Published:Updated:

ரீ டெயில் துறையின் `மிஸ்டர் வொயிட்' - இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் ராதாகிஷன் தமனி யார்?

ராதாகிஷன் தமனி
ராதாகிஷன் தமனி ( twitter )

7-ம் இடத்தில் இருந்த ராதாகிஷன் தமனி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியதுதான் தொழில்துறையினர் மத்தியில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டுவருகிறது.

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும், `இந்தியாவின் டாப்-100 பணக்காரர்கள்’ பட்டியல்மீது பெரும் எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் பட்டியலில் வழக்கம்போல் முதலிடத்தை இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தக்கவைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் யாரும் எதிர்பாராத விதமாக Avenue Supermarts நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமனி முன்னேறியுள்ளார். கடந்த வருடம் இந்தப் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த ராதாகிஷன் தமனி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியதுதான் தொழில்துறையினர் மத்தியில் ஹாட் டாப்பிக்காகப் பேசப்பட்டுவருகிறது.

ராதாகிஷன் தமனி
ராதாகிஷன் தமனி

யார் இந்த ராதாகிஷன் தமனி?

2002-ம் ஆண்டில் மும்பையின் புறநகர் பகுதியில் ஆரம்பித்த தன் சில்லறை வணிகத்தை ஆரம்பித்தார் ராதாகிஷன் தமனி என்னும் இந்த ராஜஸ்தான்காரர். தன் குடும்பத்தினர் அனைவரையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக சேர்த்துள்ள அவர், சில்லறை வர்த்தகத்தில் ஒரு பழைமைவாதி என்று வர்த்தகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். இன்று ரிலையன்ஸ் ரீடெயில், கிஷோர் பியானியின் ஃப்யூச்­சர் குழுமம் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக சில்லறை வணி­கத்தில் முன்­னணி நிறு­வ­ன­மாகத் திகழ்வது ராதாகிஷன் தமனியின் அவென்யூ சூப்­பர்மார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த டிமார்ட் செயின் ஹைப்பர் மார்க்கெட்கள் தான்.

தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 45 நகரங்களில் இந்த நிறுவனத்துக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்தியாவின் அதிக லாபமீட்டும் ஹைப்பர் மார்க்கெட் என்றால் அது DMart தான் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய வளர்ச்சியை வெறும் அதிர்ஷ்டத்தால் அவர் அடைந்துவிடவில்லை என்கின்றனர். பொருள்களைத் திறம்பட வாங்குவதும் விற்பதும் தனது பழைமைவாத அணுகுமுறையின்படியே இன்றும் செய்து வருகிறார்.

டிமார்ட்
டிமார்ட்

உயர் வீதிகளிலோ மால்களிலோ இவரது டிமார்ட் நிறுவனம் இருப்பதைக் காண்பது அரிது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நடுத்தர வர்க்க குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் இவரது கடை இருக்கும். அதுவும் கடை இருக்கும் இடமும் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும். வாடகை கட்டடத்தில் இருப்பதைச் சொந்தக் கட்டடத்திலேயே நிறுவனம் இருப்பதை விரும்புகிறார் தமனி. காரணம்.. நீண்ட காலத்துக்கு இது மிகவும் லாபத்தைத் தரக்கூடிய ஒரு யுக்தி. இதன்காரணமாக மற்ற மார்ட்களைவிட டி-மார்ட்டில் பொருள்களின் விலையில் 6-10% குறைவாகக் கிடைக்கும்.

இதனால் இவரின் நிறுவனத்துக்கென்று தனி கஸ்டமர்கள் உள்ளனர். அவர்களால் இந்நிறுவனம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. கடும் பொருளாதார சூழ்நிலையில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமனியின் செயல்பாடுகளால் டிமார்ட் மட்டும் லாபம் ஈட்டிவந்தது. சாதாரண வர்த்தகராக வாழ்க்கையைத் தொடங்கியதால் என்னவோ பங்குச்சந்தையிலும் ஈ-காமர்ஸ் துறையிலும் நுழைய எண்ணமில்லாமல் இருந்தார் தமனி. ஆனால், காலப்போக்கில் கட்டாயம் ஏற்பட Avenue Supermarts 2017-ல் பங்குச்சந்தையில் கால்பதித்தது. அப்போது பங்குச்சந்தை குறித்து தெளிவாக தெரிந்துகொண்டு அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார் தமனி.

ராதாகிஷன் தமனி
ராதாகிஷன் தமனி

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி பங்குவர்த்தகத்தில் உள்ள Avenue Supermarts நிறுவனத்தின் சார்பில் QIP மற்றும் OFS ஆகியவை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.7,500 கோடி திரட்டப்படும் என்று கூறப்படுகிறது. முதல் முறையாக Avenue Supermarts பங்குவர்த்தகத்தில் நுழைந்தபோது அதன் சொத்து மதிப்பு 39,988 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த அறிவிப்பால் தற்போது மேலும் பல ஆயிரம் கோடிகளை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீ டெயில் துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் டாப் என்றாலும், அந்த நிறுவனத்துக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு தனது யுக்திகளால் திறம்பட தனது நிறுவனத்தை வழிநடத்திவரும் தமனி கோடீஸ்வரர்கள் வரிசையில் தற்போது சிவ் நாடார், ரத்தன் டாடா, கவுதம் அதானி, உதய் கோடக், குமாரமங்கலம் பிர்லா, லக்ஷ்மி மிட்டல், சுனில் மிட்டல் போன்றவர்களைப் பின்னுக்குத்தள்ளி தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

ராதாகிஷன் தமனி
ராதாகிஷன் தமனி

போர்ப்ஸ் பட்டியல்படி 17.5 பில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு அதிபதியாக இருக்கும் தமனி உலக அளவில் உள்ள 69 பில்லினியர்களில் ஒருவர். இவரது குழுமம், குடும்பத்தின் சொத்துமதிப்பு 310 மில்லியன் அமெரிக்கன் டாலர்களாக உள்ளது. எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேன்ட் என `மிஸ்டர் வொயிட்' ஆக வலம்வரும் தமனி மிகவும் அமைதியான, எளிமையான மனிதரும்கூட என்பது கூடுதல் தகவல்.

அடுத்த கட்டுரைக்கு