வேகமெடுக்கும் கொரோனா; அதிகரிக்கும் கிளைம்கள்! - ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சொல்வது என்ன?

கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தைவிட, நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இன்ஷூரன்ஸ் கிளைம் செய்திருக்கிறார்கள்.
கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை சுகாதாரத் துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால் இது, தடுப்பூசி மருந்துகளை விற்பனை செய்வதற்காக செய்யப்படும் வதந்தி என்று நினைத்து, சிலர் இதை அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், வேகமாக கொரோனா பரவி வருவது உண்மை என்பதை புரிந்துகொள்ளும் விதமாக, மருத்துவத் தேவைகள் அதிகரித்திருக்கிறது, கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டின் கோவிட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிளைம்கள் அதிகரித்திருப்பதாக இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் தரப்பு தெரிவிக்கிறது.

``கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தைவிட, நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இன்ஷூரன்ஸ் கிளைம் செய்திருக்கிறார்கள்" என `ஜெனரல் ஹெல்த் இன்ஷூரன்ஸ்' நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சொல்லியிருக்கிறது. அதாவது, 7.8 லட்சமாக இருந்த கோவிட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிளைம்கள், கடந்த 31-ம் தேதி நிலவரப்படி, 9.9 லட்சம் கிளைம்களாக அதிகரித்திருக்கின்றன. ரூபாய் மதிப்பீட்டு அளவில் 11,850 கோடி ரூபாயாக இருந்த கிளைம் தொகை, 14,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போல, ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தலைவர் சஞ்சய் தத்தா, ``கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தை போலவே, நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்திலும் கொரோனாவின் பரவல் வேகமெடுத்திருக்கிறது. இதன் காரணமாக, கிளைம் விகிதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தின் கிளைம் விகிதம் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஒரு நாளைக்கு 100 கிளைம்களாக இருந்த எண்ணிக்கை, தற்போது 150 கிளைம்களாக அதிகரித்திருப்பதாக பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.