Published:Updated:

கஸ்டமர்கேர் மோசடி... உஷார் மக்களே உஷார்..!

கஸ்டமர்கேர்
பிரீமியம் ஸ்டோரி
கஸ்டமர்கேர்

மோசடி

கஸ்டமர்கேர் மோசடி... உஷார் மக்களே உஷார்..!

மோசடி

Published:Updated:
கஸ்டமர்கேர்
பிரீமியம் ஸ்டோரி
கஸ்டமர்கேர்

இன்றைய நவீன வாழ்க்கையில் நாம் நிறைய பொருள்களைப் பயன்படுத்து கிறோம். இந்தப் பொருள்களில் ஏதாவது பிரச்னை வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்கிறோம். ஆனால், அந்த வாடிக்கையாளர் சேவையிலேயே பிரச்னை என்றால் எங்கு போவது? ஆம், வாடிக்கையாளர் சேவை என்ற பெயரிலேயே போலி ஆசாமிகள் பலவிதமான மோசடிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நவி மும்பையைச் சேர்ந்த 73 வயது முதியவர் தன்னுடைய டெபிட் கார்டை ஆக்டிவேட் செய்ய ஒரு வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை கூகுளில் தேடி எடுத்துப் பேசியிருக்கிறார். ஆனால், அது மோசடிப் பேர்வழி விரித்த வலை என்பது அவருக்குத் தெரியாது. விளைவு, ஓய்வூதியம் பெறும் அந்த முதியவர், தன்னிடமிருந்த ரூ.4 லட்சத்தை இழந்துள்ளார். இத்தனைக்கும் அவர் அமெரிக்காவில் வேலை பார்த்தவர். எனவே, படித்தவர், விவரமானவர் என்கிற பாகுபாடு எல்லாம் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் இந்த மோசடிக்கார்கள் ஏமாற்றிவிடுவார்கள். எனவே, நாம்தான் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

கஸ்டமர்கேர் மோசடி... உஷார் மக்களே உஷார்..!

மும்பை, டெல்லியில் நடந்த மோசடியை விடுங்கள். சென்னையில் நடந்த ஒரு மோசடியை நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஒருவர். அவருடைய வீட்டில் ஒரு ஏ.சி பயன் பாட்டில் இருந்து வந்திருக்கிறது. சமீபத்தில் வேறு வீட்டுக்கு மாற வேண்டியிருந்ததால், ஏ.சி-யை புது வீட்டில் பொருத்த கஸ்டமர் கேர் சேவையை அழைத்திருக்கிறார். கஸ்டமர் கேர் சேவையிலிருந்து வந்து புதிய வீட்டில் ஏ.சி-யைப் பொருத்திவிட்டுச் சென்றிருக் கின்றனர். ஆனால், ஏ.சி-யை கழற்றி மாட்டும் வேலையை சரியாகச் செய்யாததால், மீண்டும் கஸ்டமர்கேருக்கு போன் செய்து, பிரச்னை யைச் சொல்ல, மீண்டும் அவர்கள் வந்து இது போய்விட்டது, அது போய்விட்டது, கேஸ் நிரப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். கோடைக்காலம் தொடங்குவதால், அவரும் சரி என்று சொல்லி, அவர்கள் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர்கள் வேலையை முடித்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.

ஆனாலும், பிரச்னை தீர்ந்தபாடில்லை. எனவே, மீண்டும் கஸ்டமர்கேருக்கு போன் செய்தார். இந்த முறை கஸ்டமர்கேரின் நம்பரை அவர் கூகுளில் தேடியபோது வேறொரு எண் வந்திருக்கிறது. அந்த எண்ணில் அழைத்து பேசிய பிறகு, அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், இதற்கு முன் வந்த அந்த இருவருமே நிறுவனத்தின் பிரதிநிதிகள் இல்லை. அவர் பேசிய வாடிக்கையாளர் சேவை எண்ணும் நிறுவனத்தின் அதிகாரபூர்வ எண் இல்லை என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.

‘‘இது குறித்து அவர்களிடம் வாதிட்டும் எந்தப் பயனும் இல்லை. ‘நீங்கள் தவறான எண்ணை அழைத்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்’ என்று சொல்லி, போனை வைத்து விட்டார்கள். மகளுடன் தனியாக வசித்து வரும் அந்தப் பெண்மணி இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல், கணிசமான பணத்தையும் இழந்திருக்கிறார். நல்லவேளை, அவர்கள் வந்தபோது அவர்களை நன்கு கண்காணித்ததால், வேறு எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை’’ என்று ஆசுவாசப்பட்டார் அந்தப் பெண்மணி.

இந்தச் சம்பவம் ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோன்ற பல மோசடி சம்பவங்கள் தினம்தினம் நடந்து கொண்டிருக்கின்றன.

வாடிக்கையாளர் சேவை எண் தொடர்பாக நடக்கும் பிரச்னைகளுக்கெல்லாம் ஆரம்பம், இப்போதெல்லாம் எதையும் குறித்து வைக்கும் பழக்கமோ, பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கமோ பெரும்பாலானோருக்கு இல்லாமல் போனதுதான். இதனால் ஒவ்வொரு முறையும் நமக்குத் தேவையான விவரங்களை இணையதளத்தில்தான் தேடுகிறோம். அப்படி அவசரத்தில் தேடும்போது சரியான தகவலைத்தான் நாம் எடுத்திருக்கிறோமா என்று பார்ப்பதில்லை.

கூகுள் தேடுபொறியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கஸ்டமர்கேர் எண்ணைத் தேடினால் வருகிற எண்ணை அப்படியே தொடர்புகொண்டு பேசிவிடுகிறோம். அது சரியான எண்ணா என்பதைப் பற்றி யோசிப்பதில்லை. இது மோசடிக்காரர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விடுகிறது. அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய எண்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து தப்பிக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை விஷயத்தில் என்னென்ன முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பானசோனிக் பிசினஸ் பிரிவு தலைவர் கௌரவ் ஷாவிடம் பேசினோம். அவர் ஒவ்வொரு பாயின்டாக எடுத்துச் சொன்னார்.

கௌரவ் ஷா
கௌரவ் ஷா

1. நாம் நிறைய பொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுக்கு கணிசமான தொகையைச் செலவு செய்திருக் கிறோம். அது, மேலும் நமக்கு செலவு வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய பொருளாதார சூழலில் ஒவ்வொரு தொகையுமே முக்கியம்தான். எனவே, எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, அந்தப் பொருளை உற்பத்தி செய்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று அதிலிருந்து கஸ்டமர் கேர் எண்ணை எடுத்து தொடர்புகொள்ளுங்கள். நேரடியாகக் கூகுளில் வரும் எண்ணைத் தொடர்புகொள்ளா தீர்கள்.

வீட்டு உபயோகப் பொருள் களைப் பொறுத்தவரை பல நிறுவனங்கள், தனிநபர்கள் சேவைகளை வழங்கி வருகிறார்கள். அவர்களுடைய எண்கள் பலவும் இணையத்தில் இருக்கும். அந்த எண்ணைத் தொடர்புகொண்டால் உங்களுக்குத் திருப்திகரமான சேவை கிடைக்குமா என்பது தெரியாது. தவறான எண்ணைத் தொடர்புகொண்டு ஏமாற்றத்துக் குள்ளானால் அதற்கு நிறுவனம் எதுவும் செய்ய முடியாது. இணையத்தில் உள்ள தகவல் களைக் கட்டுப்படுத்துவது சவாலான காரியம். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

2. பொருள்களைக் கடையில் வாங்கும்போதே அதன் வாரன்டி கார்டு, கஸ்டமர்கேர் தொடர்பு எண் உள்ளிட்டவற்றை தருவார் கள். அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். முக்கியமாக, பொருள்கள் வாங்கிய ரசீதைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணில் தொடர்புகொண்டு சர்வீஸுக்கான கட்டணம் எவ்வளவு, வீட்டுக்கு வந்து பரிசோதிப்பதற்கான கட்டணம் எவ்வளவு, உதிரி பாகங்கள் ஏதேனும் மாற்ற வேண்டி வந்தால் அதற்கான கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை முதல்முறை கஸ்டமர்கேரில் பேசும்போதே கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் நிறுவனத்தார் சேவைப் பிரிவை வேறு வெளி நிறுவனத்துக்குக்கூட ஒப்பந்தம் மூலம் வழங்கியிருக்கலாம். எனவே, வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசும்போது நிறுவனத்தின் ஆள்கள் வருவார்களா அல்லது வெளிநிறுவன ஆட்கள் வருவார்களா என்ற கேள்விகளைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்யும்போது நிறுவனங்கள் தரப்பிலிருந்து உங்களுடைய புகார் பதிவு செய்யப் பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். சர்வீஸுக்கு வரும் நபர்களின் விவரங்களும் அனுப்பப்படும். அவற்றை உறுதி செய்துகொள்ளுங்கள்.

3. அதேபோல, வாடிக்கையாளர் சேவை மையத் திலிருந்து பொருள்களை சர்வீஸ் செய்ய வீட்டுக்கு வரும் நபர்களின் அடையாள அட்டையைக் காட்டச் சொல்லி, அதை நன்றாகப் பாருங்கள். அவர்கள் தரும் ரசீதில் நிறுவனத்தின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பாருங்கள். சர்வீஸ் முடிந்த பிறகு, சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்த்துவிட்டு பின்னர் பணத்தைக் கொடுங்கள்.

4. சர்வீஸ் செய்ய ஆட்கள் வரும்போது வீட்டில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தனியாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்வீஸ் செய்ய வரும் நபர்களைக் கண்காணிப்பது, அவர்கள் செய்யும் வேலை குறித்து அவ்வப்போது கேட்பது போன்றவற்றைச் செய்யலாம். பக்கத்துவீட்டாரிடம் இதுபோல சர்வீஸ் செய்ய ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தலாம். இது அவர்களுக்கு பயத்தை உண்டாக்கும். தவறுகளில் ஈடுபடத் தயங்குவார்கள்.

5. பணம், நகை போன்றவற்றை வெளியில் கண்ணில் படும்படி வைக்காதீர்கள். வீட்டில் வெளிநபர்கள் இருக்கும்போது எப்போதும் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். சர்வீஸ் முடியும்வரை அங்கேயே இருந்து அவர்களைக் கண்காணியுங்கள். அவர்களை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கச் சென்றுவிடாதீர்கள். அதேபோல், முக்கியமான பீரோ சாவி, பர்ஸ், ஆவணங்கள் போன்றவற்றை அவர்களுக்குத் தெரியும்படி வைக்கா தீர்கள். அதேபோல், முக்கியமான விஷயங்களை வெளி ஆட்கள்முன் விவாதிப்பதையும் தவிருங்கள்.

அதேபோல் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து அழைக்கிறோம் என யார் அழைத்தாலும் அவர்களிடம் தகவல்களைப் பகிரும்போது உஷாராக இருங்கள். முக்கியமாக, வங்கி விவரங் களை, டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை வழங்காதீர்கள். நீங்கள் வேறு வேலையில் பிசியாக இருந்தால் பின்னர் அழைக்குமாறு கூறுங்கள். அவசரத்தில், பதற்றத்தில் முக்கிய விவரங்களைப் பகிர்ந்துவிட்டால் பின்னர், அதுவே மோசடிக்கு ஆளாவதற்குக் காரணமாகலாம்.

எவ்வளவுதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் மோசடி செய்பவர்கள் எளிதில் யாரையும் ஏமாற்றிவிடுவார்கள். எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் தேவை. உஷார் மக்களே உஷார்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism