Published:Updated:

முடங்கிக் கிடக்கும் ரூ.86,845 கோடி... இனி எப்படி தவிர்க்கலாம்?

கோரப்படாத நிதி
பிரீமியம் ஸ்டோரி
News
கோரப்படாத நிதி

கோரப்படாத நிதி

சமீபத்தில் ஃபின்மீடியம் டாட்காம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, நம் போன்ற சாதாரண மக்களின் பணம் சுமார் 86,845 கோடி ரூபாய் பல இடங்களிலும் முடங்கிக் கிடக்கின்றன. அதன் விவரம் இனி...

பி.எஃப் அக்கவுன்ட்டுகளில் ரூ.26,497 கோடியும், வங்கி டெப்பாசிட்டுகளில் ரூ.23,201 கோடியும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.17,880 கோடியும், இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் ரூ.15,167 கோடியும், பங்குகள் மூலம் கிடைத்த டிவிடெண்டுகள் ரூ.4,100 கோடியுமாக மொத்தம் ரூ.86,845 கோடி பணம் முடங்கிக் கிடக்கிறது. இனி ஒவ்வொரு திட்டமாகப் பார்ப்போம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

பிராவிடன்ட் ஃபண்ட் அக்கவுன்டுகள்...

இது நம் ஓய்வுக்காலத்தை வசதியாகக் கழிப்பதற்காக அரசு ஏற்படுத்தி இருக்கும் திட்டம். மாதம்தோறும் சம்பளதாரரிடமிருந்தும், முதலாளியிடமிருந்தும் பெறப்படும் குறிப்பிட்ட தொகை, வட்டியுடன் மொத்தமாகப் பணி ஓய்வின்போது வழங்கப்படுகிறது. ஒருவர் ஓய்வு பெற்றாலோ, வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்தாலோ, இறக்க நேர்ந்தாலோ 36 மாதங்களுக்குள் பி.எஃப் பணம் கோரப்பட வேண்டும் என்பது விதி.

ஓய்வுக்காலத்தை நிம்மதியுடனும், யாரையும் சாராமலும் கழிக்க பேருதவியாக இருக்கும் இதைக் கோரப்படாத பணமாக விட்டு வைக்க யாரும் விரும்புவதில்லை. ஆனாலும், ஏன் இருபத்தாறாயிரம் கோடி ரூபாய் இப்படிக் கேட்பாரற்று கிடக்கிறது?

இன்று அடிக்கடி வேலையை மாற்றுவது என்பது சகஜமான ஒன்று. அப்படி மாற்றுபவர்கள் தங்கள் பி.எஃப் பணத்தை உடனே வெளியே எடுத்துவிடலாம்; அல்லது புதிய கம்பெனிக்கு மாற்றிவிடலாம். அக்கவுன்ட் தொடங்கி ஐந்து வருடங்களுக்குள் பணத்தை வெளியே எடுத்தால் வரி கட்ட வேண்டியிருக்கும் என்பதால், பலர் அங்கேயே பணத்தை விட்டு வைத்துவிடுகிறார்கள்; பின்னர் வாழ்க்கை மும்முரத்தில் அதை மறந்தும்விடுகிறார்கள்.

பி.எஃப் நம்பர் / பி.எஃப் அக்கவுன்ட் நம்பர் போன்றவற்றை மறப்பவர்களும் உண்டு. இதனால் பழைய அக்கவுன்டிலேயே தங்கும் பணம் ஏழு வருடங்களுக்குப் பின் சீனியர் சிட்டிசன் வெல்ஃபேர் ஃபண்டுக்கு அனுப்பப்படுகிறது. அதன்பின் 25 வருடங்கள் வரை நாம் சான்றுகள் சமர்ப்பித்து இதைக் கோர முடியும். 25 வருடங்களுக்குப் பின்னும் கோரப்படாமல் கிடக்கும் பணம் மத்திய அரசின் கணக்குக்கு அனுப்பப் பட்டுவிடுகிறது. இதன்பின் எத்தனை சான்றுகள் இருந்தாலும், நாம் பணத்தைக் கோர முடியாது.

வங்கி டெபாசிட்டுகள்

இரண்டு வருடங்கள் ஆபரேட் செய்யப்படாததால் ‘செயல்படாதவை (Inoperative)’ என்று முத்திரை குத்தப்பட்ட சேவிங்ஸ் அக்கவுன்டுகள், முதிர்வடைந்த ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, பணமாக்கப்படாத டிமாண்ட் டிராஃப்ட், பே ஆர்டர், சென்று சேராத நெஃப்ட் ஆகியவற்றில் உள்ள பணம் பத்து வருடங்களாகக் கோரப்படாமல் இருந்தால், பத்து வருடங்களுக்குப் பின் ரிசர்வ் வங்கியின் டெபாசிட் எஜுகேஷன் அண்ட் அவார்னஸ் ஃபண்டுக்கு மாற்றப் படுகிறது. அதன் பின் அந்தத் தொகை கோரப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வங்கி அந்தப் பணத்தை வாடிக்கையாளருக்குத் தந்துவிட்டு, ரிசர்வ் வங்கியிடமிருந்து ரீஃபண்ட் பெற்றுக்கொள்கிறது.

வேலைமாற்றம், வேறு இடங்களுக்குக் குடிபெயர்தல், மரணம் போன்ற காரணங்களால் வங்கியில் டெபாசிட்டுகள் கோரப்படாமல் தங்கிவிடுகின்றன. இவற்றில் நமக்கு உரிமையான டெபாசிட்டுகள் பற்றிய விவரங்களை வங்கிகளின் வெப்சைட்டில் சென்று தெரிந்துகொண்டு தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பித்து கோரலாம். ரூ.25000-க்குக் குறைவான க்ளெய்ம்களை வங்கியே செட்டில் செய்துவிடும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு கோர்ட்டில் இருந்து பெற்ற சக்சஷன் சர்டிஃபிகேட், இண்டெம்னிட்டி பாண்ட் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்போது அனைத்து வங்கிகளும் நாமினி, ஃபோன் நம்பர், இ-மெயில் ஐ.டி போன்றவற்றைச் சமர்ப்பிக்கும்படி வலியுறுத்துவதால் வங்கிகளில் கோரப்படாத பணத்தின் அளவு குறைந்துவருகிறது.

முடங்கிக் கிடக்கும் ரூ.86,845 கோடி... இனி எப்படி தவிர்க்கலாம்?

செயல்படுத்தப்படாத மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, நம் ஃபோலியோ வில் பேலன்ஸ் ஏதுமில்லை என்றாலும், அக்கவுன்ட் குளோஸ் ஆவதில்லை. வங்கி அக்கவுன்டுகள் போல் அடிக்கடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. முதலீட்டாளர்களின் மறதியும், மரணமுமே இங்கு பணம் கோரப்படாமல் தங்கிவிடுவதற்கான காரணங்களாக உள்ளன.

தங்களிடம் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் ஒரு முதலீட்டாளர் சில காலமாக முதலீடு செய்யாததைக் கவனித்து பஜாஜ் கேப்பிடல் அவர் பற்றி விசாரித்தது. மரணித்த முதலீட்டாளரின் குடும்பத்துக்கு அந்த முதலீடு பற்றிய விவரம் அதன் பின்பே தெரிய வந்துள்ளது. எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களும் தங்கள் வெப்சைட்டில் கோரப்படாத ஃபண்டுகள் பற்றிய தகவலைத் தெரியப் படுத்து கின்றன. முதலீட்டாளரின் பெயர் மற்றும் பான் நம்பரைத் தெரிவித்தால் அந்தப் பெயரில் எதுவும் கோரப்படாத பணம் உள்ளதா என்ற தகவல் கிடைக் கிறது.

இன்ஷூரன்ஸ் பணம்

மெச்சூர் ஆகியும் கோரப் படாத பாலிசி பணம், டெத் க்ளெய்ம், சர்வைவல் பெனி ஃபிட்ஸ், இண்டெம்னிட்டி க்ளெய்ம்ஸ், பிரீமியம் ரீஃபண்ட்ஸ், சரண்டர் வேல்யூ, வழக்குகளால் தாமதப்படுத்தப் பட்ட பணம் ஆகியவை இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் தங்கிவிடுகின்றன. இப்படிக் கோரப்படாத பல கோடிகளில் 82% எல்.ஐ.சி நிறுவனத்தில் உள்ளது. இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவெலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் (IRDAI) ஆணைப்படி, எல்லா இன்ஷூ ரன்ஸ் கம்பெனிகளும் தங்கள் வெப்சைட்டில் கோரப்படாத பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்கின்றன.

கோரப்படாத டிவிடெண்டுகள்/ஷேர்கள்

கம்பெனிகள் தங்கள் லாபத்தில் ஒரு பங்கை டிவிடெண்ட் வாரன்டாக வீட்டு முகவரிக்கு அனுப்பி வந்தன. தற்போது டிவிடெண்டை நேரடியாக நம் வங்கி அக்கவுன்டுக்கு அனுப்புகின்றன. அட்ரஸ் மாற்றம், மெர்ஜர் காரணமாக வங்கிக் கணக்கு மாற்றம், டி.பி. ஐ.டி (DP ID) மாற்றம், முதலீட்டாளரின் மரணம் போன்ற காரணங்களால் டிவிடெண்ட் உரியவரிடம் சேராமல் கம்பெனியில் தங்கிவிடுவது உண்டு. இப்படித் தங்கிய பணம் கம்பெனிகளின் ‘அன்பெய்ட் டிவிடெண்ட்’ அக்கவுன்டுகளில் வைக்கப்படும். ஏழு வருடங்கள் கழித்து அது இன்வெஸ்டர் எஜுகேஷன் அண்ட் புரட்டக் ஷன் ஃபண்ட் (I.E.P.F.) என்ற அரசு நிறுவனத் துக்கு அனுப்பப்பட்டுவிடும். சில சமயங்களில் ஷேர்களும் கோரப்படாதவையாக இந்த நிறுவனத் துக்கு அனுப்பப்பட்டுவிடுகின்றன.

அப்படி ஆகும்பட்சத்தில், ஐ.இ.பி.எஃப் நிறுவனத் துக்கு தகுந்த சான்றுகள் அளித்து ரீஃபண்ட் கேட்க வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதால் ஷேர் சமாதான் போன்ற கம்பெனிகள் நம்மிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு நமது ஷேர் மற்றும் டிவிடெண்டுகளை இந்த அரசு நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தருகின்றன.

தவிர்க்கும் வழிகள்

நம் எதிர்காலத்தை வசதியாக வடிவமைப்பதற் காக நாம் வியர்வை சிந்தி சேர்த்த பணம், நமக்கு உதவாமல் பல இடங்களிலும் முடங்கிக் கிடக்கிறது. இதை எப்படி தவிர்ப்பது?

1. குடும்பத்துக்குத் தெரிவியுங்கள். நாம் ஒவ்வொரு வரும் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து வைப்ப தெல்லாம் நம் குடும்பத்தினரை வசதியாக வாழ வைக்கத்தானே? ஆனால், அதுபற்றிய தகவல்களை அவர்களிடம் கூறாமல் விடுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்? ஆகவே மனைவி, வயது வந்த குழந்தைகள் ஆகியோரிடம் நம் சேமிப்புகள் பற்றிய தகவல்கள் இருக்குமிடம் பற்றித் தெரியப்படுத்த வேண்டும். நம் கூடவே தங்கியிருப்போர் தவிர, வெளியில் இருக்கும் ஒரு நம்பிக்கையான மனிதரிடமும் இதைச் சொல்லி வைத்தல் நல்லது.

2. விவரங்களை அப்டேட் செய்யுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சொத்து விவரங்களை பரிசீலனை செய்து தகவல்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

3. நாமினேஷன் செய்யுங்கள். நம் ஒவ்வொரு சேமிப்புக் கணக்குக்கும் நாமினியை நியமித்தால் நம் மறைவுக்குப் பின் முதலீட்டு நிறுவனங்களில் இருந்து பணம் பெறுவது குடும்பத்தினருக்கு எளிதாக இருக்கும்.

4. உயில் எழுதுங்கள். நம்மிடம் இருக்கும் சொத்துகள் அதிகமா, குறைவா என்பது முக்கியமில்லை. நமது ஒவ்வொரு சொத்தையும் குறிப்பிட்டு உயில் எழுதிவைப்பது, நம் மறைவால் வாடும் குடும்பத்துக்கு மேலதிகக் கவலைகளையும், சுமைகளையும் தராமல் இருக்க உதவும்.

சமீபத்தில் வீடு / வேலை / ஊர் மாற்றம் செய்தவர்கள் தங்கள் பணம் கோரப்படாமல் கிடக்கிறதா என்பதை தங்கள் வங்கி/ மியூச்சுவல் ஃபண்ட்/ இன்ஷூரன்ஸ் கம்பெனி / இ.பி.எஃப்.ஓ போன்றவற்றின் வெப்சைட்டுகளில் இருந்து அறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கலாம்.