பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

இறந்துபோனவரின் நிதி சார்ந்த ஆவணங்கள்..! என்ன செய்ய வேண்டும், ஏன் பாதுகாக்க வேண்டும்?

ஆவணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆவணங்கள்

D O C U M E N T S

ஒருவர் இறந்துபோய்விட்டால் அவரது உடைமைகளை அப்புறப்படுத்திவிடுவது பொதுவான நிகழ்வு. ஆனால், ஒரு சில ஆவணங்கள் உரியவர் இறந்த பின்பும் உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும். இத்தகைய ஆவணங்களை அவரின் குடும்பத்தவர்/ வாரிசுகள் பாதுகாத்து வைப்பது பணப்பலன் தரலாம், சட்டச்சிக்கல் வராமல் தடுக்க உதவலாம். அதற்கு என்னென்ன ஆவணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

பென்ஷன் புத்தகம்

பென்ஷன் பெறத்தக்க அரசுத் துறையில் பணி செய்து ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக்கொண்டிருப்பவருக்கு பென்ஷன் புத்தகம் ஒன்று தரப்பட்டிருக்கும். ஓய்வு பெற்றவர் இறந்துபோகும்போது, அவரின் மனைவி / கணவர் ஃபேமிலி பென்ஷன் பெறத் தகுதியானவர் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், ஃபேமிலி பென்ஷன் பெற அந்தப் புத்தகத்தை கருவூலம் / பென்ஷன் வழங்கும் அலுவலகம் / சம்பளக் கணக்கு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். எனவே, இது பாதுகாக்கப்பட வேண்டும்.

இறந்துபோனவருக்கு கணவர் / மனைவி இல்லாத பட்சத்தில் அவரது தகுதியுள்ள வாரிசுகள், இறந்து போனவர் பணியாற்றிய அலுவலகம் மூலமாக ஃபேமிலி பென்ஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கும் பென்ஷன் புத்தகம் அவசியம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட (25 வயதுக்குக் குறைந்த) வாரிசுகள் ஃபேமிலி பென்ஷன் பெறுவதற்குத் தகுதி உள்ளவர்களாக இருப்பின் முந்தைய வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டிருந்த பென்ஷன் புத்தகத்தை சரண்டர் செய்த பிறகே, அடுத்த வாரிசு ஃபேமிலி பென்ஷன் பெற முடியும். இத்தகைய தருணங்களில் சரண்டர் செய்யும் முன் அதன் ஜெராக்ஸ் நகல் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

ஃபேமிலி பென்ஷன் பெறத் தகுதியான வாரிசு எவருமே இல்லாவிட்டாலும் இறந்துபோனவரின் பென்ஷன் புத்தகத்தைப் பாதுகாத்து வைப்பது நல்லது. ஏனெனில், (ஓய்வு பெற்றபின் அல்லது பணியில் இருக்கும்போதே) இறந்துபோன ஊழியருக்கு முந்தைய காலங்களில் முன்தேதியிட்டு (Retrospectively) நிலுவைகள் வழங்கப் பட்டுள்ளன. அத்தகைய நிகழ்வுகளுக்கு பென்ஷன் புத்தகம் பயன்படும்.

இதற்கெல்லாம் மேலாகத் தமிழக அரசு பென்ஷனர் இறந்துபோனால் குடும்பத்தாருக்கு குடும்பப் பாதுகாப்பு நிதி 50,000 ரூபாய் வழங்குகிறது. இதற்கும் பென்ஷன் புத்தகம் அவசியம்.

இறந்துபோனவரின் நிதி சார்ந்த 
ஆவணங்கள்..! என்ன செய்ய வேண்டும், ஏன் பாதுகாக்க வேண்டும்?

ஏ.டி.எம் கார்டு

இறந்துபோனவரின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பது குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கக் கூடும். அதிலும் குறிப்பாக, பென்ஷன்தாரர் இறந்த பிறகு, அவர்களது ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் எடுத்தால் ஃபேமிலி பென்ஷன் பெறுவது மற்றும் வாழ்நாள் நிலுவைத் தொகை ஆகியவை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்துவதுடன் கருவூலம் மற்றும் வங்கி நடவடிக்கைக்கு உட்பட வைத்துவிடும். இறந்துபோன ஊழியரின் சம்பளக் கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் எடுப்பதும் நடவடிக்கைக்கு உட்படலாம். வங்கியை, கருவூலத்தை, சம்பள அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இறப்புச் சான்று சமர்ப்பித்து பணம் பெறுவதே சரியாக அமையும்.

பான் கார்டு

பான் அட்டையானது வங்கிக் கணக்கு தொடங்குதல் மற்றும் பராமரித்தல், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தல் போன்ற பலவகை நடவடிக்கைகளுக்கு சட்டபூர்வமான ஆவணம். எனவே, வங்கிப் பரிவர்த்தனைகள் முடிவுக்கு வந்து கணக்குகள் மூடப்படும் வரை பான் கார்டு அவசியம். அதுமட்டுமல்லாமல் வருமான வரிக் கணக்கு மறுமதிப்பீட்டுக்கு உட்படக் கூடும். அதாவது, நடப்பு நிதியாண்டுடன் அடுத்த நான்கு ஆண்டு முடிவடையும் வரைகூட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். இறந்து போனவர் அதிகமான வரி செலுத்தியிருந்தால் அவை ரீஃபண்ட் செய்யப்படலாம்.

ஆதார்

ஸ்காலர்ஷிப் தொடங்கி எரிவாயு மானியத் தொகை பெறுதல் வரை அரசின் பல்வேறு நலத்திட்டத்தில் பயன்பெற ஆதார் அவசியமாக உள்ளது. இந்திய தனிப்பட்ட ஆளறி ஆணையம் (UNIQUE IDENTIFICATION AUTHORITY OF INDIA-UIDAI) ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை முடக்கவோ ரத்து செய்யவோ எந்தவொரு நடை முறையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஆதார் வைத்திருப்பவரின் ‘இறப்பை’ பதிவு செய்யவும் சட்டவரைவு இல்லை. இறந்து போன ஒருவரின் ஆதார் எண்ணை வேறு எவரும் பயன் படுத்தி மோசடி செய்வதைத் தவிர்க்கும் வகையில் இறந்து போனவரின் வாரிசுகள் ஆதார் எண்ணை பாதுகாப்புடன் வைத்திருப்பது அவசியமாகிறது.  மோசடி என்று வந்தால் சம்பந்த மில்லாத வாரிசுகளும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.

இந்திய தனிப்பட்ட ஆளரி ஆணையம் (UIDAI)  வலைதளத்தில் சென்று இறந்துபோனவரின் கைரேகை, கருவிழி பற்றிய விவரங்களை லாக் செய்யலாம்.

வாக்காளர் அடையாள அட்டை

இறந்துபோன ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டையை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட வட்டாட்சிய ரிடம் படிவம்-7 மற்றும் இறப்புச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் மோசடிப் பேர்வழிகள் இறந்துபோனவரின் வாக்காளர் அட்டை மூலம் வாக்களிப்பதைத் தடுத்து விடலாம். 

பாஸ்போர்ட்

இறந்துபோனவரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவோ சரண்டர் செய்யவோ வழிவகை செய்யப் படவில்லை. அதே நேரத்தில் இறந்து போனவரின் பாஸ்போர்ட் தானாகவே செயலிழந்துவிடும். இதைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் சில எதிர்பாராத தருணங்களில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

ஓட்டுநர் உரிமம்

பாஸ்போர்ட்டைப் போலவே இறந்து போனவரின் டிரைவிங் லைசென்ஸை சரண்டர் செய்யவோ, ரத்து செய்யவோ விதி வகை இல்லை. ஆனால், வழங்கப் பட்ட லைசென்ஸை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் ரத்து செய்யும் நடைமுறை மாநிலம் எங்கும் உள்ளது. எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று ரத்து செய்யக் கோரலாம். அலுவலகப் பதிவேடுகளில் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதை வாரிசுகள் உறுதி செய்துகொள்ளலாம்.

எனவே, இறந்துபோனவரின் மரணச் சான்றுடன் மேற்கண்ட ஆவணங்களையும் பாதுகாப்பது வாரிசுகளின் கடமை.