Published:Updated:

சைரஸ் மிஸ்த்ரியின் திடீர் மரணம்... எஸ்.பி குழும நிறுவனங்களை அடுத்து நடத்தப்போவது யார்?

சைரஸ் மிஸ்த்ரி
பிரீமியம் ஸ்டோரி
சைரஸ் மிஸ்த்ரி

நிகழ்வு

சைரஸ் மிஸ்த்ரியின் திடீர் மரணம்... எஸ்.பி குழும நிறுவனங்களை அடுத்து நடத்தப்போவது யார்?

நிகழ்வு

Published:Updated:
சைரஸ் மிஸ்த்ரி
பிரீமியம் ஸ்டோரி
சைரஸ் மிஸ்த்ரி

செப்டம்பர் 3-ம் தேதி இப்படி முடிந்திருக்க வேண்டாம். டாடா சன்ஸ் குழுமத்தில் 18.4% பங்குகளை வைத்திருக்கும் சபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் காலமானார். உயர்ரக காரில் பயணம் செய்தாலும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்த்ரி சீட்பெல்ட் அணியாமல் இருந்ததால், சம்பவ இடத்திலே பலியானார்.

மும்பையில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இவரின் இறுதிச் சடங்கில் அனில் அம்பானி, முகேஷ் அம்பானியின் மகன், தீபக் பரேக், சரத்பவார் மகள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் அறிமுக விழாவில், முன்னாள் தலைவர் என்னும் முறையில் சைரஸ் மிஸ்த்ரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அஞ்சலி குறிப்பு வெளியிட்டார். ‘‘சிறிய வயதில் விபத்தின் மூலம் அவர் இறந்திருப்பது துன்பகரமானது’’ என சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். ஆனால், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்த்ரியின் மரணம் குறித்து பொதுவெளியில் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சைரஸ் மிஸ்த்ரி
சைரஸ் மிஸ்த்ரி

டாடா குழுமத்தில் மிஸ்த்ரி...

2012-ம் ஆண்டு ரத்தன் டாடா ஓய்வு பெறுவார் என்கிற செய்தி அதற்கு பல மாதங் களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது. அந்தக் சூழலில், டாடாவுக்கான அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைக்கப் பட்டது. டாடா சன்ஸின் 18.4% பங்குகளை வைத்திருந்த சைரஸ் மிஸ்த்ரியும் அந்தக் குழுவில் இருந்தார். ஆனால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து விலகினார் சைரஸ் மிஸ்த்ரி. இதைத் தொடர்ந்து டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக 2012-ம் ஆண்டு டிசம்பரில் சைரஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குழுமத்தை மேம்படுத்தும் பல நடவடிக்கை களை எடுத்தார். இதில் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு அதிகரித்த தால், 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சைரஸ் நீக்கப்பட்டார். டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்புகூட நிரந்தரமானதல்ல என்பதுதான் அப்போதைய பரபரப்பான டாபிக்.

இது பற்றி பொதுவெளியில் பேச விரும்பாத சைரஸ் மிஸ்த்ரி, நீதிமன்றத்தை நாடினார். தீர்ப்பு, மேல்முறையீடு, நீதிமன்றம், என்.சிஎல்.டி என பல இடங்களில் போராடி னார். ஆனால், இறுதியான தீர்ப்பு டாடா குழுமத்துக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.

பங்குகளை விற்க முடியாத சிக்கல்...

டாடா சன்ஸ் குழுமத்தின் 18.4% பங்குகள் வைத்திருந்தாலும் சபூர்ஜி பலோன்ஜி குழும மும் மிகப் பெரிய குழுமம்தான். இந்தக் குழுமமும் 157 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பட்டது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், கன்ஸ்யூமர் குட்ஸ் என பல தொழில்களில் செயல்பட்டு வருகிறது. கோவிட் உள்ளிட்ட சில காரணங்களால் எஸ்.பி குழுமத்தின் கடன் அதிகரித்துவந்தது.

இந்த நிலையில், டாடா சன்ஸ் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறலாமா என அவர் நினைத்தார்; ஆனால், அதுவும் நடக்கவில்லை. டாடா சன்ஸில் உள்ள 18.4% பங்குகளின் மதிப்பு ரூ.80,000 கோடி மட்டுமே என டாடா குழுமம் தெரிவித்தது. ஆனால், இந்தப் பங்குகளின் மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி என எஸ்.பி குழுமம் தெரிவித்தது. பங்குகளின் மதிப்பில் உள்ள வேறுபாட்டால் இந்தப் பங்குகளையும் அவரால் விற்க முடியவில்லை.

கடன் ஓரளவுக்குக் குறைந்தும்....

இந்த நிலையில், தனக்கிருக்கும் கடனைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியது எஸ்.பி குழுமம். யுரேகா போர்ப்ஸ் எனும் நிறுவனத்தை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்துக்கு விற்றது. அதே போல, ஸ்டெர்லிங் வில்சன் என்னும் நிறுவனத்தில் இருந்தும் பங்குகளைக் குறைத்துக்கொண்டது. மேலும், டாடா சன்ஸ் பங்குகளை அடமானமாக வைத்து நிதி திரட்டியது. இதன் மூலம் மொத்தமாக ரூ.12,450 கோடி கடனை எஸ்.பி குழுமம் திரும்பச் செலுத்தியது. இவ்வளவு கடனை அடைத்த பிறகும் இன்னும் ரூ.23,500 கோடி அளவிலான கடன் எஸ்.பி குழுமத்துக்கு இருக்கிறது.

அடுத்து யார்?

கடந்த ஜூன் மாதம் சைரஸ் மிஸ்த்ரியின் அப்பா 93 வயதில் காலமானார். இந்த நிலையில், இப்போது சைரஸ் மிஸ்த்ரியும் காலமாகி இருக்கிறார். குறுகிய காலத்தில் இரண்டு இழப்பை சைரஸ் மிஸ்த்ரியின் குடும்பமும், இந்தக் குழுமத்தின் நிர்வாகத் தினரும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது கொடுமையான விஷயம்.

30 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்தக் குழுமம் அடுத்து யார் தலைமையில் நடக்கும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. 54 வயதான சைரஸ் மிஸ்த்ரிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இவ்வளவு பெரிய நிறுவனத்தை ஏற்று நடத்தும் அளவுக்குத் தயாராகிவிட்டார்களா என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதே சமயம், சைரஸ் மிஸ்த்ரியின் அண்ணன் சபூர் மிஸ்த்ரி எடுத்து நடத்துவாரா என்கிற கேள்விக்கும் இப்போது இன்னும் தெளிவு கிடைக்க வில்லை.

கோடி கோடியாய் இருந்தும்..?

அண்மைக் காலத்தில் பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்டவர்கள் இருவர் திடீரென இறந்துபோயிருக்கிறார்கள். அதில் முதலாமவர், பங்குச் சந்தையின் பிரபல முதலீட் டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா. இவர் தன் உடல்நலம் குறித்து பல ஆண்டுக் காலமாகவே கவனம் செலுத்தாமல் இருந்ததுதான் இவருடைய மரணத் துக்குக் காரணம் என்கிறார் கள். ரூ.30,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு இருந்தும் 62 வயதில் இறந்ததுபோனது பெரும் சோகம்தான். அதே போல, ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தா லும், பின் இருக்கையில் உட்கார்ந்திருந்தபோது சீட் பெல்ட் அணிந்துகொள்ளத் தவறியதால், சைரஸ் மிஸ்த்ரி யின் உயிர் பறிபோயிருக்கிறது.

பணம் சம்பாதிக்க நம்மில் பலரும் மிகுந்த கஷ்டப்படு கிறோம். அதே சமயம், நம் உயிரின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இந்த இருவரின் மரணம் நமக்கு உணர்த்தும் பாடமாக இருக் கிறது என்று சொன்னால் அது மிகையில்லை!