Published:Updated:

கச்சா எண்ணெய் விலையேற்றம்... இந்தியா சமாளிக்குமா?

கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலையேற்றம்... இந்தியா சமாளிக்குமா?

கச்சா எண்ணெய்

Published:Updated:
கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் 2021-ம் ஆண்டு முடிவில் 78 டாலர்களாகக் காணப்பட்ட நிலையில், நடப்பு 2022-ம் ஆண்டின் முதல் ஐந்து மாதம் முடிவடைந்த நிலையில், சர்வதேச சந்தையில் சுமார் 44% அதிகரித்துள்ளது. கோவிட்-19-ன் தாக்கம் குறைந்த நிலையில், உலகப் பொருளாதாரம், 2020 மார்ச் மாதத்தின் முந்தைய நிலைக்குத் திரும்பிவிட்டதால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதா எனில், நிச்சயமாக இல்லை.

அப்படியெனில், என்ன காரணத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது? கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளதா அல்லது தேவை அதிகரித்துள்ளதா? டபிள்யூ.டி.ஐ குரூட் 118 டாலர்களாகவும், பிரென்ட் குரூட் 120 டாலர்களாகவும் வர்த்தகமாக என்ன காரணம்?

ஷியாம் சுந்தர் 
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

காரணம் என்ன?

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி 100 நாள்கள் கடந்த நிலையில், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளின் உற்பத்தி மீது அழுத்தம் ஏற்பட்டது. அரபு நாடுகள் தங்களின் உற்பத்தியை உடனடியாக அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டாலும், நடைமுறையில் இது சாத்தியமில்லாதது என்பதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

ரஷ்யாவின் உற்பத்தி இழப்பை, ஒபெக் (OPEC) நாடுகள் கைப்பற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. தற்போதைய நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் 13 ஒபெக் நாடுகள் மற்றும் ஒபெக்கில் உறுப்பினர் அல்லாத சில நாடுகளுடன், ரஷ்யாவின் தலைமையிலான 10 நாடுகளின் (Non OPEC) எரிசக்தி அமைச்சர்களின் கூட்டம் கடந்த வியாழன் அன்று கூடியது. வருகிற ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 6,50,000 பேரல்களாக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ரஷ்யாவைத் தவிர்த்து, உற்பத்தி தொடர்பான முடிவை எடுக்கலாம் என்றுதான் ஒபெக் முதலில் நினைத்தது. ஆனால், ரஷ்யாவைக் கலந்தாலோசிக்காமல் உற்பத்தி தொடர்பான முடிவை எடுத்தால், அதை ஐக்கிய அரபு நாடுகளும் சவுதி அரேபியாவும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திவிடும் என மற்ற நாடுகள் கருதியதால், கடைசி நேரத்தில் ரஷ்யாவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்தது.

இது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் அளவைக் குறைக்க முடிவெடுத் துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக 90% அளவுக்கு இறக்குமதியைத் தவிர்க்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பணவீக்க மானது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப் படுகிறது.

இன்னொருபுறம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிபொருளை வாங்கு வதில்லை என்று முடிவெடுக்கும்போது, ரஷ்யா தனது ஏற்றுமதியை மற்ற நாடுகளிடம் வர்த்தகம் செய்ய முனைகிறது. இதைப் பயன்படுத்தி இந்தியா, மேலைநாடுகளின் தடைகளைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது கவனிக்கத் தக்கது.

கச்சா  எண்ணெய் விலையேற்றம்...
இந்தியா சமாளிக்குமா?

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி...

இந்தியா, கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு, ரஷ்யா விலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அதிகரித் துள்ளது. இரு நாடுகளுக்கும் இருக்கிற நல்லுறவைப் பயன் படுத்தியும், இரு நாடுகளுக்குமே இதனால் பொருளாதாரப் பலன் இருப்பதாலும் அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத் துள்ளது.

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவானது, 2022 மார்ச் மாதத்தில் 30 லட்சம் பேரல் களாகவும், ஏப்ரல் மாதத்தில் 72 லட்சம் பேரல்களாகவும், மே மாதத்தில் 1.4 கோடி பேரல் களாகவும் அதிகரித்துள்ளன. 2021-ம் ஆண்டை ஒப்பிடும்போது ரஷ்யாவிலிருந்தான கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், பிரென்ட் குரூட் விலையில் பேரல் ஒன்றுக்கு 30 டாலர்கள் என்கிற அளவுக்கு விலை குறைத்து இந்தியாவானது ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில், ரஷ்யாவிடம் இருந்து 2% - 3% மட்டுமே காணப் படுகிறது. மத்திய கிழக்கு நாடு களிலிருந்து 52 சதவிகிதமும், ஆப்பிரிக்காவிலிருந்து 15 சத விகிதமும், அமெரிக்காவில் இருந்து 14 சதவிகிதமும் இறக்குமதி செய்கிறது.

கச்சா  எண்ணெய் விலையேற்றம்...
இந்தியா சமாளிக்குமா?

எதை நோக்கி செல்கிறது?

உலக அளவில் கச்சா எண்ணெ தேவையின் அளவு குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவிவருகிறது. தவிர, வட்டி உயர்வு, பணவீக்கம் போன்ற வற்றின் காரணமாக பொருளா தார சுணக்கம் (Recession) வரலாம் என்பது போன்ற விவாதங் களும் தொடர்கின்றன. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வது தடுக்க இயலாத விஷய மாகவே உள்ளன.

கோவிட் 19–க்குப் பிறகு, அமெரிக்க ஃபெடரல் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள், பணவீக்கத்தை உருவாக்கியுள்ளன. இதைக் கட்டுப்படுத்த உடனடியாக வட்டி உயர்வு என்கிற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட் டிருக்கிறது. ஆனால், தொடர்ச்சி யான வட்டி உயர்வு, பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது. இது வரும் காலங்களில் பொருளாதாரச் சிக்கலைத் தோற்றுவிக்க வாய்ப்பு இருக்கிறது.

உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் ஏற்றுமதி கோவிட்19-க்கு முன்பு முக்கியமான பங்கு வகுத்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டு களாக ஏற்றுமதியில் தடை, கடல் போக்குவரத்தில் எண்ணற்ற கால தாமதங்கள் காரணமாக, அமெரிக்க ஃபெட் அமைப்பு பல ட்ரில்லியன் டாலர்களைப் புழக்கத்தில் விட்டிருக்கிறது. இதனால் பணப் புழக்கம் கடுமையாக அதிகரித்து, நுகர்வோரின் செலவினங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களின் கையிருப் புக்குத் தகுந்தவாறு விலையை அதிகரிக்கச் செய்கின்றன.

ஆக மொத்தத்தில், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எதுவாக இருந்தாலும், மூலப் பொருள்கள், ரசாயனம் சார்ந்த பொருள்கள், இயந்திரங்கள், மருந்துப் பொருள்கள் இவை எல்லாவற்றுக்குமே தேவை அதிகரிக்கிறது. உற்பத்தி யாகும் பொருள்களை சந்தைக்கு வேக மாகக் கொண்டு சென்றுசேர்ப்பதன் மூலமே பொருள்களின் விலை உயர்வைத் தடுக்க முடியுமே தவிர, மற்ற நடவடிக்கைகளால் ஓரளவுக்கே கட்டுப்படுத்த இயலும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

எனவே, 2020 கோவிட் காலத்தில் கச்சா எண்ணெய் தேவை எப்படி குறைந்து காணப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக, தற்போது குறுகிய காலத்தில் தேவை அதிகரித்து, விலையேற்றத்தைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உலகப் பொருளாதாரம் காணப்படுகிறது.

இனிவரும் காலத்திலும் இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேலாக வர்த்தகத்தைத் தொடரவே வாய்ப்பிருக்கிறது.

அதே சமயம், அவ்வப்போது வருகிற சர்வதேச பொருளாதாரப் புள்ளிவிவரங்கள், ரஷ்யாவின் நடவடிக் கைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, கோவிட்டுக்குப் பிந்திய சீனாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய செய்திகள் கச்சா எண்ணெய் விலையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உலக அளவில் நடக்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனிப்பது அவசியத்திலும் அவசியம்!

இந்திய நிறுவனங்களுக்குச் சாதகம்!

கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், சுத்திகரிப்புத் துறை சார்ந்த நமது பொதுத்துறை நிறுவனங்களான எம்.ஆர்.பி.எல், சென்னை பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹெச்.பி.சி.எல் ஆகியவையும், தனியார் நிறுவன மான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் பயனடைந்து வருகின்றன. மேற்படி நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, அதைச் சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருள்களாக ஏற்றுமதி செய்து வருகின்றன. இவற்றின் ஜி.ஆர்.எம் (G.R.M – Gross Refinery Margin) அதிகரிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தற்போதைய நிலையில், ஜி.ஆர்.எம் 20 டாலருக்குமேல் இருக்க வாய்ப்புள்ளது. சாதாரணமாக 5 - 6 டாலர் வரை மட்டுமே இருந்துவந்த நிலையில், பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை உலக அளவில் உயர்ந்திருப்பதால், இந்திய நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism