Published:Updated:

150 நாள்களில் இரட்டிப்பு லாபம்... திண்டுக்கல் `பிரைட் வே’-யை நம்பலாமா?

புலனாய்வு
பிரீமியம் ஸ்டோரி
புலனாய்வு

புலனாய்வு

150 நாள்களில் இரட்டிப்பு லாபம்... திண்டுக்கல் `பிரைட் வே’-யை நம்பலாமா?

புலனாய்வு

Published:Updated:
புலனாய்வு
பிரீமியம் ஸ்டோரி
புலனாய்வு

தமிழகத்தில் மோசடி கம்பெனிகளின் ராஜ்ஜியம் ஓஹோவென நடந்துவருகிறது. வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மோசடி குறித்த செய்திகள் இன்னும் ஓயாத நிலையில், இப்போது இன்னொரு ‘பலே’ நிறுவனம் குறித்த செய்தி வெளியாகி அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் பிரைட் வே (Bright Way) நிறுவனத்தின் மீது பெண்கள் முன்னேற்றச் சங்கத்தினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைத் தந்து பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கின்றனர்.

தேக்கு மரம் வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு, பங்குச் சந்தை முதலீடு, கிரிப்டோகரன்சி முதலீடு என ஏதோ ஒன்றைச் சொல்லி அளவுக் கதிகமான வருமானத்தைத் தருவதாக ஆசை காட்டி மக்களிடம் இருந்து பணம் வேலையை பல நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே செய்து வருகின்றன. இந்த நிறுவனத்தின் ஏஜென்டுகள் சொல்வது உண்மை என்று நம்பி, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தைக் கட்டி இழக்கின்றனர் மக்கள். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரைட்வே நிறுவனத்தின் மீதும் இப்போது இப்படி ஒரு புகார் கிளம்பி இருக்கிறது.

150 நாள்களில் இரட்டிப்பு லாபம்... திண்டுக்கல் `பிரைட் வே’-யை நம்பலாமா?

பொதுவாக, ஒவ்வொரு மோசடி நிறுவனமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி மக்களிடம் பணத்தை வசூலிக்கும். அந்த வகையில், திண்டுக்கல் ‘பிரைட் வே’ (BRIGHT WAY) என்ற நிறுவனம், ‘150 நாள்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம்’ என்று சொல்லி, மக்களிடம் பணத்தை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. திண்டுக்கல், நிலக்கோட்டை, கோவை என பல ஊர்களில் உள்ளவர்களும் பல கோடி ரூபாயை இவர்களிடம் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரைட் வே ஆன்லைன் நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாக திண்டுக்கல் மாவட்ட பெண்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் சகாயராணி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கடந்த திங்கள்கிழமை அளித்தார். உடனே, நாம் அவரை சந்தித்துப் பேசினோம்.

‘‘திண்டுக்கல்லில் பிரகாஷ், டேனியல், சக்திவேல் ஆகியோர் பெரிய அளவில் மக்களை மூளைச் சலவை செய்து பிரைட் வே நிறுவனத்தில் பணம் கட்ட வைக்கின்றனர். அவர்கள் முதலில் முதல் கட்டமாக சிறுதொகையைப் போடவைத்து அதற்குரிய பணத்தை அவரவர் வங்கிக் கணக்குக்கு வரவழைத்து ஆசையைத் தூண்டுகின்றனர். பின்னர் மீண்டும் மீண்டும் சூதாட்டத்தில் பணம் கட்டுவதைப்போல, மக்களைப் பணம் கட்ட வைக்கின்றனர்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு, பணம் வருவதற்கான வங்கிக் கணக்கின் ஐ.டி.யை லாக் செய்து மொத்தப் பணத்தையும் சுருட்டிவிடுகிறார்கள். இதே போல, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எம்.டபிள்யூ.சி மற்றும் ஏ.சி.எஸ் என்ற நிறுவனங்கள் பணம் கட்டினால் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு காணாமல் போய்விட்டன.

பிரைட் வே நிறுவனத்தில் பணம் போட்டவர் களுக்கு அந்த நிறுவனம் எந்த ஆவணத்தையும் தருவதில்லை. மொபைல் ஆப் மூலம் ஐடி உருவாக்கி அந்தக் குழுவில் பணம் கட்டியவர்களை இணைக்கின்றனர்.

இதில் மொத்தம் எட்டு வகையான திட்டங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஒரு நபர் குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் ரூ.4.80 லட்சம் வரை பணம் கட்டலாம். ரூ.3,000 கட்டினால் 150 நாள்களுக்கு 45 ரூபாய் தினமும் தருவதாகக் கூறு கிறார்கள். தொகை அதிகமாகக் கட்டினால் தினமும் 7,200 ரூபாய் வரை தருவாகக் கூறுகிறார்கள்.

சகாயராணி (இரண்டாவதாக நிற்பவர்)
சகாயராணி (இரண்டாவதாக நிற்பவர்)

பிரைட் வே நிறுவனத்துக்கு பல ஏஜென்டுகள் திண்டுக் கல்லில் இருக்கின்றனர். ஆனால், இந்த நிறுவனத்தின் அலுவலகம் திண்டுக்கல்லில் இல்லை. தெலங் கானாவிலும், கர்நாடகாவிலும் அலுவலகம் இருப்பதாக ஏஜென்டுகள் சொல்கின்றனர்.

பிரைட் வே நிறுவனத்தினர் பள்ளி, கல்லூரி, ரியல் எஸ்டேட், சாஃப்ட்வேர் டெவலப்பிங், ஏற்றுமதி, இறக்குமதி என பத்துக்கும் மேற்பட்ட தொழில் களை செய்து வருவதாக ஏஜென்டுகள் சொல்கிறார்கள். மக்கள் தரும் பணத்தை இந்தத் தொழில்களில் முதலீடு செய்வ தாகவும், அப்படிச் செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பணம் கட்டியவர்களுக்குத் தினம்தோறும் பிரித்துத் தருவ தாகவும் சொல்கின்றனர்.

இதை நம்பியே திண்டுக் கல்லில் மட்டுமே ஆசிரியர்கள், போலீஸார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் முதல் கட்டட வேலைக்குச் செல்லும் மக்கள் வரை பல லட்சம் ரூபாயை இந்த நிறுவனத்தில் போடுகின்றனர். அவ்வப்போது கூட்டம் போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். கடந்த மாதம்கூட நிலக் கோட்டையில் கூட்டம் நடத்தப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.4.80 லட்சம் போட்டவர்களை கோவா டூர், ரூ.2 லட்சம் போட்ட வர்களை ஊட்டி டூர்க்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நான் இந்த நிறுவனத்தில் ரூ.20,000 பணம் கட்டினேன். சில நாள்களுக்கு மட்டுமே தினமும் வட்டி தந்தார்கள். அதன் பிறகு, பணம் தரவில்லை. என்னை இந்தத் திட்டத்தில் இணைத்த சக்திவேல் என்பவரிடம் இது பற்றிக் கேட்டேன். ‘தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்த நிறுவனம் எவ்வித பிரச்னையும் இன்றி நடக்கிறது. உங்களுடைய ஐடி ‘லாக்’ ஆகியிருக்கிறது. விரைவில் அதைச் சரிசெய்துவிடலாம்’ என்றார். இதே போல, டச் மொபைல் போன்கள் பயன்படுத்தத் தெரியாத மூத்த குடிமக்கள், படிக்காத ஏழைத் தொழிலாளர் களிடம் தாங்களே அவர்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, பணத்தைச் சுருட்டி வருகின்றனர். இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு எவ்வித ஆவணங்களும் தருவதில்லை. ஆன்லைன் ஆப் ஒன்று மட்டுமே ஆவணமாக உள்ளது. நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்னை எனில், என்ன ஆவணத்தை வைத்து புகார் செய்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் போன் தொலைந்து போனால், இந்த நிறுவனத்தில் பணம் கட்டியதற்கான எந்த ஆதாரமும் நம்மிடம் இருக்காது.

முக்கியமான விஷயம், இந்த நிறுவனம் தரும் லாபம்தான். ஒரு நிறுவனம் எத்தனை தொழில் களை செய்தாலும், டிரேடிங், ஷேர் மார்கெட்டிங் என எதில் ஈடுபட்டாலும் சில மாத காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தர முடியுமா? அப்படித் தரமுடிந்தால் கூட அதை எத்தனை ஆயிரம் பேருக்குத் தரமுடியும் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

இந்த நிறுவனம் பற்றி கடந்த மாதம் 4-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யிடமும் புகார் அளித்தேன். இதை அடுத்து சைபர் க்ரைம் போலீஸார் புகார் மனுவை விசாரிப்பார்கள் எனக் கூறினர்கள். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

150 நாள்களில் இரட்டிப்பு லாபம்... திண்டுக்கல் `பிரைட் வே’-யை நம்பலாமா?

இது தொடர்பாக மீண்டும் போலீஸார் தரப்பில் விசாரித்தேன். ‘இந்த வழக்கை விசாரித்தால் எங்களுக்குப் பிரச்னை’ என வெளிப்படையாகவே சொன்னார்கள். எனவேதான், இந்த நிறுவனம் பற்றி உடனடியாக கலெக்டர் விசாரித்து, மக்கள் கட்டிய பணத்தைத் திரும்பக் கட்டச் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்’’ என்றார்.

மக்களே... ஆகக்கூடி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் சகாயராணி. ‘‘யார் எப்படி போனால் என்ன, நான் முதலில் பணம் கட்டியதால், என் வரையில் சரியாகத்தான் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்கள் என்று சுயநலத்தோடு செயல்படக்கூடியவர்களுக்கு நடுவே, மேற்கொண்டு யாரும் ஏமாந்துவிடக்கூடாது’’ என்று காவல்துறையை நாடியிருக்கிறார். இதே போல, மற்றவர்களும் உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்வதுதான் இப்போதைக்கு செய்யவேண்டிய முதல் வேலை.

கண்ணுக்கு முன்பாக இருந்துகொண்டே ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளைச் செய்து, ஏகப்பட்ட கோடிகளைச் சுருட்டிய ‘சதுரங்க வேட்டை’ பார்ட்டி களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த டிஜிட்டல் யுகத்தில் கண்காணாத இடத்தில் இருந்துகொண்டே பல்லாயிரம் கோடிகளை ஸ்வாஹா செய்ய ஆரம்பித்துள்ளனர். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.