Published:Updated:

கச்சா எண்ணெய் விலையேற்றம் நீடிக்குமா? ஒரு விரிவான அலசல்

C R U D E O I L

பிரீமியம் ஸ்டோரி

மிக அதிக அளவுக்கு 2020-ம் ஆண்டில் இறக்கத்தைக் கண்ட ஒரு கமாடிட்டி கச்சா எண்ணெய்தான். முக்கியமாக, கொரோனா தொற்று நோயால் உலகமே முடங்கிப் போனதால், இதன் விலை கணிசமாகக் குறைந்தது. அதன்பிறகு படிப்படியாக அதிகரித்தது. 2020-ம் ஆண்டின் இறுதியில் 45 டாலராக உயர்ந்தது.

ஷியாம் சுந்தர் 
கமாடிட்டி 
நிபுணர்
ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தொடர்பான செய்திகள் வெளிவந்ததை அடுத்து மேல்நோக்கி உயரத் தொடங்கியது கச்சா எண்ணெய். அப்படிப்பட்ட செய்திகள், கச்சா எண்ணெயின் விலைச் சரிவு ஏற்படாத வகையில் சாதகமான செய்திகளாகப் பார்க்கப் பட்டன. இது தவிர, சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேலும் 1 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங் களில் குறைக்க இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது விலையில் நிலைத்த தன்மையைக் கொண்டுவந்தன. தடுப்பூசியில் ஏற்பட்ட முன்னேற்றம் மட்டு மல்லாமல், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உள்ளடக்கிய செலவினங்கள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு, அமெரிக்க ஃபெடரல் எடுத்த நிலைப்பாடு ஆகிய அனைத்தும் கமாடிட்டிப் பொருள்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாயிற்று. அதிக அளவுக்கு பணப்புழக்கம் இருக்கும் என்பதால், இதன் தாக்கம் அந்த நாட்டின் கரன்சியையும் பாதித்து வருகின்றன. அதாவது, அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைக்கச் செய்கின்றன.

பொதுவாகவே, டாலரின் மதிப்பு குறைந்தால், சர்வதேச அளவில் கமாடிட்டிப் பொருள்களின் விலை அதிகரிக்கும். தற்போதும் அதே போல, கச்சா எண்ணெய் கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, ஒரு பேரல் 70 அமெரிக்க டாலர்களைத் (பிரென்ட் க்ரூட்) தொட்டு வர்த்த கத்தை மேற்கொண்டது. இதே போல், நைமைக்ஸ் க்ரூட் ஒரு பேரல் 66 அமெரிக்க டாலர்களைக் கடந்து வர்த்தகமானது.

பிரிட்டன் தனது வழக்கமான, கோவிட்-19 தாக்கத்துக்கு முந்தைய நிலைக்குப் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது மற்றும் அமெரிக்காவில் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்தும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன.

கச்சா எண்ணெய் விலையேற்றம் 
நீடிக்குமா? ஒரு விரிவான அலசல்

கோவிட்19–ன் தாக்கம்

கடந்த ஒரு மாதமாக, கோவிட்-19–ன் தாக்கம் பங்குச் சந்தைகள் அவ்வப்போது இறக்கத்தைச் சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு எழுவதைப் பார்க்க முடிகிறது. 2021-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், கெமிக்கல் துறை, பார்மா துறை, வாகனத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கமாடிட்டிப் பொருள்களை உற்பத்தி செய்யும் உலோகத் துறைகளின் பங்களிப்பு பங்குச் சந்தையில் அதிகமாகக் காணப்படுகிறது. உலக அளவில், இந்தியாவைத் தவிர, கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்குத் தணிந்து, பொருளாதாரம் சாதாரண நிலைக்குத் திரும்ப ஆயுத்தமாகி வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை அடுத்து, கச்சா எண்ணெய்த் தேவை அதிகரிக்க வாய்ப்புண்டு. சந்தைகள் அதை முன்கூட்டியே உணர்ந்து அதற்கான விலையைச் சந்தையில் பிரதிபலிக்கச் செய்கின்றன.

ஆனால், கோவிட் - 19 இன்றுடன் முடிவடைந்துவிடுமா எனில், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். வளர்ந்த நாடுகள் ஒருபக்கம் சகஜ நிலைக்குத் திரும்பினாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கோவிட் 19–ன் இரண்டாம் கட்ட அலை காரணமாக, 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒட்டுமொத்த ஊரடங்கு இருப்பதால், நம் நாட்டின் கச்சா எண்ணெய் பயன்பாடு, அடுத்த சில மாதங்களுக்கு குறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

கச்சா எண்ணெய் - உலகத் தேவை...

நடப்பு 2021-ம் ஆண்டில், உலக அளவில் கச்சா எண்ணெய்த் தேவை யானது நாளொன்றுக்கு குறிப்பிட்ட காலத்தில் (மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில்) அதிகபட்சமாக 8 மில்லியன் பேரல் களாகவும், அதே சமயம் ஆண்டு முழுமைக்கும், சராசரியாக 5.5 மில்லியன் பேரல்களாக இருக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. மேலும், 2022-ம் ஆண்டில், இதே கச்சா எண்ணெய் தேவையானது சராசரியாக 4.4 மில்லியன் பேரல்களாக அதாவது, 2021-ம் ஆண்டை ஒப்பிடும் போது சுமார் 20% குறைந்து காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் தேவைகள் அதிகரித்தால் மட்டுமே மேற்சொன்ன தேவை அளவு உயர்வடைய வாய்ப்பிருப் பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தியானது, 2014-ம் ஆண்டில் அதிகபட்ச உற்பத்தியாக நாளொன்றுக்கு 13 மில்லியன் பேரல்களாக இருந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் உற்பத்தி குறைந்து, 11 மில்லியன் பேரல் களாகக் குறைந்து காணப்படுகிறது.

சென்ற ஆண்டில் கோவிட் -19 காரணமாக விலை கடுமையாக சரிந்ததன் விளைவாக ஷேல் எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை பாதிப்படைந்தது. முதலீடுகள் பெருமளவு குறைக்கப் பட்டன. இதனால், ஷேல் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வலுவான, திறமை யான நிர்வாகத்தைக் கையாளக் கூடிய நிறுவனங்கள், நலிவடைந்த நிறுவனங்களை வாங்கி அதனுடன் இணைத்துக் கொள்வது போன்றவற்றின் காரணமாக, சந்தையில் போட்டி போட இயலாத சிறிய நிறுவனங் கள் அனைத்தும் விலகிவிட்டன. இப்போது மீண்டும் விலை அதிகரித்து வருவதால், நல்ல திறன் படைத்த நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்யலாம் எனவும் அதனால் எண்ணெய்க் கிணறுகளின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்ப தாகக் கணிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் எண்ணெய் மற்றும் 
எரிவாயு தேவை! (மில்லியன் டன்)
இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை! (மில்லியன் டன்)

இந்தியாவின் தேவை...

2021-ம் ஆண்டின் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவை 2019-ம் ஆண்டின் தேவை யின் அளவை ஒட்டி 265 மில்லி யன் டன்களாக இருக்கும் என்று வருடத்தின் தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தன. (பார்க்க வரைபடம்)

இந்தியாவின் தேவை, 2021-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 4,85,000 பேரல்கள் தேவை இருக்கும் என்று பிப்ரவரி மாதத்தில் கணிக்கப்பட்ட நிலையில், தற்போதைய பல்வேறு மாநிலங்களின் முழு முடக்கத் தின் காரணமாக, முந்தைய கணிப்பிலிருந்து 28% குறைந்து, 3,50,000 பேரல்களாகத் தேவை குறைய வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில், தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு, பொருளாதாரம் சகஜ நிலைக்குத் திரும்புமாயின், கச்சா எண்ணெய்யின் தேவை நாளொன்றுக்கு 6,50,000 பேரல் களாக அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றன.

கச்சா எண்ணெய் உட்பட பெரும்பாலான கமாடிட்டி பொருள்கள் விலை உயர்ந்து காணப்படுவது, பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் சந்தை யில் நிலவி வருகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இறக்கம் அடையும்.

அதே சமயம், அரசாங்கம், எண்ணெய்ப் பொருள்களின் விலையை, சர்வதேச விலைக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றி அமைப்பதால், இந்தியாவின் இறக்குமதி செலவினங்கள் ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அதிக அளவில் கச்சா எண்ணெய்யை நுகரும் நாடுகளான இந்தியாவைப் போன்ற நாடுகளில், தேவை குறையும் பட்சத்தில், அதன் தாக்கம் சர்வதேச விலைகளிலும் எதிரொலிக்கின்றன.

கச்சா எண்ணெய் விலையேற்றம் நீடிக்குமா?

மொத்த கமாடிட்டிச் சந்தைகளும் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய்யும், தற்போதைய விலையேற்றத்தில் சேர்ந்துகொண்டது. 2019-ம் ஆண்டின் அதிகபட்ச நிலைக்கு அருகில் வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, தற்போதைய விலையை விட மேலும் அதிகரிப்பதை விரும்ப வில்லை.

இதற்குக் காரணம், விலை அதிகரிப்பு தொடர்ந்து காணப்படுவது ரஷ்யாவுக்கு சாதகமானதாக இருக்கும் என்பதாலும், தற்காலிகமாக விலை ஏற்றத்தால் வரக் கூடிய பயனை அடைய விரும்பினால், உலகளவில், மாற்று எரிபொருள் மற்றும் அதிக செலவில்லாத மாசுக் கட்டுப்பாடு களுக்கு உகந்த எரிபொருள் தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி, அப்படிப் பட்ட முயற்சிகளால் தங்களின் பொருளா தாரத்துக்கு நீண்டகால இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம் என்கிற அச்சம் இருப்பதால், விலை ஏற்றத்தைத் தவிர்த்து வருகிறது.

ஆகையால், சர்வதேச விலை அதிக பட்சமாக 80 டாலர்களைக் குறுகிய காலத்தில் சந்திக்கலாம்.

ஆனால், தொடர்ந்து நீடிக்க வாய்ப் பில்லை. ஷேல் எண்ணெய் உற்பத்தியில் நிலைத்த தன்மை காணப்படுவது, ஒபெக் மற்றும் ஒபெக் அல்லாத நாடுகளின் கூட்டமைப்பில் காணப்படுகிற ஒருமித்த கருத்து அவ்வப்போது இல்லாமல் போவது, அமெரிக்கா – ஈரான் அணுமின் தடை ஒப்பந்தம் விலக்கப்பட்டால், தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முனையலாம் என்ற எதிர்பார்ப்புகள் அனைத்தும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்குத் தடைக்கல்லாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு