Published:Updated:

அமெரிக்க டாலருக்கான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... நாடாளுமன்ற நிலை குழு விசாரணை!

ரிசர்வ் வங்கி ( RBI )

``அப்பொழுது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததை பற்றி அப்போது குஜராத் முதலமைச்சர் ஆக இருந்த நமது இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்..."

அமெரிக்க டாலருக்கான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... நாடாளுமன்ற நிலை குழு விசாரணை!

``அப்பொழுது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததை பற்றி அப்போது குஜராத் முதலமைச்சர் ஆக இருந்த நமது இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்..."

Published:Updated:
ரிசர்வ் வங்கி ( RBI )

அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த நான்கு மாதங்களாக சரிவினை சந்தித்து வருகிறது. இந்த வருடத் தொடக்கத்தில் 74 ரூபாயாக இருந்த டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சென்ற வார இறுதியில்  83 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற நிலை குழு..!

இந்த வீழ்ச்சி பற்றி நாடாளுமன்ற நிலை குழு விவாதம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு ஆளும் பாஜக அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. என்றாலும் பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததால் இந்த விவாதத்தை எடுத்துக் கொள்ள நாடாளுமன்ற நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பது இன்று, நேற்று நடப்பதல்ல. நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.30 ஆக இருந்தது. அதன் பிறகு 1975 காலகட்டத்தில் 8.40 ரூபாயாகவும், 90 -களில் 17 ரூபாய் ஆகவும் இருந்தது. 2011 ஆம் ஆண்டு வரை இந்திய ரூபாயின் மதிப்பு 50-க்கும் கீழ் தான் இருந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு

2013 ஆம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது ஏற்பட்டுள்ள சரிவை போன்று அதிக அளவில் சரிந்து 64 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அப்பொழுது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததை பற்றி அப்போது குஜராத் முதலமைச்சர் ஆக இருந்த நமது இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

ஆளும் காங்கிரஸ் அரசு தமது நாற்காலியை தக்க வைப்பதையே முதன்மையாக கருதுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது பற்றி காங்கிரஸ் அரசுக்கு கவலை எதுவும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

தற்போது பாஜக ஆளும் காலகட்டத்தில் அதேபோன்று ரூபாய் மதிப்பு சரிவதை எதிர்க்கட்சிகள் முன்பு நமது பிரதமர் பேசியதை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

ரூபாய் மதிப்பு வீழ்வதற்கு முக்கிய காரணம் `ரஷ்யா - உக்ரைன்  நாடுகளுக்கு இடையேயான போர்' தான் என்று நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் அல்ல, பல உலக நாட்டு கரன்சிகளும் அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்து வருவதால் அவர் கூறுவதை மறுக்க இயலாது.

ரிசர்வ் வங்கியின் பங்கு..!

இந்திய ரூபாயின் மதிப்பை தக்க வைப்பதில் மத்திய ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியமானது ஆகும். அது தனது கையிருப்பில் டாலர்களை வாங்கி வைத்திருக்கும். தற்போது ரூபாய் மதிப்பு சரிவதன் காரணமாக ரிசர்வ் வங்கி தமது கையிருப்பில் உள்ள டாலர்களை விற்று பண வீக்கத்தை தம்மால் முடிந்த அளவு குறைக்க பார்க்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 110 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கி வெளி மார்க்கெட்டில் விற்றுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

தற்போது ரிசர்வ் வங்கி கையிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவான 510 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு மட்டுமே அமெரிக்க டாலர்கள் உள்ளது. அதனால் தொடர்ந்து அமெரிக்க டாலர்களை விற்பனை செய்து இந்த சரிவினை தடுக்க முடியாது. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவது சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சனை என்று பலரும் கருதலாம். நாம் ஒன்றும் அமெரிக்க டாலர்களை வாங்கி பண பரிவர்த்தனைகள் செய்யப் போவதில்லை. ஆதலால் அது நமக்கு பெரும் பாதிப்பை கொண்டு வராது என்று கூட நீங்கள் கருதலாம். ஆனால் உண்மையில் ரூபாய் மதிப்பு குறைவது என்ன பாதிப்புகளை கொண்டு வரும் என்று நாம் பார்க்கலாம்.

இறக்குமதி..!

முதலாவதாக நமது நாடு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டாலர் மூலமே பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக நமது நாட்டில் மிக அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு நாம் செலுத்தும் பணம், டாலர் மதிப்பு அதிகரிக்கும் பொழுது கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏறக்குறைய 13% ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மாற்றம் இன்றி இருந்தால் கூட நாம் செலுத்தும் பணத்தின் மதிப்பு 13% அதிகரிக்கும்.

இறக்குமதி
இறக்குமதி
vikatan

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும். அதன் பாதிப்பு சாமானிய மக்களின் தலையில்தான் விடியும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.

நமது நாட்டில் நடைபெறும் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) மதிப்பின் வித்தியாசம் இதன் காரணமாக அதிகரிக்கும். தற்போது இந்த வர்த்தக பற்றாக்குறையின் மதிப்பு சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் மிக அதிக அளவில் 139% என்ற அளவிற்கு உயர்ந்து ரூ. 27.98 பில்லியன் டாலராக உள்ளது. இதன் காரணமாக நமது நாட்டின் வருடாந்திர வளர்ச்சி இலக்கு குறைய தொடங்கும்.

மேலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி நேரடியாக பங்கு சந்தைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. நிறுவன பங்குகள் இதன் காரணமாக  சரியும் பொழுது மேலும் பல வித பாதிப்புகளை அது ஏற்படுத்தும்.

பணவீக்கம்..!

மேலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி நேரடியாக பணவீக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டி இருக்கும். இதன் காரணமாக கடன்களுக்கு நாம் செலுத்தும் வட்டி அதிகரிக்கும். இவ்வாறு சங்கிலி தொடர் போல ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அனைவருக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பணவீக்கம்
பணவீக்கம்

நமது நாட்டின் வளர்ச்சி சிறப்பானதாக உள்ளது என்று ஆளும் பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது உலக அளவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இது ஒரு தற்காலிக பிரச்னை தான் என்றும் அது கூறி வருகிறது. தற்போது நடைபெறும் நாடாளுமன்ற பொதுக்குழு விவாதத்தில் பல முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், பொருளாதார வல்லுனர்களும் கலந்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். இதன் மூலம் ரூபாய் மதிப்பை உயர்த்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுதான் நமது நாட்டை நீண்ட கால நோக்கில் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.