Published:Updated:

தீபாவளி போனஸ்... ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?

நிதித் திட்டமிடல்

பிரீமியம் ஸ்டோரி

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் பலருக்கு தீபாவளி போனஸ் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த ஆண்டு அப்படி அல்ல. தொழில், பொருளாதாரம், நிறுவனங்களின் நிதி நிலவரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மேம்பட்டிருப்பதால், பலருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்திருக்கும். ஓராண்டு உழைப்புக்குக் கிடைத்திருக்கும் இந்த ஊக்கத் தொகையைப் பயனுள்ளதாகச் செலவிடுவது மிகவும் முக்கியமாகும்.

என்.விஜயகுமார்
நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், https://www.vbuildwealth.com/

தனிநபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தேவையைப் பொறுத்து புதிய ஆடைகள், தங்க நகைகள், டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், கார், செல்போன் வாங்குவது, சுற்றுலா செல்வது எனப் பலவற்றை மேற்கொண்டு வருகிறோம். பெரும்பாலானோர் (வறட்டு) கௌரவத்துக்காகப் புதிய மாடல் ஸ்மார்ட் போன் வாங்குகிறார்கள். ஆனால், இன்றைய நிச்சயமற்ற சூழ்நிலையில், தீபாவளி போனஸைக் கொண்டு எப்படி ஆக்கபூர்வமாக வேறு சில நிதி சார்ந்த விஷயங்களைச் செய்வது அவசியமாகிறது.

அவசரகால நிதியை உருவாக்குதல்...

கொரோனா பாதிப்பு முதல் அலையின்போதுதான் பலருக்கும் அவசர கால நிதியின் (Emergency Fund) அவசியம் தெரியவந்திருக்கும். சம்பளம்/ வருமானம் தடைப்பட்டதால், அவசரக் கால நிதி இல்லாதவர்கள் குடும்பச் செலவு, கடன் தவணை, காப்பீட்டு பிரீமியம் தவணை, ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி தவணை ஆகியவற்றில் சிக்கலைச் சந்திக்கிறார்கள்.

ஏற்கெனவே பலருக்கும் சேர்த்து வைத்த அவசர கால நிதி கரைந்திருக்கும். அவர்களைப் போன்றவர்கள் தீபாவளி போனஸ் தொகையில் மிக அவசியமான செலவுக்கு பணம் எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை அவசர கால நிதியுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

இதுவரைக்கும் அவசர கால நிதியைச் சேர்த்து வைக்காதவர்கள், இந்த போனஸ் தொகையிலிருந்து ஆரம்பிக்கலாம். அவசர கால நிதி என்பது குடும்ப மாதச் செலவைப்போல, 3 முதல் 6 மடங்கு வைத்துக் கொள்வது நல்லது.

இந்தத் தொகை குடும்பத்தில் திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு, வேலை இழப்பு, வேறு அவசரச் செலவுகளைச் சமாளிக்க உதவ சேர்த்து வைப்பதாக உள்ளது. இந்தப் பணத்தை அவசரச் செலவுக்கு உடனே எடுத்து செலவிடும் படியாக ஏ.டி.எம் வசதி கொண்ட வங்கி சேமிப்புக் கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் வைத்திருக்கலாம்.

தீபாவளி போனஸ்... ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?

ஆயுள் காப்பீடு பிரீமியம் கட்ட...

இதுவரையும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக் காதவர்கள் அல்லது ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 15 மடங்குக்குக் குறைவாக ஆயுள் பாலிசி எடுத்திருப்பவர்கள், கவரேஜ் தொகையை அதிகரிக்க இந்த போனஸ் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதிக தொகை போனஸ் பெறுபவர்கள் ஒற்றைத் தவணை பிரீமியம் கட்டி, டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ளலாம். டேர்ம் பிளான் என்கிறபோது குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும்.

உதாரணமாக, 30 வயதான ஒருவர் அவரின் 60 வயது வரை ரூ.1 கோடி கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்தால், ஒருமுறை சுமார் ரூ.2 லட்சம் பிரீமியம் கட்டினால் போதும். இதுவே ரூ.25 லட்சம் கவரேஜ் என்றால் சுமார் 50,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். இப்படி ஒற்றை பிரீமியம் கட்டி டேர்ம் பிளான் எடுக்கும்போது பிரீமியத்தில் தள்ளுபடி இருக்கிறது. மேலும், பாலிசி லேப்ஸ் ஆகும் சிக்கலும் இல்லை.

தீபாவளி போனஸ்... ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?
தீபாவளி போனஸ்... ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?

மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் கட்ட...

கொரோனா பாதிப்பு, மருத்துவக் காப்பீடு கவரேஜ் ஓரிரு லட்சம் ரூபாய் போதாது. பல லட்சம் ரூபாய்க்குத் தேவை என்பதை உணர்த்தியிருக்கிறது. இதுவரைக்கும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மருத்துவப் பாலிசி எடுக்காதவர்கள், குறைவான கவரேஜுக்கு பாலிசி எடுத்திருப்பவர்கள் இந்த போனஸ் பணத்தைக் கொண்டு எடுத்துக்கொள்ளலாம்.

அலுவலக ஹெல்த் பாலிசி மட்டும் வைத்திருப்பவர்கள் தனியே ஒரு பாலிசி எடுத்துக் கொள்வது பற்றி யோசிக்கலாம். மேலும், ஏற்கெனவே அடிப்படை பாலிசி வைத்திருப்பவர்கள் டாப் பாலிசி எடுக்க இந்த போனஸ் பணத்தைப் பயன் படுத்ததலாம்.

குடும்பத்துக்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இளவயது கொண்ட குடும்பத்தினருக்கு இந்த வகை பாலிசி ஏற்றதாக இருக்கும். பிரீமியமும் குறைவாக இருக்கும்.

அதிக வட்டியிலான கடன்களை அடைக்க...

அதிக வட்டி வரும் தனிநபர் கடன்கள் (ஆண்டு வட்டி 14% - 22%), கிரெடிட் கார்டு கடன்களை (ஆண்டு வட்டி 35% - 40%) முடிக்க அல்லது குறைக்க போனஸ் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வது லாபகரமாக இருக்கும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி இப்போது ஒற்றை இலக்கத்தில் சுமார் 7 சதவிகிதமாக இருப்பதால், அந்தக் கடனை அடைப்பது லாபகரமாக இருக்காது. திரும்பக் கட்டும் அசல் (நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம்) மற்றும் வட்டிக்கு (ரூ.2 லட்சம்) வரிச் சலுகை வேறு இருக்கிறது.

வேறு கடன்கள் எதுவும் இல்லை. கடன்காரராக இருக்க விரும்பவில்லை என நினைத்தால் மட்டுமே வீட்டுக் கடனை அடைக்க போனஸ் தொகையைப் பயன்படுத்தலாம். வீட்டுக் கடனில் பகுதித் தொகையை அடைக்கும் போது மாதத் தவணையைக் குறைக்காமல் கடன் காலத்தை குறைப்பதன்மூலம் வட்டியாகச் செல்லும் தொகையில் கூடுதலாகச் சேமிக்க முடியும். ஒரு ரூபாயைச் சேமிப்பது என்பது ஒரு ரூபாயை சம்பாதிப்பதற்கு சமம் என்பார்கள். இது வட்டியை மிச்சப்படுத்து வதற்கும் பொருந்தும்.

வீட்டுக்கடன் முன்பணத்தைத் திரட்ட...

சொந்த வீட்டைக் கடனில் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்குத் தேவையான முன்பணத் துக்கு (down payment) போனஸ் பணத்தை ஒதுக்கி வைக்கலாம். அதிக முன்பணம் தேவைப் பட்டால், அடுத்து வரும் ஆண்டுகளின் போனஸ் தொகை யையும் முதலீடு செய்து வரலாம்.

வீடு வாங்குவற்கான முன்பணம் எவ்வளவு நாளைக்குள் தேவை என்பதைப் பொறுத்து, குறுகிய காலம் என்றால் ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளிலும், நடுத்தரக் காலம் எனில், ஹைபிரிட் ஃபண்டுகளிலும், நீண்ட காலம் எனில், டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வரலாம். இதேபோல், கார் வாங்குவதற்குப் பகுதி பணமாக போனஸ் தொகையைப் பயன்படுத்தலாம். கார் போன்ற மதிப்பு குறையும் பொருள்களை வாங்கும்போது, அவற்றுக்கான முழுப் பணத்தையும் கடனாக வாங்காமல், போனஸ் பணத்தைப் பயன்படுத்தி, குறைவாகக் கடன் வாங்கலாம்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடு...

நிதி இலக்குகள் மற்றும் செல்வம் சேர்க்க திட்டமிடுகிறவர்கள் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் போனஸ் பணத்தை முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை உச்சத்தில் இருப்பதால், போனஸ் பணத்தை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து ‘சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்’ (STP) மூலம் மாதம் குறிப்பிட்டத் தொகையை சுமார் 12 முதல் 24 மாதங்களுக்கு ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றலாம்.

நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது எனில், லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து 8, 10 தவணைகளாகப் பணத்தை எடுத்து பங்குகளில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் உங்களின் நிதி இலக்குகளை விரைந்து நிறைவேற்ற முடியும்.

தீபாவளி போனஸ்... ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?

ஓய்வுக்காலத் திட்டமிடல்...

பலரும் பிள்ளைகளின் உயர் கல்வி, கல்யாணம் ஆகிய வற்றுக்கே முதலீடு செய்கிறார்கள். விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுத்தால், பி.எஃப் சேமிப்பு மட்டுமே ஓய்வுக்காலத்துக்குப் போதாது. மேலும், ஓய்வுக்கால செலவுக்குக் கடன் கிடைக்காது என்பதால், அதற்கு இளம் வயதிலேயே முதலீடு செய்து வருவது அவசியமாகும்.

உங்களின் ஓய்வுக்காலத்துக்கு நீண்ட காலம் இருக்கிறது எனில், பங்கு சார்ந்த திட்டங் களில் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) முதலீடு செய்து வருவது நல்லது. குறுகிய காலம்தான் இருக்கிறது எனில், கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் (எஃப்.டி, கடன் ஃபண்டுகள்) முதலீடு செய்து வருவது நல்லது.

ஓய்வுக்கால முதலீடாக என்.பி.எஸ் திட்டத்தில் போனஸ் பணத்தை முதலீடு செய்யலாம். கூடவே வருமான வரியையும் சேமிக்கலாம். என்.பி.எஸ் மூலம் 80C மற்றும் 80CCD (1b) மூலம் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரி சேமிக்க முடியும்.

உங்கள் தீபாவளி போனஸ் தொகையைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தத் திட்டமிடுங்கள்!

போனஸ் பிறந்த கதை..!

நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மாதச் சம்பளமுறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதாவது, நான்கு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் எனக் கணக்கிட்டு மாதம் ஒரு முறை சம்பளம் கொடுக்கப்பட்டது. மாதத்துக்கு ஒரு சம்பளம் எனில், ஆண்டுக்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால், ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் என்கிறபோது 13 மாதங்கள் சம்பளம் வர வேண்டும். இதைத் தராமல் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக தொழிற்சங்கங்கள், 1930 முதல் 1940 வரை 10 ஆண்டுகள் மகாராஷ்டிராவில் தொடர்ந்து போராடின. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், கூடுதலாகத் தர வேண்டிய பணத்தை, தீபாவளி திருவிழாவின்போது தொழிலாளர்ளுக்குத் தந்தால் உதவியாக இருக்கும் எனத் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக 1940-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக இந்தியாவில் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு