதைவிட மாற்று வழி ஏதேனும் உண்டா என்பதை நன்கு யோசித்துச் செயல்படுவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு